சென்னை லோகல் போர்டு சட்டம். குடி அரசு குறிப்புரை - 25.10.1925

Rate this item
(0 votes)

ஸ்ரீமான். வீரையனின் திருத்த மசோதா

1920-ம் வருடத்திய ஸ்தல ஸ்தாபன போர்டு சட்டத்தைத் திருத்தும்படி, ஸ்ரீமான். வீரையன் எம்.எல்.ஸி. கீழ்கண்ட மசோதாவை அடுத்த சட்டசபையில் கொண்டு வரப்போவதாகவும், அதை எல்லா அங்கத்தினர்களும் ஆதரிக்க வேண்டுமென்றும் அறிவிக்கிறார்.

சென்னை ஸ்தல ஸ்தாபன போர்டு சட்ட திருத்த மசோதா

1920-ம் வருடத்திய சென்னை ஸ்தல ஸ்தாபன போர்டு சட்டத்தை அடியிற்கண்டவாறு மாற்றவேண்டும்.

(1) இந்தச் சட்டமானது 1925-ம் வருடத்திய சென்னை லோகல் போர்டு திருத்தப்பட்ட சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) 157-வது பிரிவுக்குப் பின் 17(ஏ) எந்த பொது ரஸ்தா, தெரு அல்லது பாதை வழியாக நடந்து போகிற அல்லது அதைச் சட்டப் பிரகாரம் உபயோகிக்கிற எந்த நபரையும் எவரும் தடை செய்யக்கூடாது என்னும் புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்படவேண்டும்.

(3)124 -1-பிரிவில் “குடியிருப்பவர்களின் சௌகரியம்” என்னும் வாசகத்திற்கு அடுத்தாற்போல் “மேற்கண்ட காரணங்களுக்காக அவை ஜாதி மத வித்தியாசமின்றி, சகல ஜனங்களாலும் தாராளமாய் உபயோகிக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்” என்னும் வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.

(4)167- பிரிவிலுள்ள, “பொது மார்க்கட்டுகள்” என்ற வார்த்தைகளுக்கு அடுத்தாற்போல், “அந்த மார்க்கட்டுகளை சகல ஜனங்களும் ஜாதி, மத வித்தியாசமின்றி தாராளமாய் உபயோகப்படுத்தலாம்” என்னும் வார்த்தைகள் சேர்க்கப்படவேண்டும்.

8-வது ஷெடியூலில்

(1) 123(1)-வது பிரிவில் குறிக்கப்பட்டிருக்கிற தண்டனைக்குப் பின் “எந்த ஜாதி, மதம் வகுப்பு முதலியவற்றைச் சேர்ந்த எந்த ஆளையானாலும் சரி தடை செய்தால் அபராதம் ரூ.50” என்று சேர்த்துக் கொள்ளவேண்டும்.

(2) 157-வது பிரிவில் குறிக்கப்பட்ட தண்டனைக்குப்பின் 157(ஏ) “எந்த பொது ரஸ்தா, தெரு அல்லது பாதையை உபயோகிக்கிற எந்த நபரையாவது, சட்ட விரோதமாய் தடை செய்தால், அபராதம் ரூ.50” என்று சேர்த்துக் கொள்ளவேண்டும்.

(3) 166(1)-வது பிரிவில் ஏற்படுத்தியிருக்கிற தண்டனைக்குப்பின் “எந்த பொது மார்க்கட்டையாவது உபயோகிக்கிற எந்த ஆளையாவது சட்டத்துக்கு விரோதமாகத் தடை செய்தால் அபராதம் ரூ.100” என்று சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எந்த நகரம் அல்லது கிராமத்திலுள்ள பொது ரஸ்தா, தெரு அல்லது பாதை வழியாக எந்த வகுப்பைச் சேர்ந்த ஆட்களும் நடந்து போவதைப்பற்றி, தடையொன்றுமில்லையென்றும், மேலும் எந்த பொது ஆபீஸ் கட்டிடம், கிணறு, குளம் பொதுஜன வேலை நடக்கிற கட்டிடங்கள் முதலியவைகளை ஏனைய ஜாதி இந்துக்கள் எந்தவிதமாய் உபயோகிக் கிறார்களோ, அதைப்போலவே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும், அவைகளை உபயோகித்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லையென்றும், சென்னை சட்ட சபையில் 1924 -ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே தீர்மானத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு சென்ற செப்டம்பர் 25-ந்தேதி கவர்ன்மெண்டார் ஓர் உத்திரவு பிறப்பித்துள்ளார்கள். அந்த உத்திரவு ஸ்தலஸ்தாபன போர்டு தலைவர்களுக்கெல்லாம் அனுப்பப்பட்டிருக்கிறது. எனினும், அதனால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. ஆகவே அந்த உத்திரவை சட்டரூபமாக்கி ஊர்ஜிதப்படுத்தவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது.

குறிப்பு:-

ஸ்ரீமான். வீரையனின் சென்னை லோகல்போர்டு சட்டத்திருத்த மசோதாவை மேலே வெளியிட்டிருக்கிறோம். இம்மசோதா, இம்மாகாணத்திற்கு எவ்வளவு அவசியமென்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். நமது தேசமக்களில் ஒரு சாராரை ஒடுக்கப்பட்டவர்களென ஒதுக்கி வைத்து, அவர்களுக்கு சமத்வம் காட்டாது, அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோமென எதைப்பற்றியெல்லாமோ பேசுவது வெறும் ஜம்பமேயன்றி வேறல்ல. 1924-ம் வருடம் ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி நடந்த சென்னை சட்டசபையில் பொது ரஸ்தா, வீதி, பாதை, குளங்கள், கிணறுகள் முதலியவைகளை எல்லா ஜாதியாரும், ஜாதி மத பேதமின்றி அநுபவித்துக்கொள்ளலாம் என ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தண்டனையின் போக்கு காட்டப்படாததால், அத்தீர்மானம் சாரமற்றதாகிவிட்டது. அதனை ஊர்ஜிதத்துக்குக் கொண்டுவர வேண்டுமாயின் இத்தகைய திருத்தம் முற்றிலும் அவசியமேயாகும். இம்மசோதாவை ஒத்துழைப்பை விரும்பும் சட்டசபை மெம்பர்கள் யாவரும் ஏகமனதுடன் ஆதரிப்பார்களென எதிர்பார்க்கிறோம்.

குடி அரசு குறிப்புரை - 25.10.1925

Read 20 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.