புராணக் கதைகள் தோன்றிய இரகசியம்!

Rate this item
(0 votes)

பிராமணீயத்தில் பிரம்மன் முதலிடம் பெற்றுள்ளான்; இதற்குக் காரணம் பிராமணர் தமது இனத்துக்கு முக்கியத்துவம் தரவேயாகும். மற்றும், பிரஜாபதி என்ற தேவனும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரஜாபதி லிங்க வரலாறு பற்றிய கதைகள் அசிங்கமாக அருவருக்கத்தக்கவையாக உள்ளன. பிரஜாபதி என்றால் உலகை உற்பத்தி செய்யும் கடவுளெனப்படுகிறது. இதனை சில இடங்களில் 4 ஆவது தேவனென்று குறிப்பிட்டுள்ளனர். மூவுலகின் தந்தையும் சிருஷ்டி கர்த்தாவும் இந்த தேவனென வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதைப் பற்றிக் கூறப்படும் கோட்பாடுகள் ஒத்துவரவில்லை.

பிராமணர்கள், காலப்போக்கில் அரசியல் நோக்கங்களுக்காக இக்கோட்பாடுகளையெல்லாம் தோற்றுவித்திருக்கவேண்டும். அதாவது, தங்கள் ஜாதியை உயர்த்திக் காட்டவும், ஜாதி வேற்றுமைகளை நுழைக்கவும் செய்த ஏற்பாடாகவிருக்கும். பிராமண ஆதிக்கம் தலைசாயும் காலத்தில்தான் இந்த ஜாதி வேற்றுமை அதிகரிக்கப்பட்டு பிராமணர்களை உயர்த்திக்காட்ட தீவிர முயற்சிகள் செய்யப்பட்டன; இதற்காகத்தான் பிரம்மன் என்ற தேவனைக் கற்பித்து முதல் தேவனாக்கியுள்ளனர். பிற்கால வேத நூல்களில் இந்த பிரம்மனைப் பற்றிய குறிப்பே கிடையாது.

மனுவின் காலத்தில்தான் பிரம்மன் முக்கியமாக்கப்பட்டுள்ளான். அதாவது, ஜாதி வேற்றுமைகளை உண்டாக்க பிரம்மனைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். பிராமணருக்கு உயர்வு தரவே பிராமணரின் பெயரடியாகப் பிரமன் கற்பிக்கப்பட்டு, விஷ்ணுவுக்கும், சிவனுக்கும், தகப்பனும் மேலானவனும் என்று காட்டியுள்ளனர். பிரம்மனே தன் உடலிலிருந்து உலகை சிருஷ்டித்தானென புனைந்துள்ளனர்.

மதிப்பாரில்லை

மற்றும், இந்தப் பிரம்மன் பொன் முட்டையிலிருந்து பிறந்தானாம். ஆனால், இந்தப் பிரம்மனை யாரும் வணங்குவதோ, மதிப்பதோ இல்லை; மக்களுக்கு உலகானுபவமும் பகுத்தறிவும் வளர வளர, இந்தப் பூசாரிகளின் கொள்கைகளில் நம்பிக்கை குறையலாயிற்று. மற்றும் பல குழுவினர் தலை தூக்கி ஒவ்வொருவரும் தத்தமக்கென ஒவ்வொரு கடவுளை முக்கியமும் முதன்மையுமாக்கிக் கொண்டனர். ஆரியக் கோட்பாடுகளும் மதிப்பிழந்தன. வேதக் கடவுளுக்குப் போட்டியாக எண்ணற்ற கடவுள்கள் தோற்றுவிக்கப் பட்டன. வேதத்திற்கு வெகுநாட்களுக்குப் பின்பே சிவனும், விஷ்ணுவும் பிராமண மதத்தில் இடம் பெற்றனர். சிவன் என்ற கடவுளின் பெயர் வேதங்களில் இல்லை. அன்பு உடையவன், புனிதன் என்ற அர்த்தத்தில்தான் சிவன் என்ற பெயர் கையாளப்பட்டுள்ளது. அக்னியையே சிவன் என்றும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஷ்ணுவிலும் வேதகால விஷ்ணுவிற்கும் பிற்கால விஷ்ணுவிற்கும் வேற்றுமை காணப்படுகிறது. இதுவும் இனச்சிறப்புக் காட்டும் நோக்கத்துடன்தான் கற்பனை செய்யப்பட்டதேயாகிறது.

விஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இவை நிகழ்ந்த காலம் எவை என நிர்ணயமாகத் தெரியவில்லை. இந்த அவதார வரலாறுகள் எல்லாம் பிராமணீய சிறப்பு நோக்கத்துடன்தான் இருக்கின்றன. பிராமணீய மதத்தை எதிர்த்த அரசர்களை ஒடுக்க கற்பனை செய்யப்பட்ட கதைகள்தான் அவதாரக் கதைகள்!

