சுயமரியாதையை உண்டாக்கி அறிவை வளர்க்கவே நமது குடிஅரசு. குடிஅரசு தலையங்கம் - 05.05.1929

Rate this item
(0 votes)

(நமது பத்திரிகை என்ற தலைப்பில் குடிஅரசின் அய்ந்தாவதாண்டு தொடக்கத்தில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட தலையங்கம் இது.)

குடிஅரசு அபிமானிகளே!

நமது குடிஅரசு தோன்றி நான்காவதாண்டு கடந்து, அய்ந்தாவதாண்டின் முதல் இதழ் வெளியாக்கும் பேறு பெற்றமைக்கு மகிழ்வெய்துகின்றோம். அது தோன்றிய நாள் தொட்டு இன்றைய நாள்வரை மக்கள் முன்னேற்றத்திற்கும், நாட்டின் விடுதலைக்கும் தன்னால் இயன்றதைச் சிறிதும் ஒளிக்காமல் தொண்டாற்றி வந்திருக்கும் விஷயம் நாம் எடுத்துக் காட்டாமலே அன்பர்கள் உணர்ந்திருக்கலாம்.

இதன் ஆசிரியராகிய யாம் சுமார் 30 ஆண்டு உலக வாழ்க்கை அனுபவம், அதாவது வியாபாரம், விவசாயம் அனுபவமும், சுமார் இருபதாண்டுப் பொது நலவுழைப்பு என்பதின் பேரால் அதாவது உள் ஊர் அக்கப்போர்கள், ஜில்லா பொதுநல சர்க்கார் சம்பந்தமில்லாத ஸ்தாபனங்கள், சர்க்கார் சம்பந்தமுள்ள ஸ்தல ஸ்தாபனம் முதலியவைகளில் நிர்வாக விஷய அனுபவமும் அரசர்கள், அதிகாரிகள் ஆகியவைகளின் கூட்டுறவு, அனுபவமும், ஜமீன்தார்கள், பிரபுக்கள், ஏழைகள், காலிகள் ஆகியவர்களின் நெருங்கிய நேச அனுபவமும், இவைகளெல்லாம் அல்லாமல் வீட்டையும் குடும்பத்தையும் விட்டு, துறவறம் கொள்ள எண்ணம் கொண்டு வெளிக்கிளம்பி சன்னியாசி வேஷமிட்டு, காவி தரித்து, சாமியாராகி இந்தியா முழுவதும் சுற்றி அலைந்த பிறகு, அதையும் விட்டு, வெறும் கோவணத்துடன் தெருப்பிச்சை எடுத்து, பிறகு அதையும் விட்டு, எச்சிலையில் கிடப்பதை எடுத்து உண்டது ஆகிய வாழ்க்கைகளிலும் ஈடுபட்ட அதன் அனுபவமும், கடைசியாக அரசியலுக்கும் சமுக இயலுக்கும் என்று சென்னை மாகாண சங்கம் உபதலைவராகவும், தேசியவாதிகள் சங்க காரியதரிசியாகவும், காங்கிரஸ் இயக்கம் என்பதில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு மாகாணத் தலைவர், காரியதரிசி ஏக தலைவர் ஆகிய பதவிப் பேறும், வைதீக ஒத்துழையாமை கொள்கைக்கு முக்கிய தலைமையும் மற்றும் சத்தியாக்கிரகம், சர்க்கார் உத்திரவு மீறுதல் உண்மையை ஒளிக்காமல் பேசுதல் ஆகியவைகளுக்கு ஆக பல தடவை அரசாங்க தண்டனைக்கு ஆளாகி சிறை வாசம் அடைதல் ஆகிய பல பேறுகளும் பெற்றதன்மூலம் சிறிது சிறிதாய் உலக அனுபவம் பெற்று, அவைகளின் பயனாய் நமது நாட்டின் உண்மை விடுதலைக்கு விரோதியாயிருப்பது பார்ப்பனியமே என்பதையும், அதன் ஆதிக்கம் வலுத்திருப்பதற்குக் காரணம் நமது மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சியும், அறிவு வளர்ச்சிக்கு இடமும் இன்மையே என்பதையும், அதற்கு முக்கிய காரணம் மூடநம்பிக்கையே என்பதையும் உணர்ந்து, சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்கி, அறிவை வளரச்செய்து மூடநம்பிக்கைகளை ஒழித்துப் பார்ப்பனியத்தை அடியோடு அழித்து மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கவேண்டும் என்கின்ற ஒரே ஆசையின் மீதே இக் குடிஅரசு பத்திரிகையை ஆரம்பித்த நாம் அதற்கேற்ப இத்தமிழ்நாடு முழுவதும் இடைவிடாமல் சுற்றிச்சுற்றி அலைந்து திரிந்து சொற்பொழிவாற்றிக் கொண்டுமிருப்பவராவோம். எனவே இப்படிப்பட்ட நிலையில் இதன் கொள்கை என்ன என்பதையும் இது என்ன செய்தது என்பதையும், உலகமே அறிந்ததாதலால் இதைக் குறிப்பிட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.

