காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு - IV குடி அரசு - சொற்பொழிவு - 28.06.1925

Rate this item
(0 votes)

தீண்டாமை

ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப்பெயர்கள் இருப்பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சியமாயிருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும் இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்று முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது.

பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக் கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக்கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன் மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டு மாம்சம் சாப்பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் ‘கள்’ உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.

இவர்கள் பார்வைக்கு அசிங்கமாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடையுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும் இதற்கு யார் பொறுப்பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கே தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ வேஷ்டி துவைக்கவோ வழி எங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய்கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார்களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்து விட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்பட மாட்டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்துவிட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக்கிறோம்.

மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாதவனாய் விடுவான் ? ஐரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா ? அவர்களை நாம் தீண்டாதார், பார்க்காதார் என்று சொல்லக்கூடுமா ? அப்படியே சொல்வதானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப் போல் நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாடு தின்பது உயிருள்ள ஜெந்துவை உயிருடன் வதைத்து கொலை செய்து சாப்பிடுவதைவிட உயிரற்ற செத்துப் போன பிராணியின் மாம்சத்தை, மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா?

கள் இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது என்று சொல்வதும் எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறவனும் தொடக்கூடியவன், தெருவில் நடமாடக் கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்? உற்பத்தி செய்வதால் குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படி தொடக்கூடிய வர்களாவார்கள் ? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறோம். இந்தப்பணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக்கியர்கள்; தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடியவர்கள். ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை?

இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படி கொடுமைப்படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடுதலையை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்துவாரா? என்பதை நினையுங்கள். இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கொண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கெனியா, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவருக்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி வைத்துக் கொண்டிருக்கும் அக்கிரமத்தை விடவா 1818-வது வருஷத்து ஆக்டும், ரௌலட் ஆக்டும், ஆள்தூக்கி சட்டமும், 144, 107, 108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையை விடவா அன்னியர் கொடுமை பெரிது.

மதுரைக் கோவிலில் குடிகாரன், மாம்சம் சாப்பிடுகிறவன், குஷ்ட ரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப்பிரகாரம் கடந்து செல்லலாம். ஆனால் நமது சகோதரர்களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்தவர்களுமாயிருந்தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது, மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்து போகுமாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ரௌலட் சட்டத்திற்கும், ஆள் தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம் சொல்வானேன். இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக் கூடிய மாதிரியாவது நாம் நடக்குகிறோமா?

( தொடரும்)

குறிப்பு: 23,24.05.1925 இரண்டு நாள்கள் பள்ளத்தூரில் நடைபெற்ற காரைக்குடி மாவட்ட முதலாவது அரசியல் மாநாடு - நிறைவுரை (தொடர்ச்சி)

குடி அரசு - சொற்பொழிவு - 28.06.1925

Read 30 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.