சுயமரியாதை இயக்க விஷயத்தில் பார்ப்பனப் பத்திரிகைகள். குடிஅரசு கட்டுரை - 31-03-1929

Rate this item
(0 votes)

தஞ்சைக்கு அடுத்த திருவையாற்றில் 28.02.1929 தேதியில் நடந்த பனகால் வாசகசாலைத் திறப்பு விழாவின்போது தஞ்சை உயர்திருவாளர். டி.வி. உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திய காலையில் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்கிப் பேசியதாகவும் குடி அரசையும் திராவிடனையும் படித்துப் பிள்ளைகள் கெட்டுபோகக் கூடாது என்று சொன்னதாகவும் இந்த ஊருக்குச் சுயமரியாதை இயக்கத்தார் வந்தால் அவர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று சொன்னதாகவும், மற்றும் பல விபரீதமான விஷயங்கள் பேசியதாக சுதேசமித்திரன் நிருபர் பெயரால் 04.03.1929 தேதி மித்திரனில் வெளியாயிருந்ததற்கு திரு.உமா மகேசுவரம் பிள்ளை அவர்கள் மறுத்து தான் பேசாத விஷயங்களையும் நினைக்காத விஷயங்களையும் மித்திரனில் எழுதி இருப்பதாகக் குறித்து மித்திரன் யோக்கியதையை வெளியிட்டிருப்பதுடன் அன்று தான் பேசிய விஷயம் இன்னது என்பதையும் சென்ற மலரில் வெளியிட்டிருக்கின்றோம்.

எனவே சுயமரியாதை இயக்க விஷயத்தில் பார்ப்பனப் பத்திரிகைகளும் அதன் நிருபர்களும் அவர்களை நத்தித்திரியும் பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் நிருபர்களும் எவ்வளவு இழிவாய் நடந்து கொள்ளுகிறார்கள் என்பதற்கு இதையும் ஒரு உதாரணமாய்க் கொள்ள வேண்டுகின்றோம். தவிர, திரு.பிள்ளையவர்களிடம் நமக்குக் குழந்தைப் பருவம் முதல் பழக்கமுண்டு அவர் சுபாவத்தில் தன்னை அடிக்கடி தாழ்த்திப் பேசிக் கொள்ளுகின்ற பெருமையான குணமுடையவர். மற்றவர்களிடம், உண்மையிலேயே குற்றம் கண்டுபிடித்தாலும் அதையும் தன்னைத் தாழ்த்திப் பேசிக் கொள்ளுவதன் மூலமே வெளிப்படுத்தவும் கண்டிக்கவும் ஆற்றலுடையவர். நாமறிந்தவரை அவர் அந்நியரை இகழ்ந்தோ தாழ்த்தியோ பேச நாம் கேட்டதில்லை.

இதைப் பற்றி நாம் ஏன் இங்கு இவ்வளவு எழுத நேரிட்டது என்பதைப் பற்றிச் சிலர் அய்யுறக் கூடும் (அதாவது பிள்ளையவர்கள் இனியாவது குற்றம் கூறாமலிருக்க வேண்டி நாம் அவரைப் புகழ்வதாகச் சிலர் கருதக் கூடும்) உண்மையில் நாம் அதைப் பற்றி (பிள்ளையவர்கள் வசவைப் பற்றி) கவலை கொள்ளவில்லை. முதலாவது பிள்ளைக்கு வையத் தெரியாது. அப்படி மீறி எங்காவது இரவல் வாங்கிக் கொண்டு வைதாலும் எத்தனையோ பேரின் வசவை நித்தியமும் சகஸ்ரநாமமாகக் கொள்ளும் நமக்கு பிள்ளையவர்களின் வசவு அதிக பாரமாய் போய்விடாது. மற்றபடி என்னவென்றால் திரு.பிள்ளையவர்கள் மித்திரன் கூற்றை மறுத்தெழுதிய தனிக்குறிப்பில் கண்டுள்ள விஷயமும் நமக்கும் பிள்ளைக்கும் பொதுவாழ்வு சம்பந்தமாக மாத்திரமல்லாமால் குடும்ப சம்பந்தமாகவும் பெரியோர்கள் காலம் முதல் 30, 40 வருஷமாக உள்ள நெருக்கமான பழக்கமும் மித்திரனின் பொய் நிருபத்தைக் கண்டு எம்மிருவர்களுடையவும் பல நண்பர்களுக்குள் அபிப்பிராய பேதம் நிகழ்ந்ததாகத் தெரிய வந்ததாலும் இக்குறிப்பு எழுத வேண்டியதாயிற்று.

தந்தை பெரியார்

குடிஅரசு கட்டுரை - 31-03-1929

 
Read 22 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.