மாறுதல்கள் கடவுளினாலா? மனிதனுடைய அறிவாற்றலினாலா? விடுதலை தலையங்கம் - 10-10-1967

Rate this item
(0 votes)

மனிதனே சிந்தித்துப் பார்

கடவுள் இருக்கிறதோ இல்லையோ என்பது ஒரு புறமிருந்தாலும், கடவுளை உருவாக்கிக் கொண்ட மக்களும், தோத்திரம் செய்யும் மக்களும் காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்களா இல்லையா என்பதை அறிவுள்ள மக்கள் சிந்திக்க வேண்டுமென்றே விரும்புகின்றேன்.

இதில் வெறும் கோபத்தைக் காட்டுவதில் பயனில்லை. மனிதன் காட்டுமிராண்டி பருவத்திலிருந்து மாற்றமடைந்து அவனுக்குள்ள அறிவுத் திறனுக்கேற்ற மனிதத் தன்மையுடையவனாக ஆக வேண்டும்.

உலகமோ, அதிலுள்ள தாவரங்களோ, ஜீவஜந்துக்களோ, மனிதனோ தோன்றிய காலம் நமக்குத் தெரியாது. உத்தேசத்தால் ஏதோ சொல்லுகிறோம். அது எப்படியிருந்தாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால், மனிதன் தன் அறிவுத் திறனுக்கு ஏற்றபடி வாழ்வில் வளர்ச்சி பெற்றிருக்கிறானா என்பதுதான் மனிதன் சிந்திக்கத் தக்கதாகும்.

கல்லாயுத காலத்திலிருந்து இரும்பாயுத காலத்திற்கு வந்ததும், சக்கிமுக்கில்கல் நெருப்புக் காலத்திலிருந்து மின்சார நெருப்புக் காலத்திற்கு வந்திருப்பதும், கட்டைவண்டிப் பிரயாண காலத்திலிருந்து ஆகாய விமான பிரயாண காலத்திற்கு வந்திருப்பது முதலான எத்தனையோ விஷயங்களில் மாறுதலும், தெளிவும் அடைந்திருப்பதை எந்த மனிதனும் மறுக்க முடியாது.

பிறக்கும் மக்களில் 100 க்கு 75 பேர், 90 பேர் செத்துக் கொண்டிருந்த மக்கள் இன்று பிறந்த மக்களில் 100 க்கு 75 பேர் சாகாமல் இந்த 500 வருஷத்தில் ஒன்றுக்கு இரண்டாக உலகில் மக்கள் எண்ணிக்கை பெருகும்படி சாவு அளவையே மட்டுப்படுத்தியிருப்பதும் அறிவினால் என்றே அறிகிறோம்.

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இவற்றிற்கெல்லாம் என்ன சமாதானம் சொல்ல முடியும்?

இந்த மாறுதல்கள் கடவுளினாலா? மனிதனுடைய அறிவாற்றலினாலா என்பதைக் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் சிந்திக்க வேண்டும்.
1. முதலாவதாக கடவுள் எப்படி வந்தது?

2. கடவுளுக்கு உருவம் எப்படி வந்தது?

3. அதுவும் மனித உருவமாக இருக்க அவசியம் என்ன?

4. பல கடவுள்கள் எப்படி ஏற்பட்டன?

5. அந்த பல கடவுள்களுக்கும் பெண்டுபிள்ளைகள், காதலிகள் எப்படி ஏற்பட்டன?

6. பிறகு பெண்டு பிள்ளை, காதலிகளும் எப்படிக் கடவுள்கள் ஆனார்கள்?

7. இவற்றிற்கெல்லாம் வீடு, நகை, துணிமணி, சாப்பாடு முதலியவை எப்படி ஏற்பட்டன?

8. இவை மனிதர்களுடன், மற்ற ஜீவன்களுடன் யுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் அவர்களைக் கொலை செய்ய வேண்டிய அவசியமும் எப்படி வந்தது?

9. இக்கடவுள்களில் ஒன்றுக்கொன்று அதிக முக்கியத்துவம் உடையவையாக எப்படி ஆயிற்று?

10. இவை ஒருபுறம் இருக்க கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவைகளுக்கு கடவுள் சக்தி எப்படி வந்தது?

11. இக்கிணறு, குட்டை, குளம், ஆறு முதலியவற்றிலும் கடவுள் சக்தியும் அவற்றுள் உயர்வு தாழ்வும் எப்படி ஏற்பட்டன?

12. இவற்றிற்காக மனிதன் செலவு செய்யும் நேரம், பணம், முயற்சி ஆகியவை எவ்வளவு?

13. உலகில் துணி இல்லாமல், காய்கறி, ஜந்துக்கள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு, சேர்க்கையில் தாய், மகள், அக்காள், தங்கச்சி என்ற பேதம் பாராமல் வாழ்ந்து வந்த ஆரியர்களையும் உன்னையும் பார்! இன்று அவர்கள் அறிவில் அடைந்திருக்கும் முன்னேற்றம் எவ்வளவு? உன் நிலைமை எப்படி இருக்கிறது?

மனிதனே சிந்தித்துப் பார்!

 

விடுதலை தலையங்கம் - 10-10-1967 

 
Read 39 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.