ஜாதிமுறைக்கான கடவுளின் அங்கீகாரமே பகவத் கீதையும் கிருஷ்ண பஜனையும் – V விடுதலை – 5.11.1948

Rate this item
(0 votes)

நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! பார்ப்பனர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள் என்பதை? அவர்கள் பகவத் கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும், அதைப் பற்றி பெருமையோடு எங்கும் பேசி வருவதும் உங்களுக்கு தெரியாததல்லவே! இது ஏன் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா? கிருஷ்ணன் கீதையின் மூலம் நாலு சாதி முறை உண்டென்பதையும்; அதில் பார்ப்பனர்களே முதல் சாதியினர் என்பதையும்; கடவுளுக்கும் பெரியவர் பார்ப்பனர் என்ற தத்துவத்தையும் கூறியிருப்பதோடு, எப்படியும் அதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு உண்டு – வர்ணதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று ஒப்புக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்பதை உணருங்கள்!

வேதாந்திகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் கீதையில் 1000 வரி தெரிந்திருப்பது ஏன், குறளில் 2 வரிகூடத் தெரியாதது ஏன் என்பதையும்; காவி வேட்டி கட்டிக் கொண்டு சில திராவிடர்கள்கூட கீதைப் பிரச்சாரம் செய்து வருவது ஏன் என்பதையும் யோசித்துப் பாருங்கள்! கீதை எவ்வளவு அக்கிரமத்திற்கும் முக்காடு போட்டுவிடும் – காவியுடையைப் போல். ஏன்? கீதைக்கு தலைவனான கிருஷ்ணனே – அக்கிரமத்தின் தலைவனான காரணத்தால்.

தோழர்களே! நாம் எதிர்க்கும் நான்கு சாதி முறையைக் கடவுளின் பேரால் வலியுறுத்தத்தான் கீதையும், கிருஷ்ண பஜனையும் என்பது நினைவிருக்கட்டும். கீதை படிப்பவர்கள் எத்தகைய தர்மத்தையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், "பகவானே இதைச் செய்துள்ள போது சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம்?' என்றோ, "எல்லாம் பகவான் செயல் என்றோ' – "நான் ஏன் பார்ப்பான் என்று கிருஷ்ணனிடம் கேட்டுத் தெரிந்துகொள்' என்றோ சுலபமாகப் பதில் கூறிவிடலாம். ஆனால், குறளைப் படித்தாலோ – தர்மத்தின்படி நடக்க வேண்டும்; பித்தலாட்டம் செய்ய முடியாது; பித்தலாட்டம் செய்பவரைக் கண்டாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பான கருத்துகள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியதுதான். அத்தகைய மாற்றத்திற்கு இடந்தருவதுதான் குறள். குறளை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது எனலாம். காய்கறி, தானியம் இவை அபரிமிதமாகக் கிடைக்குமானால், மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது? முகமது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துகளைக் குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காண முடியாது. அது, மநு தர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்றே திடமாகச் சொல்லலாம். மநுதர்ம சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துகளைக் கொண்ட குறள் அடிகளை ஏராளமாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக் காட்டலாம்.

மனித சமுதாயத்திற்கே நல்வழி காட்டி, நன்னெறியூட்டி, நற்பண்புகளையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள். எனவேதான், அதன் ஆசிரியரைக் கூட சில மதத்தினர் "தம்மவர்' என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார்கள். ஜைனர் தம்மவர் என்று கூறி, அவரை மொட்டைத் தலையராக்கிக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரைத் தம்மவர் என்று கூறி, ஜடாமுடியுடன் விபூதிப் பட்டையுடன் காட்டுகிறார்கள். அவரோ எம்மதமும் இல்லாதவராகவே தோன்றுகிறார். ஒரு இடத்தில், "மயிரும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை; மொட்டையும் அடித்துக் கொள்ள வேண்டியதில்லை – யோக்கியனாய் இருக்க வேண்டுமானால்' என்று கூறி இருக்கிறார். அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக்கொண்டு, வடகலை நாமம் போட்டுக் காட்டுகிறார்கள். அவரை ஆழ்வார்களில் ஒருவராகவும் ஆக்கி விடுகிறார்கள். அவருக்கு வடகலை நாமம் போட்டது மகா மகாக் கொலை பாதகத்தனமாகும்.

திருவள்ளுவர் தவிர்த்த வேறு யாரையும் மற்ற மதத்தவர் இம்மாதிரி மதிப்பதில்லையே! இதிலிருந்தே தெரியவில்லையா – குறளில் காணப்படும் திராவிடப் பண்பு எத்தகையது என்று! இப்படிப்பட்ட திருக்குறளை விரும்புவதை விட்டு நம் நாட்டவர்கள் ராமாயணத்தை வைத்துக் கொண்டு கூத்தடிக்கிறார்களே, நியாயமா? உண்மைத் திராவிடன் தீட்டிய திருக்குறள் குப்பையிலே கிடக்க, திராவிடத் துரோகி தீட்டிய ராமாயணமும், ஆரியர் தீட்டிய கீதையும் அதிகாரத்தில் இருந்து வருகின்றன.

குறள், இந்து மதக் கண்டனப் புத்தகம் என்பதையும்; அது சர்வ மதத்திலுமுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள "மனித தர்ம நூல்' என்பதையும் எல்லோரும் உணர வேண்டும். ஒவ்வொருவனும், "நான் இந்துவல்ல; திராவிடனே – திருக்குறள் விரும்பியே' என்று கூறிக்கொள்வதில் பெருமையடைய வேண்டும்; விபூதியையும், நாமத்தையும் விட்டொழிக்க வேண்டும்; புராணங்களைப் படிக்கக் கூடாது. "நீ என்ன மதம்?' என்றால் – "குறள்மதம்' "மனித தர்ம மதம்' என்று சொல்லப் பழக வேண்டும். சுய அறிவே பிரதானம் என்ற, "வாலறிவன் நற்றாள்' என்ற வள்ளுவர் கருத்துப்படி அனைவரும் நடக்க வேண்டும். உருவ வழிபாட்டை ஒதுக்கிவிட வேண்டும்.

– முற்றும்

விடுதலை – 5.11.1948

 
Read 27 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.