கூலிக் காசுக்காகப் பாடிய இனத்துரோகி கம்பன் – III. விடுதலை – 5.11.1948

Rate this item
(0 votes)

ராமாயணத்திற்கு கூறப்படும் மற்றொரு கதையைப் படித்தால், இன்னும் அசிங்கமாயிருக்கும். ஒருநாள் நண்பகலில் மகாவிஷ்ணு, தன் மனைவியான லட்சுமியிடம் கூடிக் கலவி செய்து கொண்டிருந்தாராம். அதை துரதிர்ஷ்ட வசமாக துவார பாலகர்கள் பார்க்க நேர்ந்து விட்டதாம். உடனே மகாவிஷ்ணு கோபங்கொண்டு, "அசுரர்களாகப் பிறக்க வேண்டும்' என்று அவர்களுக்கு சாபம் கொடுத்து விட்டாராம். அவர்கள் பகலில் படுத்து இன்புற்றதற்காக, துவார பாலகர்களா தண்டனையடைவது? அப்படித்தான் பகலில் கூடுவதாயிருந்தாலும் காவற்காரர்கள் வெளியில் இருக்கிறார்களே, ஏதாவது அசந்தர்ப்பத்தில் வந்து விடப்போகிறார்கள் என்று கதவையாவது மூடிக்கொள்ள வேண்டாமா? அவ்வளவு அறிவு கூடவா இல்லை, அந்த ஆரியக் கடவுளுக்கு? இவ்வளவு முட்டாளையா தெய்வம் என்று கூறுவது? என்னே மடத்தனம்!

ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்டத்தட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள், அம்பு வேறு என்றால் – ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே? மற்றும் குழந்தை, குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே மக்களுக்குத் தேவையாகிவிடுமே? அவன் ஒரு பெண்டாட்டியிடம் ஒருநாள் வீதம் இருப்பதாக வைத்துக் கொண்டால்கூட – மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்டு வர, 165 வருடமாகிவிடுமே! இத்தனை பேரையும் யாருடைய பணத்தைக் கொண்டு காப்பாற்றி இருப்பான், அந்த அரசன்? இந்த தர்பார், ஹிந்துஸ்தான் – ஆரிய தர்பாரைவிட மிஞ்சிவிட்டதே! குடிமக்கள் வரிப் பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக்கியம்? அப்படி வீணாக்குபவனிடத்து குடிமக்களுக்குதான் பற்றுதல் இருக்குமா? எவ்வளவு அயோக்கியத்தனம் செய்திருக்கிறான் இந்த தசரதன்?

60,000 போதாது – பட்ட மகிஷிகளோடு (60,002–ம்) போதாது என்று, 60,003 ஆவதாக ஓர் இளம் மங்கையைக் கலியாணம் செய்து கொடுக்கும்படி கேகய மன்னனைக் கேட்கிறானே! அவன், தசரதன் கிழவன் ஆகிவிட்டான் என்று மறுத்தும் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் – தன்னுடைய பட்டணத்தையே அப்பெண்ணுக்கு (கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து, அவனை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சி புரிகிறானே! இவ்வளவு நடந்திருந்தும் பின்னர் கைகேயியையும், பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்டவேண்டுமென்று – குருவோடு, புரோகிதரோடு மந்திரிமார்களோடு சதி செய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே! எங்கே கேகய மன்னனுக்குத் தெரிந்தால்,

சண்டைக்கு வந்துவிடுவானோ என்று அவனுக்கு சொல்லாமல் – தன் மகனும் உரிமையாளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து, கைகேயிக்கும் தெரியாமல் பட்டத்தைக் கோசலையின் மகனான ராமனுக்கு கொடுக்க சூழ்ச்சி செய்கிறானே! கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ராமனும் இவ்வளவு சங்கதிகள் தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்துகொண்டு சூழ்ச்சி செய்கிறானே! பரதனுக்கு சொந்தமான பட்டத்தை அடைய, இந்த நடத்தையை ராமனே ஒப்புக்கொள்கின்றானே, தான் காட்டில் இருக்கும்போது.

இவ்வளவு வஞ்ச நெஞ்சம் படைத்த ராமனைக் கடவுள் அவதாரமென்று புகழ்கிறானே கம்பன், சற்றும் மானம் வெட்கமின்றி! பரதனின் வேலைக்காரி இதில் தலையிடாதிருந்தால் – பட்டம் சூட்டிக் கொண்டிருப்பானே ராமன்! பட்டாபிஷேகம் நடக்க வேண்டிய தினத்தன்று காலை தனக்குப் பட்டம் இல்லையென்று அறிந்ததும், தலையில் அடித்துக் கொண்டு அழுகிறானே! "இது வேண்டாம்', "அது வேண்டாம்' என்று ஒதுக்கித் தள்ளுகிறானே! விதி தவறுமா என்று அழுகிறானே! காட்டுக்கு விரைந்து சென்றுவிட்டால் பரதன் அழைத்ததும், பிறகு தந்திரமாகத் திரும்பி வந்துவிடலாம் என்று தாயாருடன் மறுபடியும் சூழ்ச்சி செய்கிறானே! இவ்வளவையும் கூலிக் காசுக்காகப் பாடிய கம்பன் மறைத்து விட்டானே!

அரசு கிடையாது என்று ராமன் கேள்விப்பட்டதும், "அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா அவன் முகம்' என்று பாடிவிட்டானே கூலிக்காரக் கம்பன்; இனத் துரோகி கம்பன்! பார்ப்பனரின் பிச்சைக் காசுக்காக ராமாயணப் பிரச்சாரம் செய்யத் துவக்கிய தோழர்கள், துணிவிருந்தால் – இவற்றை மறுக்கட்டுமே பார்ப்போம்! எதையாவது தவறு என்று காட்டட்டுமே! நாங்கள் புத்தகங்களில் எழுதியிருக்கிறோமே, இவ்வுண்மைகளை விளக்கமாக யாரோ ஒரு கம்ப பக்தன்கூட முன்வரக் காணோமே, எங்கள் கூற்றை மறுக்க.

மற்றொரு ஆரிய இதிகாசமாகிய பாரதத்தில் ஒருத்திக்கு அய்ந்து கணவன்மார் இருக்க, ராமாயணத்தில் ஒருத்திக்கு ஒரே கணவன் என்ற நியதி காணப்படுவானேன்? இடையில் – குறள் வந்து குறுக்கிட்டதுதானே! குறளுக்குச் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில்தான் கம்பனுக்கு கூலி கொடுத்த கவிபாடும்படி செய்துவிட்டனர், ஆரியப் பார்ப்பனர்கள். வால்மீகி ராமாயணத்தை தன் இஷ்டம்போல் மாற்றிவிட்டான் கம்பன். எனவேதான் அவனைச் சாட வேண்டியிருக்கிறது.

– தொடரும்

விடுதலை – 5.11.1948

 
Read 47 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.