தியாகமூர்த்தியின் இறுதித் தியாகம். குடி அரசு - தலையங்கம் - 21.06.1925

Rate this item
(0 votes)

பாரத தேவியின் மணிவயிறு வாய்த்த துணிவுடை வீரமைந்தன் - தாய்த்திருநாட்டின் தவப்பேறு - வங்கநாட்டுச் சிங்கம் - உலகில் தியாகம் அனைத்தும் ஒரு வடிவு எடுத்தாலன்ன விளங்கிய விழுமியோன் - இரவலர்க்கு வரையாது கொடுக்கும் வள்ளல் - தேசபந்து சித்தரஞ்சன் தாஸர் ஆருயிர் அன்னையாம் பாரதியைப் பரிதவிக்க விட்டு வானுலகு ஏகின கொடுஞ் செய்தி இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்தையும் ஊடுருவிப் பாய்ந்து வெந்துயர்க் கடலில் வீழ்த்திவிட்டது.

இடிமுழக்கம் கேட்ட நாகமே போன்று கொடுங்காலன் இடி கேட்டு இந்தியமக்கள் நவிலொணா நடுக்கத் திற்காளாயினர். இந்திய நாட்டின் - இந்திய மக்களின் வல்வினைதான் இருந்த வாறு என்னே! நம தருமைத் தாய்த்திருநாட்டிற்கு இஃதோர் எண்ணுதற்கரிய பெருஞ் சோதனைக் காலம் போலும்! கொடுங் கூற்றுவனின் கூத்தினைக் கண்டு தமிழ் நாடும், தமிழ் மக்களும் துயருழந்து வாடுங்காலையில், தனது வண்மையைக் காட்டுவான் விரும்பி அக்கொடியோன் வங்க நாடுற்றனன் போலும். வங்க நாட்டுச்சிங்கத்தின் வீர முழக்கம் ஓய்ந்துவிட்டது; தாய் நாட்டின் விடுதலைப் போரில் வீரிட்டு எழுந்து நின்ற ஊக்கக் குன்று தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டது; வீரத்தை உணர்த்த, வீரரை ஆக்க, வீரரை வளர்க்கத் தோன்றிய வீர உடல் மடிந்தது. வறுமை நோய்வாய்ப்பட்டுச் சிறுமையிற்றாழ்ந்து சொல்லொணாத் துன்பத்தில் ஆழ்ந்து அரற்றும் அன்னையை மறந்து பிரிந்து செல்லவும் உள்ளம் ஒருப்பட்டமையை எண்ணுந்தோறும் எமது உள்ளம் உருகுகிறது. தாஸரின் வீரமொழிகளும், தீரச் செயல்களும் எம்முன் தோன்றித் தோன்றி எம்மை ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்குகின்றன. இத்தகைய வீரரை - வள்ளலை - தியாகச் செல்வரை இனி எந்நாள் காண்போம் என்று எமதுள்ளம் ஏங்குகின்றது.

தாய்நாட்டின் விடுதலைக்காக இடையறாது அல்லும் பகலும் உழைத் தமையினால் உடல் நலம் இழந்த தாஸர் உடல் நலம் பெறுவான் வேண்டி தார்ஜிலிங்கில் மலைவாசம் செய்ய மனைவி, மக்களுடன் சென்றிருந்தார். சென்ற செவ்வாயன்று மாலை 5.30 மணிக்கு அவர்தம் ஆவியைக் கொடுங்கூற்றுவன் கொள்ளை கொண்டனன். என்னே மனிதர் நிலை!

திரு. தாஸர் வங்கநாட்டில் வறியோர்க்கீந்து வறுமை யெய்திய பெருங் குலத்தில் தோன்றியவர்; சிறந்த தேசாபிமானி; தாய்நாட்டின் விடுதலையையே தமக்கு அணியாகப் பூண்டவர்; தியாகமே வடிவாக வந்தவர்; அருளே உருவாக எடுத்தவர்; ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனர்’ ; தஞ்ச மென்றடைந்தவரை அஞ்சல் எனக்கூறும் அருங்குணம் வாய்ந்தவர். தமது இளம் வயதில் கல்வி கற்றார் ; பாரிஸ்டர் உத்தியோகம் செய்ய வேண்டுமென்ற ஆவல் தூண்ட ஆங்கில நாடுசென்றார்; அப்பரிக்ஷையிற் றேறினார். ஆங்கில நாட்டில் வதியும் அவ்விளம் பருவத்திலேயே தாய் நாட்டின் தொண்டில் ஈடுபட்டார். நமது பெருங்கிழவர் தாதாபாய் நௌரோஜி, பாராளுமன்றத்தின் அங்கத்தினராதற் பொருட்டு அரும் பெரும்பாடுபட்டார். அரிய சொற்பொழி வுகள் நிகழ்த்தினார்.

