பாரதி பாடல் புரட்டு - பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம். குடிஅரசு கட்டுரை-10.02.1929

Rate this item
(0 votes)

பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு.சுப்பிரமணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிர பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண் ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து, அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி, ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவுக்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புத்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்கள் பணத்தாசைக்குத் தக்கபடியும் நம்மவர்கள் மூடத்தனத்திற்குத் தக்கபடியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன.

இவ்வளவு கொள்ளையையும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அதுதன் ஜாதிப் புத்தியைக் காட்டியேவிட்டது. எப்படியென்றால். சாதாரணமாக அப்புத்தகத்தின்பேரால் சில பார்ப்பனக் குடும்பம் கொள்ளை அடித்ததை, சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்குக் காரணமே அப்புத்தகத்தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக சில இடத்தில் சொல்லியிருந்தாலும். சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமேயாகும். ஆனால், இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்து விட்டார்கள் எனத் தெரிய வருகின்றது.

அதாவது பாரதிபாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான மன்னும் இமயமலை எங்கள் மலையே என்னும் பாட்டின் அடிகளில் உன்னத பாரத நாடெங்கள் நாடே என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது. இது யாவருக்கும் தெரிந்ததேயாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்று திருத்திப் பதிக்கப்பட்டிருக்கின்றதாம். இம்மாதிரியாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டியதாகவே இருக்கின்றன.

இரண்டரையணா புத்தகத்திற்கு ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் படிப்பதின் மூலம் நமது பொருள் வீணாகுமன்றி, அது நம்மை ஏய்த்துத் தாழ்த்திவைத்திருக்கும் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தையும் கொடுக்க உபயோகப்படுகின்றது. நிற்க.

இந்தப் புத்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட யோக்கியர்களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக்கியத்தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரியமல்ல என்றாலும், நாட்டின் தேச பக்தர்கள் யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர்களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும், முழு மூடர்களுக்கும்கூட உதாரணம் வேண்டுமானால் இந்த பாரதிப் பாடல் புரட்டே போதுமென்று நினைக்கின்றோம்.

 நூல்: “பெரியார் களஞ்சியம் குடிஅரசு” தொகுதி - 8 பக்கம் 38-39

குடிஅரசு கட்டுரை-10.02.1929 

 
Read 31 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.