ஏதாவது அரசனின் அடக்குமுறையிலிருந்து மக்களைக் காக்கத்தான் விஷ்ணு அவதாரம் செய்திருக்கிறார். எனவே பிராமணீயத்தை அரச குலத்தினர் எதிர்க்கும் போதெல்லாம் பிராமணீயத்துக்கு ஆபத்து நேரிடும் போதெல்லாம் இந்த அவதாரக் கதைகள் தோன்றியிருக்கவேண்டுமென எண்ணச் செய்கிறது.

மகாபாரதமும், இராமாயணமும் பிராமணீயத்தை எதிர்த்த அரச மரபினை அச்சுறுத்தி ஒடுக்கப் புனையப்பட்டவையாகும். எப்படியெனில், இந்த அரச மரபினர் ஒடுக்கப் படுவதற்கு முன்பே இந்தக் கதைகள் வழக்கில் இருந்திருக்கின்றன. பிற்காலத்தில்தான் இக்கதைகளில் வரும் இராமனையும், கிருஷ்ணனையும் பிராமணர்கள் அவதாரங்களாக்கிவிட்டனர். வேதங்கள் மதிப்பிழக்கவே, பூசைச் சடங்குகளைப் பிராமணர்கள் தோற்றுவித்து, அவற்றைத் தாங்களே செய்ய வேண்டுமென ஏற்பாடும் செய்து கொண்டனர். இந்தச் சடங்குகளைச் செய்யும் உரிமை பிறருக்குப் போகக்கூடாதென்றுதான், சமஸ்கிருத மந்திரங்களைப் பிறர் படிக்கக்கூடாது, ஒப்புவிக்கக்கூடாது என்று தெய்வ சாப பயம் காட்டி அச்சுறுத்தி தடைப்படுத்தி, அவற்றைத் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டனர்.

மற்றும் ஒரு தந்திரம் செய்தனர். அதாவது, பழங்குடிகள் வணங்கியவற்றை எல்லாம் பிராமண மதத்திலும் சேர்த்துக் கொண்டு அவர்களே பூசாரிகளாயினர்.

மற்றும் இந்த பூசை சடங்குகளுக்கு மதிப்புத் தருவதற்காக சுவர்க்கம் நரகங்களையும் கற்பனை செய்தனர். ஜாதி உயர்வு தாழ்வு கற்பித்தும், பல்வேறு பிறவிகள் கற்பித்தும், பிராமண ஜாதியே உயர்ந்தது என்று கூறியும், உயர்ந்த ஜாதியை மறுபிறப்பில் தானடைய முடியுமென்றும், இதற்காக பூசைகள் சடங்குகள் செய்யவேண்டுமென்று கூறியும் தங்கள் கொள்கைகளுக்கு ஆக்கம் தேடிக் கொண்டனர். பிதுர்கள் மூதாதைகள் பூசை என்பது பிராமணர்களுக்கு மதிப்பு தேடக் கையாளும் முறையே. இதற்காகத்தான் யமன் என்ற தேவனும் கற்பிக்கப்பட்டான். பூலோகத்தில் வசித்த முதல் மனிதனே செத்தபின் யமதர்ம ராஜனானான் என வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

மோட்ச - நரக பித்தலாட்டம்

மோட்சமடைய தவம் செய்ய வேண்டுமென்ற கோட்பாடும் சூழ்ச்சியாகவே இருக்கிறது. எப்படியெனில், இந்த தவம் செய்வதில் விதிக்கப் பட்டுள்ள கடுமையான விதிகளை நிறைவேற்றி, தவத்தில் முழு வெற்றி பெற்றவர்கள் யாரும் காணோம். இந்தப் பித்தலாட்டத்தை மறைக்கவே பிற்காலத்தில் பக்தி முறை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

கபிலம் - புத்தம்

இவற்றை எல்லாம் ஆட்சேபிக்கத் தான் மீமாம்சம், கபிலம் முதலியன, தோன்றின. கபிலம் என்பது பிராமணீயப் பித்தலாட்டங்களை வெட்ட வெளிச்சமாக்கும் கோட்பாடு கொண்ட இயக்கம். இக் கோட்பாடுகள் பிராமண மதத்தினரின் கடவுள் கொள்கைக்கே வெடி வைப்பதாகவுள்ளன. பவுத்தமோ பிராமண மதக் கோட்பாடுகளை அடியோடு பொய்யாக்கும் நோக்கம் கொண்டது.