நிற்க, இக்கொள்கையைக் கடைபிடித்து நடந்து வந்த சென்ற நான்கு வருஷகாலமாய் குடிஅரசானது முதலில் யாருடைய உதவியும் இன்றி பிரவாக வெள்ளத்தில் எதிர்நீச்சல் நீந்த வேண்டியது போன்ற மிகக் கஷ்டமான காரியத்தில் இறங்கி இருந்ததோடு செல்வமும் செல்வாக்கும் பெற்ற பெரியோர்கள் என்பவர்கள் முதற்கொண்டு, மானமும், ஈனமும் அற்ற காலிகள் என்பவர்கள் வரையும், அறிவும் ஆராய்ச்சியும் உள்ளவர்கள் என்று சொல்லப்படும் பண்டிதர்கள் முதல் தனக்கும் அறிவில்லாமல் பிறர் சொல்வதையும் கேட்க இயலாமலும் உள்ள பிடிவாத சுயநலக்காரர்கள் வரையிலும் உள்ளவர்களின் இரக்கமும் மனிதத் தன்மையும் அற்ற எதிர்ப்புக்கு ஆளாகி வந்தும், மேற்கூறிய எவ்வித எதிர்ப்பும் இடையூறும் இல்லாமல் தாராளமாய் விடப்பட்டிருந்து மேற்கண்டவர்கள் எல்லாம் நேசமாயிருந்து உதவி செய்து வந்திருந்தாலும்கூட அது உத்தேசித்துள்ள காரியங்களில் எவ்வளவு செய்திருக்க முடியுமோ அவற்றை எல்லாம்விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகவே செய்திருக்கின்றதென்றே நாம் மனப்பூர்வமாக உணருகின்றோம்.

