அந்தணர்ப்பேட்டை. குடி அரசு கட்டுரை - 09.08.1925

Rate this item
(0 votes)

அந்தணர்ப்பேட்டை என்பது நாகப்பட்டினத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். அதில் தொழிலாளர்கள் வசிப்பதோடு மகம்மதியர்களும் மற்றும் சிலரும் வசிக்கின்றனர். அவ்வூரில் விநாயகர் கதர் நூல் கைநெசவுசாலை என்ற கதர் உற்பத்தி சாலை ஒன்று இருக்கின்றது. அதன் இரண்டாம் ஆண்டு விழாவிற்கு நான் ஸ்ரீமான் சாரநாதனுடன் சென்றிருந்தேன். ஆண்டு விழாவின் ஊர்வலத்தையும் அதில் வாசித்த உபசாரப் பத்திரங்களையும் இங்கு எடுத்துச்சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் இச்சிறு கிராமத்தில் உள்ள ஜனங்களுக்கு கதரின் மீதுள்ள ஆர்வத் தைக் காட்டுவதற்கு இது குறிக்க வேண்டியதாயிற்று. ஆண்டு விழாவில் அதன் நிர்வாகிகளால் வாசிக்கப்பட்ட கதர் உற்பத்தி சாலையின் யாதாஸ்திலிருந்து நான் தெரிந்துகொண்ட சிலவற்றைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

அவ்வூர் பிரமுகர்கள் பங்கு முறையில் மூவாயிரம் ரூபாய் சேர்த்து வியாபார முறையில் நடத்தி வருகிறார்கள். இதற்காக கதர்ச்சாலையாரின் இராட்டினம் நாற்பத்தேழும், கூலிக்கு நூற்பவர்கள் இராட்டினம் நாற்பத்தைந்தும் ஆக இராட்டினங்கள் தொண்ணூற்றிரண்டு சுழலுகின்றன. ஆறு தறிகளுக்கும் பூரா வேலை கொடுக்கப்பட்டு வருகின்றது. பங்குக்காரர்களுக்கு இலாபமும் நூற்றுக்கு ஆறு வட்டிவீதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கியமாக ஸ்ரீமான்கள் சபாபதி முதலியார், விஜயராகவலு நாயுடு, விநாயகமூர்த்தி முதலியார் இன்னும் சிலரும் இடைவிடாது உழைத்து வருகின்றனர். இதில் உற்பத்தியாகும் கதர் மெல்லியதாகவும், கெட்டியாகவும் இருக்கிறது. மெல்லிய கதர் வேண்டியவர்களின் ஆசையை இக்கதர்ச்சாலை திருப்தி செய்யக்கூடும் எனக் கருதுகிறேன். இங்கு நூல் நூற்பவர்களுக்கு ஒரு ராத்தலுக்கு பன்னிரண்டு அணா கூலி கொடுக்கப்படுகின்றது.

பெரும்பாலும் மகம்மதிய சகோதரிகளே இங்கு நூல் நூற்கின்றனர். இது விஷயமாய்ப் பொது ஜனங்களுக்குச் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். நமது நாட்டில் கதர் விர்த்தியாக வேண்டுமானால், அந்த அந்த ஊரில் உள்ள பிரமுகர்கள் ஒன்று கூடி பங்கு முறையில் கைப்பணம் சேர்த்து தங்களுக்கு வேண்டிய கதரை அதில் உற்பத்தி செய்வித்து, தாங்கள் அதைக் கட்டிக் கொள்வது என் கிற பழக்கம் வந்தால் கதர் இயக்கம் மகாத்மாவின் கோரிக்கைப்படி நமது நாட் டில் வெற்றியுறும். இம்மாதிரி செய்வதில் நமக்கு என்ன கஷ்டமிருக்கிறது? வருஷத்தில் பத்து ரூபாய்க்குக் குறைவில்லாமல் துணி வாங்கக்கூடிய குடும்பங்கள் ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவோ இருக்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் ஒரு வருஷச் செலவிற்கு உண்டான துணிக் கிரயத்தை அட்வான்ஸ் கொடுப்பதுபோல் நினைத்து அதை முதலாக வைத்து அதைக்கொண்டு உற்பத்தி செய்வதும், தங்களுக்கு வேண்டிய துணிகளை அங்கேயே வாங்கிக் கொள்வதுமாக நடைபெற்று வருமாகில் விலையைப் பற்றியோ, துணியின் நயத்தைப் பற்றியோ கொஞ்சமும் அதிருப்தி ஏற்பட இடம் இருக்காது.

உதாரணமாக, கானாடுகாத்தானில் உள்ள நாட்டுக் கோட்டைச் செட்டியார்களில் அநேகர் ஒன்றுகூடி கூட்டுறவு பங்கு முறையில் பணம் சேர்த்துத் தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் செய்து வருகின்றனர். ஆனால் அது மின்சார விளக்குப் போடவும், ஐஸ் உற்பத்தி செய்யவும், இன்னும் இதுபோன்ற மேனாட்டு நாகரீகச் செயல்களுக்கு உபயோகப் படுகிறதேயன்றி தேச நன்மைக்கோ, ஏழைகள் பிழைப்புக்கோ உற்றதல்ல. இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளவேண்டுவது தங்கள் தங்களுக்கு வேண்டிய தேவைகளைத் தங்கள் தங்கள் ஊரிலேயே தங்கள் தங்கள் கூட்டுறவினால் செய்து கொள்ளவேண்டும் என்பதுதான். அந்தணர்ப்பேட்டையில் கதர் விஷயத்தில் ஏற்பட்ட கூட்டுறவு முறையானது முனிசிபாலிட்டி, யூனியன் முதலிய ஸ்தல ஸ்தாபன முறை அல்லாமல் தங்களுக்குள்ளாகவே பஞ்சாயத்து முறை வைத்து தாங்களே வரிவசூல் செய்வதுடன் ஊர் சுகாதாரம் முதலிய விஷயங்களையும் தாங்களே நடத்தி வருகிறார்கள். “குடிநூல்”, “குடி ஆட்சி” என்கிற பதங்களுக்குள்ள தத்துவங்கள் இதுதான்.

‘குடி’ என்கிற பதத்தின் பொருளே அங்குள்ள குடிஜனங்களைத் தான் குறிக்கிறது. கிராமங்கள் ஒழுங்குபட்டுப் படிப்படியாகத்தான் தேசம் ஒழுங்குபடவேண்டும். ஆகையினால் ஒவ்வொரு கிராமத்தாரும் தங்கள் தங்கள் ஊரில் கூட்டுறவு முறையில் ஒவ்வொருவரும் கதர் உற்பத்திக்கு வேண்டிய முயற்சி செய்தல் அவசியமாகும். ஆரம்பத்திலேயே பெரிதாக ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்து கஷ்டப்படாமல் கூடிய வரையில் சீக்கிரத்தில் ஆரம்பிக்கத் தகுந்தாற்போல் எவ்வளவு சிறிய மூலதனத்தைக் கொண்டானாலும் முதலில் ஆரம்பிக்க வேண்டியது, பிறகு தானாகவே எல்லாம் கைகூடிவரும்.

குடி அரசு கட்டுரை - 09.08.1925

 
Read 32 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.