நெடுங்காலமாக மோட்ச நரகத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. புத்த மதத்தின் செல்வாக்கைக் குறைக்கவே பார்ப்பனர்கள் காம லீலைகள் மிகுந்த கிருஷ்ணாவதாரக் கதையை மக்களிடையே அதிகம் பிரச்சாரம் செய்தனர். மற்றும், இன வேறுபாடுகளும் அதிகரிக்கப்பட்டன. பவுத்த மதத்தால் செல்வாக்கிழந்த பிராமண மதத்திற்குப் புத்துயிரளிக்கத்தான் சங்கராச்சாரி பாடுபட்டார். மற்றும் சைவை வைணவ மடங்கள் தோற்றுவிக்கப்பட்டதும் பவுத்த மடங்களுக்குப் போட்டியேயாகும். சங்கராச்சாரியார் காலத்திலும் அதற்குப் பின்னரும்தான் ஜாதிப்பிரிவுகள் அதிகரித்தன. இந்த ஜாதிப் பிரிவினைகள் தொல்லையானவை என்றும், மானக்கேடானவையென்றும் ஹிந்துக்கள் உணர்வதாகக் காணோம். ஆனால் பிராமணர்கள் கருத்தோ தங்கள், இனம் ஒன்றுதான் உண்மையான சுத்தமான ஜாதி; மற்ற ஜாதியாரெல்லாம் கலப்புகள் என்பதாகும்.

இப்போது பிராமணர்களின் மதிப்பு விரைந்து நசிந்து வருகிறது. உலகத் தொடர்பு அதிகமற்ற சில கிராமாந்திரங்களிலும் நகரங்களிலும் மூடக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் வட்டாரங்களிலும் மாத்திரமே இவர்கள் கொஞ்சம் மதிக்கப்படுகிறார்.

(மேலே குறிப்பிட்டவை என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா பேரகராதியில் காணப்படும் கருத்துகளாகும்.)

விஷ்ணு அவதாரம்

பரசுராமன், சத்திரியர்களை (ஆரியர்களுக்கு எதிராக இருந்த அரசர்களை) எல்லாம் கொன்று, அவர்களுடைய நாடுகளைக் கவர்ந்து, அவற்றைப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்தான். அதன் பின் தன் இறுதிக் காலத்தைக் கழிக்க சிறு நிலத்தைத் தந்துதவும்படி அவன் பார்ப்பனர்களைக் கேட்டானாம். ஆனால் அந்தப் பார்ப்பனர்கள் பரசுராமன் கேட்ட சிறு நிலமும் கொடுக்க மறுத்துவிட்டனராம். இதைக் கண்டு சீற்றமடைந்த பரசுராமன் அப்பார்ப்பனர்களைப் பழி வாங்கத் திட்டமிட்டானாம். பிறகு, வருணனை அடைந்தான். தான் யாரென்பதையும், தான் வந்த காரியத்தையும் வருணன் இடம் சொல்லி, அந்தப் பார்ப்பனர் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் தண்ணீரில்லாது போகச் செய்ய உதவி புரியும்படிக் கேட்டான். வருணனும் இணங்கினான். பரசுராமன் எய்யும் அம்பு எவ்வளவு தூரம் பாய்கிறதோ, அவ்வளவு தூரம் கல் கொள்ளச் செய்யவேண்டுமென்பது ஏற்பாடு ஆயிற்று. பரசுராமன் அம்பு எய்வதற்கு முன்னிரவு அவனுடைய வில்லின் நாண் பழுதாக்கப்பட்டு விட்டது. காலையில் எய்யப்பட்ட அம்பு அதிக விசை கொண்டு பாயாது. இப்போது உள்ள மலையாள நாட்டளவுக்குப் பாய்ந்து விழுந்தது. எனவே, மலையாளக் கரைப் பகுதிக்கப்பாலிருந்த நாடெல்லாம் கடல் கொள்ளப்பட்டு விட்டதாம்.

(இது கால்வின் - புராண ஆராய்ச்சி)

ஏராளமான பார்ப்பனர் கும்பகர்ணனுக்கு ஆகாரம்

கும்பகர்ணன் தவழும் குழந்தையாக இருந்தபோது தன் கைகளை நீட்டி அக்கையில் அகப்பட்டவைகளை எல்லாம் விழுங்கிவிட்டான். ஒரு சமயம் இந்திரனுடைய காமக்கிழத்திகளில் 5000 பெண்கள், 7000 ரிஷிபத்தினிகள், ஏராளமான பிராமணர்கள், பசுக்கள் ஆகியவற்றை விழுங்கிவிட்டதாக இராமாயண வரலாறு கூறுகிறது.

