கருங்கல்பாளையம் வாசகசாலை. குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.05.1925

Rate this item
(0 votes)

ஈரோட்டின் ஒருபகுதியாகிய கருங்கல்பாளையத்தில் சென்ற சில காலமாக நடைபெற்றுவரும் வாசகசாலையின் ஒன்பதாவது ஆண்டு நிறைவிழா நேற்றயதினம் இனிது நடந்தேறியது. நமது அருந்தலைவர் ஸ்ரீமான் சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் இவ்வைபவத்தின் அவைத் தலைமையை ஏற்று நடத்தியது இவ்வாசக சாலையின் பாக்கியமென்றே கூறுவோம். ஸ்ரீமான் ஆச்சாரியாரின் தலைமையில் அறிஞர் இருவர் அரிய சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். கருங்கல்பாளையம் வாசிகள் நேற்றைய தினம் காட்டிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஆண்டு முழுதும் தொடர்ந்து காட்டினார்களாயின் இவ்வாசக சாலை அண்மையில் பெரிதும் முன்னேற்ற மடைந்து விடுமென்று திட்டமாகக் கூறலாம்.

இத்தகைய வாசக சாலைகளின் அவசியத்தைப்பற்றி நாம் விரிவாகக் கூறவேண்டுவதில்லை. உலகில் மேம்பாடுற்று விளங்கும் நாடுகளில் வாசக சாலைகள் மிகுதியும் வளர்ச்சிபெற்றிருக்கின்றன. லட்சக்கணக்கான புத்தகங்களையும், ஆயிரக்கணக்கான அங்கத்தினரையுங் கொண்ட வாசகசாலைகளை மேனாடுகளில் ஒவ்வொரு சிறு நகரத்திலும் காணலாம். இலவச புத்தகாலயங்களும், பத்திரிகைக் கூடங்களும் எண்ணிறந்தன. அரசாங்கத்தாரும், பொது ஜனங்களும் தாராளமாக நன்கொடைகள் வழங்கி இவ்வாசகசாலைகளைப் போற்றி வளர்த்து வருகின்றனர். ஆனால் அடிமை நாடாகிய இந்தியாவில் அரசாங்கத்தாரின் உதவியை எதிர்பார்த்தல் வீண் ஆசையாகவே முடியும். பொதுவாழ்வில் பற்றுக்கொண்ட அன்பர்கள் ஆங்காங்கு முன்வந்து இத்தகைய வாசகசாலைகளை வளர்க்க முற்படவேண்டும்.

சுயராஜ்யப் போராட்டம் ஒருபுறம் நடந்துவருகையில், நாட்டாரின் கவனத்தை இச்சிறு விஷயங்களில் புகுத்துதல் சரியாமா என்று சிலர் ஐயுறலாம். தனிமனிதன், தனிக்குடும்பம், தனிப்பட்ட ஊர் இவர்களின் முன்னேற்றத்தின் வாயிலாக தேசத்தின் முன்னேற்றத்தை நாடுவதே எமது நோக்கமென்று தொடக்கத்திலே கூறியுள்ளோம். முக்கியமாக, ஸ்ரீமான் ஆச்சாரியார் தமது முடிவுரையில் எடுத்துக்காட்டிய வண்ணம், நமது நாட்டின் தற்போதைய நிலைமையில் வாசக சாலைகளும், இராப் பள்ளிக்கூடங்களும், இராட்டைச் சங்கங்களுமே பெரிதும் வேண்டற்பாலன. ஒரு தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் சிறிதுகாலம் பெருங்கிளர்ச்சியும், உத்வேகமும் தோன்றுவதுண்டு. இக்காலத்தில் பெருங் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் மிகுந்திருக்கும். சிறு சங்கங்கள் ஒளி மழுங்கித்தோன்றும். ஆனால், இவ்வுத்வேகக் கிளர்ச்சி என்றும் நீடித்திருக்கமுடியாது. பெருங் கிளர்ச்சியின் வேகம் குன்றுங்காலத்து நாட்டில் சோர்வு மிகுந்திருப்பது இயல்பு. இக்காலத்தில் சிறு சங்கங்களினாலேயே நாட்டிற்கு நீடித்த நன்மைகள் விளையும். இச்சிறு சங்கங்களின் மூலமாகவே மக்களின் குணத்தைப் பண்படுத்தவேண்டும். சத்தியம், உறுதி, தைரியம், விடாமுயற்சி முதலிய உயர் குணங்களை இச்சங்கங்களின் மூலமாகவே வளர்த்தல்கூடும்.

