ஒரு கோடி ரூபாயும், இருபத்தோரு நாள் உண்ணாவிரதமும் முப்பதினாயிரம் பேர் சிறைவாசமும். குடி அரசு தலையங்கம் - 09.08.1925

Rate this item
(0 votes)

இந்தியாவானது அந்நிய ஆட்சிக்குட்பட்டு அடிமைத்தன்மை அடைந்து அவதிப்பட ஆரம்பித்தக் காலமுதல் இதுவரையிலும் விடுதலை பெறுவதற்காக மகாத்மாவின் காலத்தில் கொடுத்த விலைபோல் ஒரு பொழுதும் கொடுத்திராதென்றே நினைக்கிறோம். ஆனால், நமது தேசத்திற்கு மாத்திரம் இன்னமும் விடுதலை பெறும் காலம் வரவில்லையென்றே சொல்ல வேண்டும். மூன்று மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தும், மாதம் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம், ஐம்பதினாயிரம் ரூபாய் வரும்படி உள்ள வக்கீல்கள் உள்பட சுமார் ஐநூறு பேர் தங்கள் தொழிலை நிறுத்தி தேசத் தொண்டில் இறங்கியும், அரசபோகத்தில் இருந்தவர்கள் முதற்கொண்டு ஜமீன்தார்கள், பிரபுக்கள், வியாபாரிகள் உள்பட ஏழைகள் வரை முப்பதி னாயிரம் பேர் சிறைக்குச் சென்றும் மகாத்மாவே இரண்டு வருடங்கள் சிறை யில் வதிந்தும் சிறையினின்று வெளிப்போந்து இருபத்தொருநாள் உண்ணா விரதமிருந்தும் இந்தியா சுயராஜ்யம் அடையவில்லை என்று சொன்னால் இனி எப்படி, எப்பொழுது, எவரால் விடுதலை அடையமுடியும்? இனி மறுபடியும் இந்தியா சுயராஜ்யமடைய நாம் பாடுபட வேண்டுமானால் முன் அனுபவங்களை ஆதாரமாக வைத்து அவற்றிலுள்ள பிழைகளைத் திருத்தி யும், ஏன் நமக்கு சுயராஜ்யம் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கண்டு பிடித்தும் அதற்கு வேண்டிய முறைகளைக் கையாள வேண்டுமே அல்லாமல் வீணாக இடித்த மாவையே இடித்துக் கொண்டிருப்பது பயித்தியக்காரத் தனமேயாகும். மகாத்மா காந்தி “ஸ்டேட்ஸ்மென்” பத்திரிகைக்கு எழுதிய பதிலில் ஒத்துழையாமை இயக்கம் தோல்வி உற்றதற்குத் தகுந்த காரணத்தைக் காட்டியிருக்கிறார். “படித்த வகுப்பார் நான் சொல்லுகிறபடி கேட்பார்களே யானால் இப்பொழுதே ஒத்துழையாமைத் திட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்து சித்தி பெறச் செய்துவிடுவேன்” என்று சொல்லி யிருக்கிறார். இதிலிருந்தே இவ்வளவு ரூபாயும், இவ்வளவு தியாகமும், இவ்வளவு பேர் சிறை சென்றதும், மகாத்மா சிறையில் வதிந்ததும், உண்ணா விரதமிருந்ததும் இப்படித்த வகுப்பினராலேயே பாழடைந்து விட்டதென விளங்கவில்லையா? அஃதோடுமாத்திரம் அல்லாமல் எவ்வளவு பெரிய தத்துவத்திற்காக வசூலிக்கப்பட்ட பணமும், செய்யப்பட்ட தியாகங்களும் சிலர் சட்டசபைக் கும், முனிசிபாலிட்டி, தாலுகா போர்டிற்குப் போவதற்கும், சிலர் மேயர் ஆவதற்கும் அது உதவினதோடு அல்லாமல் விபசாரத்தன்மை ( Immoral ) என்று சொல்லத் தகுந்த மாதிரி, மேடைகளுக்கு வரும் போது மாத்திரம் கதர் உடுத்தி வந்தால் பெரிய காங்கிரஸ்காரனும் தேச பக்தனும் ஆகிவிடலாம் என்ற தீர்மானத்திற்கு விடுதலைச் சபையாகிய காங்கிரஸில் மகாத்மா காந்தியே இடம் கொடுக்கும்படி வந்து விட்டதென்றால் இனி மறுபடியும் பணம் கொடுப்பதும் மக்கள் தியாகம் செய்வதும் என்பது சுலபத் தில் ஜனங் களிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய காரியமா? ராவணன், இரண்யன் போன்ற பலாஷ்டியர்கள் அருமையாய் செய்த தவத்தின் பலனையும், அற்புதமான கல்வி அறிவையும் - சீதையைக் கற்பழிக்கவும், தன்னையே தெய்வமெனக் கொள்ளவும் முறையே உபயோகப்படுத்திக் கொண்டது போல் மக்களின் தியாகமும், அறிவும் உபயோகப்படுத்தப் படாமல் எவ்வகையிலும் சந்தேக மற்றதும், பாமர ஜனங்களுக்கு நம்பிக்கை உள்ளதும், யோக்கியமானவர் களுடைய தியாகமே தேவை உள்ளதாகவும் அடிக்கடி மாறுபாடுபடக் கூடாத துமான ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டு அத்திட்டத்திற்கு ஒத்த வர்களை மாத்திரம் அதில் சேர்த்துக் கொண்டு படித்த வகுப்பினர் எனப் படுவோரை விலக்கி, பலனைப்பற்றி பயப்படாமல் நடத்தக் கூடிய காலம் என்று மகாத்மாவுக்கு வருகிறதோ, அன்றுதான் இந்தியாவின் ஏழை மக்களுக்கு விடுதலை ஏற்படும்.

குடி அரசு தலையங்கம் - 09.08.1925

Read 14 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.