நபிகள் நாயகம். 20.12.53

Rate this item
(0 votes)

முகமதுநபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை என்பதை ஒப்புக் கொள்ளமுடியாத நம் போன்றவர்களும் மற்றும் பல தேசத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒப்புக்கொள்வதற்கும் மேற்கோள்களாக எடுத்துக் காட்டுவதற்கும் பல கருத்துகள் இருக்கின்றன.

முதலில் அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு, பல கடவுள்கள் இல்லை என்றார். நீங்கள் கேட்கலாம், நபி அப்படி அதாவது ஒரு கடவுள் என்று சொன்னார்; இதைப்பற்றி என் கருத்து என்ன என்று? என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்கிறேன். கடவுள் என்று மக்கள் ஆயிரக்கணக்கான கடவுள்களைக் கட்டியழுகிறவர்களைவிட, நபி அவர்கள் எவ்வளவோமேலானவர் என்பேன். முதலில் மக்கள், பல கடவுள்கள் என்பது பொய், ஒரு கடவுள்தான் மெய் என்ற நிலைக்கு வரட்டும்; மேற்கொண்டு அப்புறம் சேர்த்துக்கொள்ளலாம். நம் நாட்டுக்கு, நம் மக்களுக்கு இது எவ்வளவு நல்ல உபதேசமென்பதைச் சிந்தியுங்கள்.

அடுத்தபடியாக முகமது நபி அவர்கள் சொன்னது மனித சமுதாயத்தில் மக்களுக்குள் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு, பேதா பேதம், வித்தியாசம் இல்லை. யாவரும் சமமான பிறவியே என்று சொன்னார். இதுவும் மிக முக்கியமானதாகும். நம்மிலும் பல பெரியார்கள் இந்தப்படியாகச் சொன்னார்கள். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதுபோல எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவை வெறும் ஏட்டு அளவிலே இருக்கிறதே தவிர நடப்பில் இல்லை. ஆனால் முஸ்லீம் சமுதாயத்தில் நடப்பிலேயே ஒரே ஆண்டவன் வழிபாடும், மக்களுக்குள் பிறவியில் பேதமற்ற நிலைமையும் இருந்து வருகிறது. இது அவர்களைப் பொறுத்த மட்டிலுந்தான். அதாவது அவர்கள் மதஸ்தர்களைப் பொறுத்தமட்டிலுந்தான் என்று சொல்லப்பட்டாலுங்கூட, மற்ற மதங்களில் அந்த மதத்தில் கட்டுப்பட்டுள்ளவர்களுக்குள்ளாகவே காட்டப்படும் பேதா பேதங்கள், வித்தியாசங்கள், முஸ்லீம் மதஸ்தர்களுள், அவர்களுக்குள்ளாக காண்பிக்கப்படுவதில்லையல்லவா?

இன்றையதினம் நமக்குள்ளும் இந்த உணர்ச்சி, அதாவது முஸ்லிம்கள் நபி அவர்களைப் பின்பற்றுகிறவர்கள், எப்படி ஒரு ஆண்டவன், மக்கள் அனைவரும் ஒருகுலம் என்பதான தன்மை உடையவர்களாக இருக்கிறார்களோ, அதே போன்ற உணர்ச்சியும் கருத்தும் இன்று நமக்குள்ளும் தோன்றிவிட்டது. தவிரவும் இந்த மாதிரியான உணர்ச்சி என்பது இன்றைக்கு ஒரு ஃபேஷனாகவும் போய்விட்டது. இதற்குக் காரணம் என்ன? நபியவர்கள் உபதேசம் அமலில் இருப்பதேயாகும்.

