மலையாளச் சம்பிரதாயம். குடி அரசு கட்டுரை - 02.08.1925

Rate this item
(0 votes)

“கேரளம் வானர வாசாரம்” என்றவோர் இழிச்சொல் இந்நாட்டின் வழக்கத்திலுண்டு. இக்கேரளத்தை நேரில் கண்டு பழகும் பாக்கியம் எனக்குச் சென்றவாண்டில் கிடைத்தது. ஆங்கு நான் கண்டும் கேட்டவைகளில் சில வற்றைக் கீழே குறிப்பிடுகிறேன்.

நீர் நில வளப்பமுள்ள நாடுகளில் மலையாளம் முதன்மையானது. தென்னை, கமுகு, மா, பலா, முந்திரி, வாழை முதலியனவும் மரவள்ளிக் கிழங்கும், நெல்லும் ஏராளமாயுண்டு. வருடத்தில் 6 மாதம் நல்ல மழை பெய் கிறது. இயற்கை தேவியின் வனப்பை அந்நாட்டில் தான் கண்டுகளிக்க வேண்டும். ஆண்களும், பெண்களும் அதி சௌந்திரியமுள்ளவர்கள். நகரங் களிலும் கிராமங்களிலும் வீடுகள் விட்டு விட்டு விசாலமாகவே இருக்கின்றன.

மலையாளிகள் மிகச் சிக்கனமுள்ளவர்கள். ஆடம்பர வாழ்க்கை அவர்களிடமில்லை. ஆடவருக்கும், பெண்களுக்கும் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே ஆடையாகும். பெண்கள் தங்கள் மார்பை மூடுவதை நாகரிகமென்று கருதுவதில்லை. அவர்கள் உணவும் மிகச் சிக்கனமானதே. தமிழரைப்போல் பற்பல சாம்பார் தினுசுகளும், வெகு பல பொறியல்களும் அவர்களுக்குத் தேவையில்லை. வெந்த பருக்கையை, கஞ்சியைத் திருவலிட்டும் ஆனந்தமாய்க் குடிப்பார்கள்.

உணவிலும், உடுப்பிலும் மட்டும் சிக்கனமல்ல. அவர்கள் பேசும் பேச்சிலும் சிக்கனமுடையவர்களே. வார்த்தையை அதிகமாகச் செலவழிக்க மாட்டார்கள். பற்பல விஷயங்களையும் கைவிரல் சாடையாலும் கண்களின் மாற்றத்தாலும் முகவாய்க் கட்டையின் அசைவாலும் ஒருவர்க்கொருவர் அறிவித்துக்கொள்வார்கள்.

சிக்கனம் இவ்வளவுடன் நிற்கவில்லை. கல்யாணத்திலும் அவர்கள் சிக்கனம் காட்டுவார்கள். அண்ணன் தம்பிகள் இரண்டு மூன்று பேர் ஒன்றாகச் சேர்ந்து பாண்டவரைப்போல் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளு கிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியே ஒவ்வொரு மனைவியுடனிருந் தால் சந்ததியும் செலவும் அதிகமாகவிடுமெனவஞ்சி இச்சிக்கன முறையைக் கையாளுகிறார்கள்.

கல்யாணத்திலும் இரண்டு வகையுண்டு. ஒன்று முறைப்படி செய்யப் படும் விவாகம். மற்றொன்று முறையில்லாச் சம்பந்தம். நாயர் பெண்கள் நம்பூதிரியென்னும் பிராமணர்களைச் சம்பந்தம் செய்து கொள்வதிலே பெருமை கொள்ளுகிறார்கள். இப்பிராமண வகுப்பாரின் ஜனசங்கை மிகவும் சொற்பம். சம்பந்தம் செய்து கொள்ளும் நாயர்ப் பெண்டீர்களின் சங்கையோ அதிகம். இக்காரணத்தால் ஒவ்வொரு நம்பூதிரிக்கு நாலைந்து பெண்கள் சம்பந்தப்பட வேண்டியதாகிறது.

நம்பூதிரிகள் செய்த பாக்கியமே பாக்கியம். பிறந்தால் கேரளத்தில் நம்பூதிரியாய்ப் பிறக்கவேண்டும். இல்லையேல் இம்மானிடப் பிறவியெடுப் பதில் சிறப்பில்லை. நம்பூதிரி சாட்சாத் சச்சிதானந்த சொரூபியாய் விளங்குகிறார். அவருக்கு இருக்கும் மதிப்பும், வந்தனை வழிபாடுகளும் வேறெந்த மானிடப் பிறவிக்கும் கிடையாது.

முறைப்படி ஒரு கணவனைப் பெற்ற நாயர்ப் பெண்ணும், நம்பூதிரி யைக் கலப்பதற்குப் பேராவலுடையவளாயிருக்கிறாள். மகாபாரதத்திலும், புராணங்களிலும் வருணிக்கப்பட்டுள்ள கிருஷ்ணனைக் காணுவதற்காக கோபிகள் தவஞ்செய்தது போல், நாயர்ப் பெண்களிற் பெரும்பாலர் நம்பூதிரி களின் சம்பந்தத்துக்காகத் தவஞ் செய்து வருகிறார்கள்.

இம்மோகத்துக்கு நாயர் வகுப்பில் பெண்கள் மட்டுமல்ல பாத்திர மானவர்கள். ஒரு நம்பூதிரி ஒரு நாயரைப் பார்த்து “உன் பெண்சாதி நல்ல அழகுடையவளாயிருக்கிறாள்; நாளைக்கு உன் வீட்டுக்கு வருகிறேன்” என்று சொல்லி விட்டால் நாயருக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். தேவனே பிரசன்னமாகி இத்திருவாக்கைப் பகர்ந்ததுபோல் எண்ணுவான். ஓடோடியும் வீடு செல்வான். தன் பெண்சாதியிடம் நம்பூதிரித் தம்பிரானுடைய திருமன சைத் தெரிவிப்பான். அவளுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கோ அளவிராது. உடனே வீட்டை அலங்கரிப்பாள், விளக்குவாள், பெறுக்குவாள் தன்னாபர ணாதிகளைப் பூட்டிச் சிங்காரித்துக் கொள்வாள். நம்பூதிரித் திருமேனியுடைய வரவை எதிர் நோக்கியிருப்பாள். (தொடரும்)

குடி அரசு கட்டுரை - 02.08.1925

சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதிய கட்டுரை.

Read 44 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.