திராவிடப் பண்புகளை மறுக்க எழுதப்பட்டவையே ஆரிய நூல்கள். விடுதலை – 5.11.1948

Rate this item
(0 votes)

திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் – கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பனச் சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிட கலாச்சாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடைமுறைகளையும் போற்றிப் புகழ்ந்து, அவற்றைத் திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை ஏய்த்து விட்டான் கம்பன். ராமாயணம், பரதம், கீதை இன்னோரன்ன ஆரிய நூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப்பட்ட நூல்கள் தாம் என்பதை, ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள்.

இவ்வாரிய நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ள ஆரியப் பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில் – திராவிடர்களை அதனின்று விடுவிக்கத் திராவிடப் பெரியார் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும். ஆரியப் பண்புகள் எப்படித் திருக்குறளால் மறுக்கப்பட்டுள்ளன என்பதை விளக்கமாக எடுத்துக்காட்ட, முதலில் ராமாயணத்தைப் பற்றியும், இதர ஆரிய நூல்களைப் பற்றியும் பேச சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறேன்.

மக்கள் யாவரும் ஒரே சாதி என்கிறது குறள்; 4 சாதியைச் சேர்ந்தவர்கள் என்று பாகுபடுத்திச் சொல்கின்றன ராமாயணமும், கீதையும். அறிவுக்கு மாறான – இயற்கைக்கு மாறான பல காட்டுமிராண்டித்தனமான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இலங்குகின்றன ஆரிய நூல்கள். அறிவினால் உய்த்துணர்ந்து ஒப்புக்கொள்ளக் கூடியனவும், இயற்கையோடு விஞ்ஞானத்திற்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். ஆரிய நூல்களில் காணப்படும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடந்திருக்கக் கூடாதனவாகவும், இன்று நடத்திக் காட்ட முடியாதனவாகவும், சாத்தியமற்றதாகவும் இருக்கின்றன. திருக்குறளில் காணப்படும் நீதிகள், அறிவுரைகள் நடக்கக்கூடியதும், நடந்தால் உற்ற பலன் தரக்கூடியதும், ஏற்கக் கூடியதாகவும் இன்று நம்மால் நடத்திக் காட்டக்கூடியவையாகவும் இருக்கின்றன.

கம்பர் விழாவிற்குப் பணம் கொடுத்து உதவியவர்கள், பெரும்பாலும் பார்ப்பனர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்; இந்த விபீஷணர்கள் அவர்களின் தயவுக்காக அந்த விழாவில் கலந்து கொண்டு ஏதேதோ உளறிவிட்டார்கள் அவ்வளவுதான். கலியாணங்களில் காலட்சேபங்களின் மூலமும், நாடக மேடைகளில் நாடகங்களின் வாயிலாகவும், சினிமாக்களில் படக்காட்சிகளின் மூலமும், பள்ளிக்கூடங்களில் பாடப் புத்தகங்களின் மூலமும் இந்த ராமாயண, பாரதக் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுவிட்டதன் பயனாய் – இன்னும் வலியுறுத்தப்பட்டு வருவதன் பயனாய் நாடாளும் அரசன் முதற்கொண்டு, காட்டிலேயே இருந்து மாடு மேய்த்துப் பிழைக்கும் மாட்டுக்காரப் பையன் வரையும் – எல்லோருக்கும் ராமனையும் சீதையையும் பற்றித் தெரிந்திருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இப்படியாக, உயர் தத்துவங்களும் அறிஞர்க்கான அறிவுரைகளும் அடங்கிய நூல் பொதுமக்களுக்குள் பரவவிடாமல் மறைக்கப்பட்டு – ராமாயணமும், பாரதமும் எல்லோருக்கும் தெரியும்படி விளம்பரப்படுத்தப்பட்டுவிட்டன. திராவிடர்களை இழி மக்களென்று வலியுறுத்தும் நூல்கள் போற்றத்தக்க தன்மையைப் பெற்றுவிட்டன. திராவிடர்களைப் பற்றிப் புகழ்ந்து கூறும் நூல்கள் மறைந்திருக்கும்படி செய்யப்பட்டுவிட்டன. என்னே ஆரிய சூழ்ச்சி, என்னே நம்மவர் விபீஷணத் தன்மை!

ராமாயணத்தையும், பாரதத்தையும் எடுத்துக் கொண்டால், இவற்றுள் பாரதந்தான் முந்திய நூலாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். சிலர் ராமாயணந்தான் முந்தியது என்று கருதுகிறார்கள். அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். பாரதத்திற்கும் முந்திய நூல்தான் கந்த புராணம். கந்த புராணத்தையொட்டி சற்றுச் சிறியதாகப் படைக்கப்பட்டதுதான் பாரதம் என்று நான் நினைக்கிறேன். ஆரியத்தின் முதல் மத நூல், கந்த புராணந்தான். கந்த புராணத்தில் காணப்படும் இழிதன்மைகளை அதிகப்படுத்தியும், மனித வாழ்க்கைக்குச் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை சற்று அதிகமாகச் சேர்த்தும் எழுதப்பட்டதுதான் பாரதம்.

கந்த புராணம் சைவ முறையின் பாற்பட்டது; பாரதம் வைணவ முறையின் பாற்பட்டது. கந்த புராணத்திலும் பாரதத்தில் உள்ளதைக் காட்டிலும், அதிகமாக இயற்கைக்கு மாறான பிறவிகள் காணப்படுகின்றன. அநாகரிகமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இவையிரண்டிற்கும் பிறகு சிலகாலம் கழித்து எழுதப்பட்ட நூல்தான் ராமாயணம். எனவேதான், மேற்கண்ட இரண்டு நூல்களில் காணப்படும் அநாகரிகமும், அமானுஷியமும், இயற்கைக்கு மாறான பிறவிகளும் சற்றுக் குறைவாக ராமாயணத்தில் காணப்படுகின்றன. அடிப்படையில் கதைப் போக்கில் கந்த புராணமும், ராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.

– தொடரும்

விடுதலை – 5.11.1948

 
Read 36 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.