காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு - III குடி அரசு - சொற்பொழிவு - 21.06.1925

Rate this item
(0 votes)

தீண்டாமை

தீண்டாமையைப் பற்றி ஓர் தீர்மானம் செய்திருக்கிறீர்கள். அதைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை அனுஷ்டிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லு வதும். சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும், சிலர் புராணங்கள் என்று சொல்லு வதும், சிலர் பழக்கவழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன. பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக் கிரமத்தில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாச்சிரமமானது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன். சூத்திரன், பஞ்சமன் என ஐந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றனவென்றும், இவற்றிற்கு ஆதாரம் மனுஸ்மிருதி என்றும் சொல்லப் படுகின்றது.

தமிழர்களாகிய நம்மை இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், சாதி என்பதும் , பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் மனுதர்ம சாஸ்திரமோ, மனுஸ்மிருதியோ என்பதும் ஆகிய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளல்ல. தமிழ் நாட்டினர்க்கோ, தமிழர்க்கோ இவ்வன்னிய பாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை. தவிர இந்த சாதிகளுக்கே ஏற்பட்டிருக்கிற குணமும் தமிழர்க்குப் பொருந்தியது என்று சொல்லுவதற்கும் இடமில்லை. உதாரணமாக, நம்மில் பெரும்பான்மையோர் சூத்திரர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். நாமும் நம்மை அனேகமாய் சூத்திரர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறோம். ஏன் அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறோமென்பதை பற்றி இப்பொழுது ஆராயத் தேவையில்லை. சூத்திரர் என்பது என்ன? நாம் சூத்திரர்களா என்பதைக் கவனிப்போம். சூத்திரன் என்றால் மனுஸ்மிருதியில் “விலைக்கு வாங்கப்பட்ட அடிமை, யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப் பட்டவன், அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன், வைப்பாட்டியின் மகன்” முதலிய ஏழுவித மக்களுக்கு சூத்திரர்கள் என மனுதர்ம சாஸ்திரத்தில் பெயரிடப்பட்டிருக்கிறது.அப் பெயரை நாம் ஏற்றுக் கொண்டு நம்மை நாமே சூத்திரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறோம்.

அடுத்தாற்போல் பஞ்சமர்கள் எனச் சொல்லப் படுவது யாரை என்பதே நமக்குச் சரியாய் ஆதாரத்தின் மூலமாய் தெரிந்து கொள்ளக்கூடவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குடும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையுமே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேலேகண்ட முறைப்படி கொடுமையாக நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்வதையும் கேட்கிறோம். அநேகமாய், நாம் கூட அவர்களை அதே மாதிரியாக நடத்துகிறோம். அப்படி நடத்தின போதிலும் ‘சூத்திரர்கள்’ என்று சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா ? பஞ்சமர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் தாழ்ந்தவர்களா? என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களை விட சூத்திரர்களே தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப் பட்டபடி ‘சூத்திரர்’ என்பதற்கு ஆதாரப்படி தாசிமகன், என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன், சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில்தான் நான் சந்தோஷப்படுவேன்.

இவ்விதக் கெடுதியான பெயர் நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நமது சகோதரர்களைக் காண, அருகில் வர, தொட, பேச, பார்க்கமுடியாதபடி கொடுமையாய் நடத்தி ஊரிற்கு வெளியில் குடியிருக்கும்படியும் ஸ்நானம் செய்வதற்கோ, வேஷ்டி துவைத்துக் கொள்ளுவதற்கோ, வீதியில் நடப்பதற்கோ, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம். மேற்கண்ட கொடுமையான குணங்கள் அவர்களோடு மாத்திரம் நில்லாமல் அனேக சமயங்களில் நாமும் நமக்கு மேல் வருணத்தார் என்று சொல்லுகிறவர்களும்கூட அனுபவிப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, சூத்திரர்களை அதற்கு மேற்பட்ட மூன்று வருணத்தார்களும் தொடுவதில்லையென்பதையும், இவர்கள் முன்னிலையில் அவர்கள் ஆகாரம் எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், சிற்சில சமயங்களில் இவர்களோடு பேசுவதும் பாவம் என்பதையும் அனுபவிக்கிறோம். அதே மாதிரி வைசியர்களிடத்திலும் க்ஷத்திரியர்கள், பிராமணர்கள் நடந்துகொள்ளுவதையும், அதே மாதிரி க்ஷத்திரியர்களிடத்திலும் பிராமணர் நடந்துகொள்வதையும், பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மையாக நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக, திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென்றும், மற்ற பிராமணர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருதி, தங்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் மற்றொருவர் பிரவேசிப்பது தோஷமெனக் கருதுகிறார்.

