நவரத்தினம். குடி அரசு கட்டுரை - 02.08.1925

Rate this item
(0 votes)

சாதிக்கர்வமும், மூடநம்பிக்கையும் இந்தியர்களில் பிராமண சகோதரரிடமாத்திரம் இருப்பதாக எண்ணுவது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென்போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் சாதியார் என்போரிடத்திலிருந்துதான் கற்றுக்கொண்டவர்கள்.

2. பிராமணர்களும், அவர்களைப்போல் நடிப்பவர்களும் தங்கள் பெண்கள் விதவை ஆகிவிட்டால் பெரும்பாலும் அவர்களை விகாரப்படுத்த வேண்டுமென்ற எண்ணங்கொண்டே, கட்டாயப்படுத்தி மொட்டையடிப் பதும், நகைகளைக் கழற்றிவிடுவதும், வெள்ளைத்துணி கொடுப்பதும், அரைவயிறு சாப்பாடு போடுவதுமான கொடுமைகளைச் செய்து வருகிறார் கள். ஆனால், இவர்களுக்கடங்காத சில ஸ்திரீகள் வயது சென்றவர்களாகியும் மொட்டையடித்துக் கொள்ளாமலும், நகைகள் போட்டுக்கொண்டும், காஞ்சிபுரம், கொரநாடு முதலிய ஊர்களினின்றும் வரும் பட்டுப்புடவைகளைக் கட்டிக்கொண்டும் நான்கு பேர் நன்றாய் சாப்பிட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.

3. ஜஸ்டிஸ் கட்சிக்குப் பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்கு இல்லாதி ருப்பதற்குக் காரணம், அவர்கள் சர்க்காரை வைவது போல வேஷம் போடக் கூட பயப்படுவதுதான். பாமர ஜனங்கள் சர்க்காரை வைதால்தான் சந்தோஷப் படுவார்கள். ஏனெனில் சர்க்காரின் நடவடிக்கை அவர்களுக்குப் பிடிக்க வில்லை.

4. ஆங்கிலம் படித்துப் பரீட்சையில் தேறுவதே புத்திசாலித்தன மென்றும், கெட்டிக்காரத்தனமென்றும் சொல்வது அறியாமையாகும். உருப் போடப் பழகினவனும், ஞாபகசக்தியுள்ளவனும் எதையும் படித்து பாஸ் பண்ணிவிடலாம். உருப்போடப் பழகாதவனும், ஞாபகசக்தியில்லாதவனும் பரீட்சையில் தவறிவிடலாம். ஆனால், படித்துப் பாஸ் பண்ணினவன் அயோக்கியனாகவும், முட்டாளாகவும் இருக்கலாம். படித்தும் பாஸ் செய்யா தவன் கெட்டிக்காரனாகவும், யோக்கியனாகவுமிருக்கலாம்.

5. பள்ளிக்கூடங்களும், காலேஜு களும் அடிமைகளை உண்டாக்கும் உற்பத்திசாலை. லா காலேஜ் என்னும் சட்டப் பள்ளிக்கூடம் தேசத் துரோகத் துக்கு உபயோகப்படக்கூடியவர்களை உண்டாக்கும் உற்பத்தி சாலை. மெடிக்கல் காலேஜ் என்னும் வைத்தியப் பள்ளிக்கூடம் நாட்டு வைத்தி யத்தைக் கொல்ல எமன்களையும், சீமை மருந்துகளை விற்கத் தரகர்களையும் உண்டாக்கும் உற்பத்திசாலை.

6. இந்தியாவில் ஜாதி அகம்பாவம் இருக்கிறவரையில் இந்தியர்கள் தங்களுடைய யோக்கியதையினாலோ, ஒற்றுமையினாலோ, சாமர்த்தியத் தினாலோ அன்னிய ஆட்சியிலிருந்து விலக முடியவே முடியாது. ஒரு சமயம் ஆங்கிலேயரின் கொடுமையினாலோ, முட்டாள்தனத்தினாலோ இந்தியா ஆங்கிலேயர்களை விட்டு விலகினாலும் விலகலாம். ஆனால் இந்தியர் கைக்கு வருமா என்பது மாத்திரம் அதிக சந்தேகந்தான்.

7. தமிழர்கள் தங்கள் அறியாத்தனத்தினால் வெள்ளைக்காரரைத் துரை யென்றும், பிராமணர்களை சாமியென்றும் கூப்பிடுவதோடு இவர்களைக் கண்டால் தாமே முன் மரியாதை செய்ய வேண்டுமென்றும், அதிலும் பிராமணச் சிறுவனைக் கண்டாலும் கும்பிடவேண்டியது மத தர்மமென்றும் எண்ணுகிறார்கள்.

8. ஒரு வேலைக்காகப் போடப்பட்ட விண்ணப்பங்களில் ஆங்கிலத் தில் பெரிய பரீட்சை பாஸ் செய்தவனோ மற்றும் பல பாஸ் செய்தவனோ போட்ட விண்ணப்பத்தைத்தான், எஜமானனாயிருப்பவன் கவனிக்க வேண்டு மென்பதும், அவருக்குத்தான் வேலை கொடுக்கவேண்டுமென்பதும் பொறுப் பற்றதும் முட்டாள்தனமானதுமாகும். வேலைக்கு வேண்டிய யோக்கியதை இருக்கிறதா? இல்லையா? என்று பார்ப்பதுதான் கிரமமானதாகும். கெட்டிக் காரரும், யோக்கியருமானவர்களும் மெட்ரிகுலேசன் படித்தவர்களில் இருக் கிறார்கள். சோம்பேறியும், அயோக்கியர்களும் பி.ஏ. , எம்.ஏ., படித்தவர் களில் இருக்கிறார்கள்.

9. தமிழ்நாட்டு சுயராஜ்யக் கட்சி என்பது தற்காலம் சட்டசபை, ஜில்லா போர்டு, தாலூகா போர்டு, முனிசிபாலிட்டி முதலிய ஸ்தல ஸ்தாபனங்களில் பிராமணரல்லாதாருக்கு ஏற்பட்டிருக்கும் ஆதிக்கத்தை ஒழித்து மறுபடியும் பிராமண ஆதிக்கத்தை ஏற்படுத்தவே தோன்றியிருக்கும் ஒரு சூழ்ச்சியாகும்.

குடி அரசு கட்டுரை - 02.08.1925

 
Read 40 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.