ஆகவே, நமது நாட்டின் தற்போதைய நிலைமையை உய்த்துணர்ந் தோர் இன்று நமது பெருந்தேவை சிறு சங்கங்களே என்பதை எளிதில் அறிந்துகொள்ளலாம். காந்தியடிகள் நிர்மாண திட்டத்தைப் பெரிதும் வலியுறுத்தி வருவதும் இக்கருத்துப் பற்றியே என்பது எமது உறுதி. ஆர்ப்பாட்டமும், உற்சாகமும் அடங்கிய இக்காலத்தில் பொதுஜனங்களிடையே திறமை, தைரி யம், சத்தியம் முதலிய உயர்குணங்களை வளர்த்து நிலையான அடித்தளத்தின் மீது சுயராஜ்ய மாளிகையை எழுப்புவதற்கான திட்டம் நிர்மாண திட்டமாகும். இத்திட்டத்தை நிறைவேற்றி வைப்பதற்குச் சிறு சங்கங்கள் பெருந்துணை யாயி ருக்கும். ஆகவே, தேச நன்மைக்கு இவ்வளவு இன்றியமையாததொரு விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு வழிகாட்டும் கருங்கல்பாளையம் வாசகசாலை நிர்வாகிகளுக்குத் தமிழ்நாட்டார் கடமைப்பட்டுள்ளார்.

இவ்வாசகசாலையில் சென்ற ஆண்டில் 1146 புத்தகங்கள் இருந்திருக் கின்றன. இவற்றுள் ஆங்கிலப் புத்தகங்கள் 463. தமிழ்ப்புத்தகங்கள் 683. தமிழ்ப்புத்தகங்கள் 643ம், ஆங்கிலப் புத்தகங்கள் 145ம் அங்கத்தினர் களுக்குப் பயன்பட்டன. தினசரி, வாரப் பத்திரிகைகளும், இரண்டொரு சஞ்சிகைகளும் தருவிக்கப்படுகின்றன. சென்ற ஆண்டில் அங்கத்தினரின் தொகை 76. வாசகசாலையின் ஆதரவில் இலவச இராப் பள்ளிக்கூடம் ஒன்று நடத்தப்படுகிறது. பெரியவர்களும் சிறுவர்களும் சேர்ந்து மொத்தம் 42 மாணவர்கள் கல்வி பயின்றனர். வரவு செலவுக் கணக்குகள் ஒழுங்காக வைக்கப் பட்டிருக்கின்றன.

காரியதரிசிகள் தங்கள் அறிக்கையில் எடுத்துக்காட்டுவதுபோல் அபிவிருத்திக்கு இடமில்லாமலில்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளாக இவ் வாசகசாலை நடந்து வருவதே மகிழ்ச்சிதரத்தக்க விஷயமாயினும் இத்துடன் திருப்தியடைந்திருத்தல் முறையன்று. கருங்கல்பாளையத்திலுள்ள பெரியோர் வாசகசாலை விஷயத்தில் அசிரத்தை காட்டுகின்றனர் என்று காரியதரிசிகள் வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கின்றனர். கருங்கல்பாளையம் வாசிகள் பெரும்பாலும் தனவந்தர்கள், மிராசுதாரர்கள், ‘தொழுதுண்டுபின் செல்பவர’ல்லர். இவர்கள் வயல்வேலை கவனித்த நேரம்போக மிகுதி ஓய்வு நேரத்தில் இவ்வாசக சாலை விஷயத்தைச் சிறிது கவனித்தாலும் எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வந்துவிடலாம். ஆண்டுவிழா அன்று மட்டும் வந்துவிட்டுப் பின்னர் வாசக சாலை யொன்றுண்டென்பதையே மறந்துவிடுவதால் யாது பயன்விளையும்? ஆகவே, இனியேனும் சிறிது ஊக்கங்காட்டி இளைஞர்களின் முயற்சிக்கு வலுவளிக்கும்படி கருங்கல் பாளையம் வாசிகளைப் பெரிதும் வேண்டிக்கொள்கிறோம்.