(இது கால்வின் - புராண ஆராய்ச்சி)

சேது- தமிழ் மன்னன் கட்டியது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள சேது (பாலம்) இராமாயணத்தில் வரும் அனுமானும் அவன் படைகளும் கட்டியதாகக் கூறப்படுகிறது. ஆயினும் சரித்திர ஆதாரமான ஓர் வரலாறு உள்ளது. அதாவது, மதுரை மன்னனிடம் தோற்ற மறவர் குல மன்னன் ஒருவனே இப்பாலத்தை அமைத்து, அவனும் அவனுடைய படைகளும் மதுரை மண்ணை விட்டுத் தப்பி இலங்கைக்குச் சென்றனர் என்பதாக.

(இது கால்வின் _- புராண ஆராய்ச்சி)

தெய்வலோக இறக்குமதி பித்தலாட்டம்

சிறந்த பொருள்கள், கலைகள், ஏதாவது இருந்தால் அவை தெய்வலோகத்திலிருந்து கொண்டு வரப் பட்டவையென்றும், தெய்வ வாக்கென்றும், கடவுள் அருள் பிரசாதமென்றும் கூறுவது ஹிந்துக்கள் (பிராமணர்) வழக்கம்.

(சர். வில்லியம் ஜோன்ஸ்)

அமெரிக்கர், இந்தியர் கூர்மாவதாரம்

அமெரிக்க, இரோகங் இந்தியர்களும் ஆமையைப் பற்றி ஒரு புராண வரலாறு கூறுகின்றனர்.

ஆதிகாலத்தில் ஆறு ஆண்டுகள் ஆகாச மண்டலத்திலிருந்தனர். ஆனால் பெண்கள் இல்லை. இனவளர்ச்சிக்காக ஒரு பெண்ணைத் தேடினர். தேவலோகத்தில் ஒரு பெண்ணிருப்பதாக கேள்விப் பட்டனர். ஒருவனை அங்கு அனுப்பத் தீர்மானித்தனர். ஆனால் அவ்வளவு தூரம் பறக்க முடிய வில்லை. அவன் கருடனின் உதவியை நாடினான். கருடன் அந்த ஆளைத் தேவலோகம் கொண்டு சேர்த்தான். அங்கு அவன் அந்தப் பெண்ணை மயக்கி வசப்படுத்தினான். அந்த நடவடிக்கைகளை அறிந்த பரமாத்மா சீற்றமடைந்து அப்பெண்ணையும், அவனையும் சொர்க்கலோகத்தில் இருந்து தள்ளிவிட்டார். அவர்கள் கீழே விழுவதைக் கண்ட ஓர் ஆமை அவனைத் தாங்கிக் கொண்டது.

மீன்களும், கடல் பூச்சிகளும் கடலடியிலிருந்து மண்ணை எடுத்து வந்த ஆமையைச் சுற்றிப் போட்டு மூடிவிட்டின. இவ்விதம் ஆன மண் கண்டமே உலகமாயிற்று; அப்பெண்ணிற்குப் பிறந்தவர்களே மனிதர்கள்.

(இது கால்வின்_ - புராண ஆராய்ச்சி)

பன்றித்தலை லட்சுமி

விஷ்ணு, பன்றி உருக் கொண்டது (வராகவதாரம்) பற்றி ஒரு சித்திரமுள்ளது. விஷ்ணுவின் உருவத்துடன் லட்சுமிக்கு 4 தலைகள். ஒரு தலை பன்றித் தலை. 8 ஆயுதங்கள் ஏந்திய எட்டுக் கைகள். இப்பெண்ணுருவத்தைச் சுற்றிப் பல பன்றிகள் வில்லேந்தியபடியுள்ளன.

(இது கால்வின்_ - புராண ஆராய்ச்சி)

கிரேக்க மன்னர் படையெடுப்பு வரலாறே இராமாயணம்

இராமாயணம், கிரேக்கரில் தீரேனிசால் அல்லது பஞ்சுரங்கதையே என விளக்குகிறார் சர். வில்லியம் ஜோன்ஸ். இந்த பஞ்சுரங் என்ற கிரேக்க வீரன் பெரும்படையுடன் இந்தியா முதலிய நாடுகள் மீது படையெடுத்து வந்தான். இந்தப் படையெடுப்பின் வரலாறாகவோ அல்லது அவ்வரலாற்றின் ஒரு பகுதியை ஒட்டிப் புனையப்பட்ட வரலாறாகவோ இராமாயணம் இருக்கவேண்டுமென்கிறார் இவர்.


தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட ஆரியர்களின் மத வேத சாஸ்திர புராணங்களின் புரட்டுக்களை ஆதாரங்களுடன் விளக்கும் நூல் : ”புரட்டு இமாலயப் புரட்டு” - பக்கம் 66 -74

Read 50 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.