இவ்விளம் வயதில்...... தமது குடும்பத்தின் வறுமையை அகற்றவும், தந்தையார்க்கு நேர்ந்த இழிசொல்லைப் போக்கவும் பொரு ளீட்டுந் தொழில் கற்பான் புகுந்த காலையில் தாய்நாட்டை மறந்தாரல்லர். தாய்நாடு திரும்பி வந்ததும், வக்கீல் தொழிலில் அமர்ந்தார். புதுப் புதுப் புதையல்களைக் கண்டெடுப்பாரே போன்று தமது தொழிலில் பெரும் பொருள் ஈட்டினார். திங்கள் ஒன்றுக்கு 50,000 ரூபாவுக்குக் குறையாமல் பொருள் ஈட்டினாராம். இப்பெரும் பொருளை என் செய்தார்? செழுங்கிளை தாங்குவதில் தமது பொருளைச் செலவிட்டு, கடனும்பட்டு, நீதிமன்றத்தின் காப்புப் பெற்ற (இன்சால்வெண்டு கொடுத்த) தம் தந்தைக்கு நேர்ந்த பழிச்சொல்லை அகற்றுவதில் இப்பெரும் பொருளை செலவிட்டார். 16 இலட்சம் ரூ. இவ்வாறு கொடுத்து ‘நீதிமன்றக் காப்புப் பெற்ற கடனாளி’ என்னும் பழிச்சொல்லை தம் தந்தையாருக்கில்லா தொழித்தார். என்னே இவரது பெருந்தன்மை! என்னே இவரது அறவொழுக்கம்! இவ்வற வொழுக் கமன்றோ இவரது பிற்காலத் துறவொழுக்கத்திற்கு அடி கோலிற்று? “மகன் றந்தைக்காற்று முதவி யிவன்றந்தை என்னோற்றான் கொல் லெனுஞ் சொல்” என்று ஆசிரியர் திருவள்ளுவர் கூறிய மகனிலக்கணத்திற்கு இலக்கியமாக இலங்கியவர் ஆவர் நமது தலைவராய தாசர்.

திரு. தாசரின் வண்மை அளவிடற் பாலதன்று ; தாம் ஈட்டிய பொருள் அனைத்தினையும், தமக்கென ஒரு சிறிதும் சேர்த்து வையாமல் தாய் நாட்டிற் காகவும், இரவலர்களுக்காகவும் ஈந்து உவந்தனர். “முல்லைக்குத் தேரும், மஞ் ஞைக்குப் போர்வையும்” அளித்த தமிழ் நாட்டு வள்ளல் பாரியே அனைய வள்ளல் ஆவர் திரு தாஸர். இப்பெரியாரது தாராள உள்ளம் கடலினும்பெரிது. இல்லையென்றார்க்கு இல்லை என்னாது ஈந்த வள்ளல். அதிகார வர்க்கத்தாரின் அடக்குமுறைப் பாணங்களுக்கு ஆளாகிச் சிறைக் கோட்டம் நண்ணின தேச பத்தர்களின் குடும்பங்கள் பல தாஸரின் ஆதரவைப் பெற்று வாழ்வு நடாத்தின. இவரால் ஆதரிக்கப் பெற்ற மாணவர்கள் பல்லாயிரவர் ஆவர். ஒரு காசும் ஊதியம் பெறாது தேசத் தொண்டே தமது பெரும் ஊதியம் எனக்கொண்டு எத்துணையோ தேசபக்தர்களுக்காக நீதிமன்றங்களில் வாதித்துள்ளார். வக்கீல் தொழிலில் உயரிய நிலை இவர் உறுவதற்குக் காரணமாக இருந்தது திரு. அரவிந்தகோஷ் எனும் பெரியார் கலந்திருந்த அலிப்பூர் வெடிகுண்டு வழக்காகும். இவ்வழக்கில் இவர் வாதித்து வெற்றிபெற்றார் ; பின்னர் இவர் தம் புகழ் எங்கும் பரவலாயிற்று. இத்தகைய அரசியல் வழக்குகளினால் தாஸர் கடன் படவும் நேர்ந்ததெனில் இவரது தேசபக்தியின் ஆழத்தை யாவரே அளக்க வல்லார்?

திரு. தாஸர் நேராக அரசியல் உலகில் இறங்கிய காலம் காந்தியடிகள் அரசியலில் தலையிட்ட காலத்தோடு ஒக்கும். பாஞ்சாலப் படுகொலையின் விவரங்களை நன்றாக ஆராய்ந்து அறிக்கையொன்று எழுதும்படி ஏற்படுத்தப் பட்ட பெரியார்களில் திரு. தாஸர் ஒருவர். இவ்வேலையில் இவர்காட்டிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும், தேசாபிமானத்தையும் காந்தியடிகளே வாயாரப் புகழ்ந்துள்ளார்களெனின் யாம் யாது கூற வல்லோம். தமது சொந்தத் தில் இதற்காக ரூபா 50,000 செலவிட்டிருக்கிறார் எனின் திரு.தாஸரின் தயாள குணத்தை எவ்வாறு எடுத்துரைப்பது?