இனி வாசகசாலை நிர்வாகிகளுக்கு நாம் கூறவேண்டிய விஷயமும் ஒன்றுண்டு. அவர்கள் தேசத்தின் நிலைமையையறிந்து வாசகசாலையின் நடைமுறையை மாற்றி அமைத்துக்கொள்ளல் வேண்டும். அங்கத்தினர்கள் சில புத்தகங்களைப் படிப்பதற்காக மட்டும் வாசகசாலை ஏற்பட்டது என்று எண்ணுதல் கூடாது. நாட்டின் விடுதலைக்காக நடைபெறும் பெரிய தேசீய இயக்கத்திற்கு இவ்வாசகசாலையை ஒரு துணைக்கருவியாக அவர்கள் கருதவேண்டும். முக்கியமாக கதர் திட்டத்தை வளர்ப்பதற்கு இவர்கள் பெரிதும் துணைசெய்யலாம். அங்கத்தினர் அனைவரும் கதர் அணியும் படியும், இராட்டை சுழற்றும் படியும் இவர்கள் தூண்டுதல் வேண்டும். ஓர் இராட்டைச் சங்கம் காண்பதற்கு வாசகசாலை ஏற்ற இடமாகும். வாசக சாலை யில் இராட்டை, கதிர், கொட்டிய பஞ்சு முதலியவைகளைச் சேகரித்து வைத்து அங்கத்தினர் நூல் நூற்பதற்கு வேண்டிய வசதி செய்துகொடுக்க வேண்டும். விழாக்கள் நடத்துதல், பெரியாரை அழைத்துவந்து உபந்யாசம் செய்வித்தல் இவற்றுடன் தமது கடன் முடிந்து விட்டதாக அவர்கள் கருதுதல்கூடாது. இராப் பள்ளிக்கூடங்களில் ‘தீண்டாதா’ருக்கும் இடங்கொடுத்துத் தீண்டாமை விலக்குத்திட்டத்திற்குத் துணைசெய்யவும் இவர்கள் முன்வரவேண்டும். ஸ்ரீமான் ஆச்சாரியர் தமது முடிவுரையில் கூறிய உபதேச மொழிகளை மனதிற்கொண்டு வரும் ஆண்டில் இவர்கள் காரியம் செய்வார்களென்று நம்புகிறோம்.

ஈரோடு நகரசபையாரின் பெருந்தன்மையைப்பற்றி இங்குக் குறிப்பிடாமலிருக்க முடியவில்லை. மக்களின் அறிவுப் பயிற்சிக்கு ஆதாரமாயுள்ள இத்தகைய பொது ஸ்தாபனங்களை ஆதரிக்க, நகர வாசிகளின் பிரதிநிதிகளாய் விளங்கும் நகர பரிபாலன சபையார் வலிய முன்வரவேண்டும். ஆனால், நமது ஈரோடு நகரசபையாரோவெனில் வாசகசாலைக்குத் தண்ணீர் வசதி செய்து கொடுக்கவும் மனங் கொள்கிறார்களில்லை. சென்றவாண்டில் வாசகசாலையின் சொந்த செலவில் ஒரு தண்ணீர்க் குழாய் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இக்குழாய்க்கு மீடர் வைத்துக்கொள்ளவேண்டுமென்று இவ்வாண்டில் நகரசபையார் கூறுகிறார்களாம். தங்களுடைய நற்பெயரை முன்னிட்டேனும் இவர்கள் இந்த யோசனையை வற்புறுத்தமாட்டார்களென நம்புகிறோம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.05.1925

 
Read 35 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.