கஞ்சீவரம் மகாநாட்டுத் தலைவர். குடி அரசு துணைத் தலையங்கம் - 13.09.1925

Rate this item
(0 votes)

கஞ்சீவரத்தில் நடைபெறப்போகும் தமிழ்மாகாண மகாநாட்டிற்கு தலைவர் தெரிந்தெடுப்பதில் பலவிதமான அபிப்பிராயங்களும் வதந்திகளும் உலவி வருகின்றன. முதன்முதலாக ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவை யாம் சிபார்சு செய்தோம். அதை அவர் மறுத்துவிட்டதோடு நில்லாமல் பொது ஜனங்களுக்கு, தன்னை யாரும் சிபார்சு செய்யக்கூடாது என புத்திமதியும் கூறிவிட்டார். இப்படி அவர் புத்திமதி கூறியது தன்னைப் பற்றி அதிகமாய் நினைத்துக்கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது.

ஸ்ரீமான் தங்கப் பெருமாள்பிள்ளை அவர்களைத் தலைவராகத் தெரிந்தெடுக்கக்கூடுமென்று வதந்தி உலவுவதாக ஜஸ்டிஸ் பத்திரிகையும், திராவிடன் பத்திரிகையும் எழுதியதோடு அதற்குச் சில காரணங்களையும் கூறுகின்றன. இப்படி அப்பத்திரிகைகள் எழுதுவதற்குக் காரணம் ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளை அவர்களை இப்பத்திரிகைகள் நன்கு அறிந்து கொள்ளாததுதான் என்று சொல்லுவோம். ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளை அவர்கள் குருகுலப் போராட்டத்தில் ஸ்ரீமான் அய்யரை ஆதரித்தார் என்னும் கூற்றுக்குச் சிறிதும் ஆதாரமில்லை. தமிழ்நாட்டிலுள்ள எவரையும் விட நாம் அவரிடத்தில் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளோம்.

சில பிராமணரல்லாத பெரியோர் என்று சொல்லப் படுகின்றவர்களைப் போல் பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டுகிற குணம் அவரிடம் சிறிதும் கிடையாது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் அவருக்குச் சிறிது அபிப்பிராய பேதம் உண்டென்பதை யாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். அதற்காக பிள்ளை அவர்களைச் சில பிராமணர்கள் சூழ்ந்து போற்றுவதும் உண்மையே. ஆனால் தம்முடைய அபிப்பிராயம் மற்ற பிராமணரல்லாத தலைவர்கள் என்று சொல்லப்படுவோரில் சிலரைப் போன்று, பிராமணரின் போற்றுதலுக்காக ஏற்படுத்திக் கொண்டதல்ல.

பிராமணரல்லாத தலைவர்கள் என்று சொல்லப்படுவோரிலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி யாதொரு அபிப்பிராயமும் கூறாமல் மவுனம் சாதித்து இரு சாராரையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என்பதை திராவிடன், ஜஸ்டிஸ் பத்திரிகைகள் கவனித்தனவா? எவ்வளவோ அனுபவம் பெற்ற போழ்திலும் ஜஸ்டிஸ், திராவிடன் பத்திரிகைகளுக்கு உறுதியான தேசபக்தர்களை அறிந்துகொள்வதற்குப் போதிய ஆதாரம் இல்லையென்றே சொல்லுவோம். இதை ஒப்புக்கொள்ளாது அவை மறுக்குமானால் பிராமணப் பத்திரிகைகள் போல் சமயத்திற்கு ஏற்றவிதமாய் ‘குருட்டுக்கண்ணனை செந்தாமரைக்கண்ணன் என்றும்’ சுத்த மதியீனனைத் தத்துவஞானி என்றும், எழுதித் தங்கட்சிக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்ளுகின்ற இழிகுணத்தைத் தாமும் அநுசரிப்பதாகவாவது ஒப்புக்கொள்ளவேண்டும்.

ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளை அவர்கள் நமது பத்திரிகையின் துணை ஆசிரியர் பதவியினின்றும் விலகிக்கொண்டதை சில விஷமக்கார நிருபர்களும் பிராமணப் பத்திரிகைகளும் தங்களுக்கு அநுகூல மாய் உபயோகப்படுத்திக் கொள்ளுவதற்காக தப்புக் கற்பனைகள் செய்து விட்டதால் பொதுஜனங்கள் கெட்டெண்ணம் கொண்டு விடமாட்டார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். ஸ்ரீமான் பிள்ளை அவர்களை அக்கிராசனராக அடையும் பாக்கியம் கஞ்சீவரம் மகாநாட்டிற்கு ஏற்படுமாயின் அதைத் தமிழ் நாட்டின் தவப்பயன் என்றுதான் சொல்லுவோம்.

ஸ்ரீமான் தங்கப் பெருமாள்பிள்ளை போலும் ஸ்ரீமான் மாய வரம் எஸ்.ராமநாதனைப் போலும் தங்கள் அபிப்பிராயங்களை தைரியமாய் வெளியிடும் தலைவர்கள் ஒருவருமில்லை. தாங்கள் நன்கு அறிந்துகொள்ளாத ஒருவரைப் பற்றி தாங்கள் அறிந்ததாக எண்ணி அவசரப்பட்டு புகழ்ந்தோ இகழ்ந்தோ எழுதுவது உண்மைப் பத்திரிகைகளின் கடமை அல்ல என்பதை யாம் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் - 13.09.1925

Read 32 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.