தேச விடுதலையை அளிப்பது ஒத்துழையாமையே எனக் காந்தியடி கள் கண்டார். காங்கிரஸ் மகாசபையும் அந்நெறியை ஏற்றுக் கொண்டது. இந்திரபோகம் நுகர்ந்து இன்ப வாழ்வில் மூழ்கித் திளைத்துக் கிடந்த திரு. தாஸர் என் செய்தனர்? “இன்பமருஞ் செல்வமும், இவ்வரசும் யான் வேண் டேன்” எனக்கூறி இந்திர போகத்தைத் துறந்து, இன்ப வாழ்வை நீத்து, பெரும் பொருள் ஈட்டிவந்த வக்கீல்தொழிலை உதறித்தள்ளி, தேசத்தொண்டு ஒன்றே தமது வாழ்க்கையின் பயனாமெனக் கொண்டு ஒத்துழையாமை நெறி நின்று, காந்தியடிகளைப் பின்பற்றி உழைத்து வருவாராயினர். தமது அருமை மனைவி வசந்தாதேவியையும், செல்வச் சிறுவனையும் சிறைக்கனுப்பவும் ஒருப்பட்டனர். தாமும் இவ்வரசாங்கத்தினரின் விருந்தினராக ஆறு திங்கள் சிறைச்சாலையாம் தவச்சாலையில் வதிந்தனர்.

இந்நிலையில், காந்தியடிகள் சிறைசென்றனர்; தாஸர் வெளிப் போந்தனர். நாட்டின் நிலைமை ஒத்துழையாமையில் மாறுதல் செய்ய வேண்டு மென அவர் உள்ளத்தில் ஒரு எண்ணத்தை உண்டாக்கிற்று. சட்டசபை புகுந்து, ஆங்கு முட்டுக்கட்டைப் போட்டு ஒத்துழையாமை நிகழ்த்த வேண்டுமென எண்ணினார். இவருக்குப் பல பெருந்தலைவர்களும் துணை போயினர். ‘சுயராஜ்யக் கட்சி’ யென ஒரு கட்சி கண்டார். தமது கட்சியை வலுப்படுத்த நாடெங்கும் மின்னல்போல்தோன்றி, வீரச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி தமது கொள்கை உரம்பெறச் செய்தார். “சட்டசபையில் முட்டுக்கட்டை போடுவேன்; இரட்டையாட்சியை ஒழிப்பேன்” என வீரமொழிகள் புகன்று உட்சென்றார் தாஸர். வங்கநாட்டில் இரட்டையாட்சியை ஒழித்து வெற்றிபெற்றார். இதன் பயனாய் விளைந்த நலம் யாது என்பது வேறு விஷயம். அவர் எடுத்த காரியத் தில் வெற்றியடைந்தார் என்பதை எவரும் மறுக்கமுடியாது. தமது எண்ணம் நிறைவேறியதாமெனக் கொண்டே இறைவன் திருவடிநீழல் அடைந்தார் போலும்.

திரு. தாஸர் கல்விக் கடல்; அறிவுக்கடல்; உலகவியல் அறிவு மட்டு மன்று சமயஅறிவும், ஆன்ம ஞான அறிவும் நிறைந்த பெரியார். வங்கமொழி யில் பாட்டியற்றவல்ல பெரும் புலமை மிக்கார். இனிய சுவையும், இறைவன றிவும் புகட்ட வல்ல இனிய பாடல்கள் இயற்றியுள்ளார் எனக் கூறுகின்றார்கள்.

இவ்வரும் பெருங் குணங்கள் படைத்த பெரியார் - இதுகாறும் தமது உடலாலும் பொருளாளும், தேச சேவை செய்துவந்த தியாகமூர்த்தி - தாய் நாட்டின் தொண்டில் தம் இன்னுயிரையும் இறுதியாகத் தியாகம் செய்து தமது தியாக வாழ்க்கையின் முடிவெய்தினார். இப்பெரியாரின் வண்மையை எண்ணிக் காந்தியடிகள் கண்ணீர்விட்டுக் கதறினரெனின், இவரது வண்மை யில் வாழ்ந்து வந்த பல்லாயிரவர்களின் உள்ள நிலை எவ்வாறிருக்குமென்று சொல்லவும் வேண்டுமோ? சுயராஜ்யக் கட்சி தனது உயிரை இழந்து விட்டது. நாம் ஒரு பெருந்தலைவரை இழந்துவிட்டோம். தேசம் உற்ற பந்து ஒருவரை இழந்தது. இந்திய மக்கள் ஓர் உண்மைத் தாசனை இழந்தனர். இவரது பிரிவாற்றாமையால் கண்ணீர்ப் பெருக்கி வருந்தி நிற்கும் இவரது அருமை மனைவியாருக்கும், புதல்வனுக்கும் எமது அநுதாபத்தைக் காட்டுவதல்லாது வேறென் செய்ய வல்லோம். தேசபந்து சித்தரஞ்சன் தாஸரின் ஆன்மா சாந்தியடையுமாறு எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகின்றோம்.

குடி அரசு - தலையங்கம் - 21.06.1925

Read 28 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.