நம் நாட்டிலேயும் முறைப்படி நடக்கின்ற பிராமணர்கள் என்று சொல்லுவோர்கள் க்ஷத்திரியனிடத்திலேயோ, வைசியனிடத்திலேயோ, சூத்திரனிடத்திலேயோ பேசுகின்ற காலத்தில், ஜலமலபாதிக்குப் போகும்போது எப்படி பூணுலைக் காதில் சுற்றிக்கொண்டு போகிறார்களோ அதுபோல பெரிய தீட்டென நினைத்துப் பூணூலைக் காதில் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள். இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்டவராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக் கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல், இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற சாதியாயிருக்கிற ஐரோப்பியருக்குத் தீண்டாதவராகவும், கிட்ட வரக்கூடாதவராகவும் இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம் பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்றவேண்டுமென்பதல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விலக்க வேண்டுமென்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்கவேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம்.

இதைச் சொல்லுகிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது? அவர்களையா தொடுவது? அவர்களையா பார்ப்பதென்று ஆச்சரியப்பட்டுவிடுகிறார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ! நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜமீந்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா, சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாளனாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம்மையா, மடாதிபதியான நம்மையா இன்னும் எத்தனையோ உயர்குணங்களும் எவ்வித இழிவுமற்ற நம்மையா தேவடியாள் மகன், வைப்பாட்டி மகன், அடிமையென்று அர்த்தம் கொண்ட சூத்திரன் என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கப்படுவதேயில்லை. மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களைச் சூத்திரர்கள் என்று சொல்லிக்கொள்ளுவதில் பெருமை அடைகின்றனர். இந்த இழிவு சூத்திரர்கள் என்பவரை எப்படிக் கட்டிக்கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் தேவடியாள் மகன் என்று இன்னொருவர் கூப்பிடும் படியாகக் கடவுள் வைத்துவிட்டார். நமக்கும் அதன் பலனாய் நமக்குக் கீழ் ஒருவர் இருந்தால் போதுமென்று நினைத்து மகிழ்ந்துகொண்டு நம்மை ஒருவன் வைப்பாட்டி மகனெனக் கூப்பிடு கிறானே, கூப்பிடுவது மாத்திரம் நில்லாது கல்லும் காவேரியும் உள்ளவரை அழியாமல் எழுதி வைத்து விட்டானே, அஃதோடு நில்லாமல் நம்மை நாமே வைப்பாட்டி மகனென்று சொல்லிக்கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதேயென்றுகூட கவலைப்படுவதேயில்லை.

இது எதைப் போலிருக்கிறதென்றால் அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு “இந்துக்கள்” என்று சொல்லுவதற்கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகமதியரல்லாதார் என்று அழைப்பது போலவும் நாமும் இந்துக்களாகவும், இந்தியாவின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை “அல்லாதார்” என்கிற அணியைக் கூட்டி மகமதியர் அல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எப்படியானாலும் உத்தியோகமோ, பதவியோ கிடைத்தால் போதுமென்கிற இழிவான ஆசையில் பட்டு “மகமதியரல்லாதார்” பிரிவுக்கு யான் சட்டசபை அங்கத்தினனாய் நிற்கிறேன் என்று கவுரவமாய் நம்முடைய படித்தவர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்று சொல்லக்கூடிய கூட்டத்தார் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது.

 தொடர்ச்சி 28.06.1925 குடி அரசு 

குறிப்பு: 23,24.05.1925 இரண்டு நாள்கள் பள்ளத்தூரில் நடைபெற்ற காரைக்குடி மாவட்ட முதலாவது அரசியல் மாநாடு - நிறைவுரை (தொடர்ச்சி)

குடி அரசு - சொற்பொழிவு - 21.06.1925

 
Read 24 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.