அடுத்தாற்போல முகமது நபி அவர்கள் விக்கிரக ஆராதனையை அந்தக் காலத்திலேயே மிகவும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். இதில் மிக வேகமாகவே போயிருக்கிறார். விக்கிரகத்தை முஸ்லீம்கள் தொழக்கூடாது. அப்படி விக்கிரகத்தை வணங்குகிறவன் முஸ்லீமே அல்ல என்று சொல்லி, அந்த அளவுக்கு அவர் உருவ வணக்கத்தைக் கண்டித்து, முஸ்லீம்களை வெறுக்கும்படிச் செய்துள்ளார். இதுவும் மிகவும் பாராட்டத்தக்க, போற்றத்தக்க காரியமாகும் என்பதோடு இவையெல்லாம் நம் மக்கள் பின்பற்றவேண்டிய ஒரு பெரிய படிப்பினை என்பேன். இந்தக் காரியங்களைத் தவிர மற்றும் மிக முக்கியமானதொன்றை நபி அவர்கள் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னவற்றிலே இது மிகவும் முக்கியமாய்க் கவனத்தில் வைக்கவேண்டிய காரியமாகும். என்ன? அவர் சொல்கிறார். நான் என்ன சொல்லியிருந்தாலும், அவற்றில் உனக்குச் சந்தேகம் இருந்தால் நீ உன் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்! என்பதாகச் சொல்லியிருக்கிறார்.

தோழர்களே! மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறேன். நபி அவர்கள், மக்கள் சமுதாயத்துக்கு ஒரே கடவுள்; மக்கள் சமுதாயம் ஒரே குலம்; உருவ வழிபாட்டுக்கு மக்கள் ஆளாகக்கூடாது; நான் என்ன சொல்லியிருந்தாலும் அவற்றை உங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்பதாகச் சொல்லியிருக்கிறார்.

கடைசியாக இன்னொன்றும் சொன்னார்; நான்தான் கடைசி நபி; எனக்குப் பின்னால் நபிகள் (தீர்க்கதரிசிகள்) தோன்றமாட்டார்கள் என்று. அதைப்பற்றி நீங்கள் எப்படிக் கருதினாலும், என்ன முடிவுக்கு வந்தாலும் இன்றைய வரையிலே அவருக்குப் பின்னால் இந்தத்துறைகளில் அவர் சொன்ன கொள்கை, கருத்துகளைவிட மேலானதாகச் சொல்வதற்கு ஒருவரும் தோன்றவே இல்லை. அந்த அளவுக்கு மனித சமுதாயத்தின் எல்லா வாழ்வுத்துறைத் தன்மைகள்பற்றியும் உயர்ந்த தத்துவங்கள் கொண்ட கோட்பாடுகள் சொல்லிவிட்டார் நபி அவர்கள்.

ஏதோ பொருளாதாரத் துறையில் சில பெரியார்கள் சில நூறு வருடங்களுக்கு முன்தோன்றி, பல அரிய கருத்துகளை, பொருளாதாரத் துறையைப் பொறுத்தவரையில் சொல்லியிருக்கிறார்கள். தோழர் ஜீவானந்தம் அவர்கள், அதைப்பற்றியும்கூட நபி அவர்கள் சொல்லியிருக்கிறார் என்று சொல்லிவிட்டார். அது மிகவும் மகிழ்ச்சிக்கு உரியது என்பதோடு, நபியவர்கள் சொன்னதற்கு மேலாக இதுவரை யாரும் எந்த ஆஸ்திகரும் சொல்லவில்லை.

இந்த விழாவிலிருந்து நாம் என்ன பயன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நபி அவர்களின் இக் காரியங்களையும் கொள்கைகளையும் நம் மனதில் பதிய வைத்துக் கொண்டு, அந்தப்படி நடக்க நாமும் முயற்சி செய்யவேண்டும்.

மற்றும் தங்கள் மத சம்பந்தமான கோட்பாடுகளில் முஸ்லீம்கள் மற்றவர்களையும் அழைத்து, மற்றவர்களுடைய பாராட்டைப் பெறவேண்டும் என்று கருதுகிறார்களோ, அதேபோல மற்ற மதக்காரர்களும் தங்கள் மத சம்பந்தப்பட்ட காரியங்களில் மற்றவர்களை அழைத்து அவர்களின் பாராட்டைப் பெற முயற்சிக்க வேண்டும். அப்பொழுதுதான் முன்னேற்றத்திற்கு வழிதோன்றும்.

20.12.53 அன்று சென்னை அய்க்கோர்ட் கடற்கரையில் நடைபெற்ற நபி பிறந்த தின விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

Read 23 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.