இதற்கு உதாரணம் என்னவென்றால் முதலாவதாக குடிஅரசு இன்றைக்கு வாரம் ஒன்றுக்கு 9500 பிரதிகள் வெளியாகின்றதும், அடிக்க அடிக்க பந்துகிளம்புவது போல் எதிர்க்க எதிர்க்க வாசகர்கள் அதிகமாவதும் மற்றும் குடிஅரசு கொள்கைகளை ஆதரிக்கும் பத்திரிகைகளுக்கும் இதுபோலவே பல ஆயிரக்கணக்காக பிரதிகளும் வாசகர்களும் பெருகிக்கொண்டு போதலும் இக்கொள்கைக்காக என்றே புதிதுபுதிதாகப் பத்திரிகைகள் துவக்கப்படுதலும் அவைகளுக்கும் ஆரம்பத்திலேயே செல்வாக்கு பெருகுதலும், இரண்டாவதாக இக்கொள்கைகளை அனுபவத்தில் ஏற்றுக்கொண்ட மக்களுக்கும், இக்கொள்கைகளை உபதேசிக்கும் மக்களுக்கும், இக்கொள்கைகளை ஒப்புக்கொண்ட ஸ்தாபனங்களுக்கும் நாட்டில் செல்வாக்கும் மதிப்பும் வளர்தலும் மூன்றாவதாக இக்கொள்கைகளுக்கு எதிரிடையாக உள்ள பத்திரிகைகளுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் ஸ்தாபனங்களுக்கும் மதிப்பும் செல்வாக்கும் குறைந்து போதலும் முதலாகிய காரணங்களால் உணரலாம். அன்றியும் எங்கு பார்த்தாலும் அடிக்கடி இக்கொள்கைகளைப் பரப்புவதற்காக மாகாண ஜில்லா தாலுகா சுயமரியாதை மகாநாடுகள் நடப்பதும், இக்கொள்கைக்கு விரோதமான ஸ்தாபனங்கள் என்று சொல்லப்படும் காங்கிரஸ், தேசியம் முதலிய அரசியல் புரட்டு ஸ்தாபனங்களுக்கு நாட்டில் சிறிதும் செல்வாக்கற்று இரண்டு மூன்று வருஷமாக நமது நாட்டில் அரசியலின் பேரால் மாகாண மகாநாடுகூட நடத்த முடியாமலும், ஜில்லா தாலுகா மகாநாடுகள் என்பதுகள் கூட நடப்பதென்பது மிக அருமையாயும் போய்விட்டதோடு சுயமரியாதைக் கொள்கைக்கு விரோதமான கூட்டத்தார் வெளியில் தலைகாட்டவோ மேடை ஏறுவதற்கோ லாயக்கில்லாத முறையில் அடங்கிக் கிடக்கவேண்டிய நிலைமையை உண்டாக்கியிருக்கின்றது. சுருங்கச் சொன்னால் அரசியல் சமுதாய இயல் ஆகிய புரட்டுகளை மக்களுக்கு வெட்டவெளிச்சமாக்கி அதன்பேரால் ஏமாற்றி வயிறு வளர்த்தவர்களையும், ஆதிக்கம் பெற்று வந்தவர்களையும் ஒருவாறு ஒடுங்கச் செய்துவிட்டதென்றே சொல்லவேண்டும். நிற்க, சமயப் புரட்டுத் துறைகளிலும் எதிர்பாராத அளவு அவைகளை வெளியாக்கி அவற்றின் போலி ஆதிக்கத்தை ஒருவாறு அழித்துக் கொண்டு வருகின்றது என்று சொல்லலாம்.

உதாரணமாக ஆயிரக்கணக்கான சாமிகளுக்கு இருந்த மதிப்புகள் எல்லாம் மலை உச்சியிலிருந்து உருட்டிவிட்ட உருண்டைக் குன்றுபோல் வேகமாக இறங்கி வருகின்றது. அவற்றின் பூசைகள், உற்சவங்கள் ஆகியவைகளின் யோக்கியதைகளுக்கும், முன்னிருந்த மதிப்பில் பகுதி மதிப்புக்கூட இல்லாமல் இருந்து வருகின்றது. சில இடங்களில் வெகுகாலமாய் நடந்து வந்த உற்சவங்களும், பூஜைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. சாமிகளும் அவற்றின் பூசைகளும் உற்சவங்களும் இக்கதியினால் சடங்குப் புரட்டைப் பற்றி நாம் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது என்றே நினைக்கின்றோம். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் சடங்கை நிறுத்தினவர்களும் ஜாதிப் பட்டத்தை எடுத்து விட்டவர்களும் சமயக் குறியைத் தள்ளிவிட்டவர்களும் ஆயிரமாயிரக் கணக்காகத் தைரியமாகப் பெயர் கொடுத்து வருகின்றார்கள். இவ்வளவும் அல்லாமல் இத்தனைக் காலம் ஏமாற்றியதைப் போல் தேசத்தையும் தேசியத்தையும் சுயராஜ்யத்தையும் சொல்லிக் கொண்டு தேர்தலுக்கு நிற்க யாருக்கும் யோக்கியதை இல்லாமலும் செய்துவிட்டது.

உதாரணம் பாமர மக்களுக்குள்ள மற்றொரு மூடநம்பிக்கையை ஆதாரமாய் வைத்துக் கொண்டு அதாவது மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு நிற்கப் போவதாய் வெளியிட வேண்டியதாய் விட்டதே போதுமானது. சமுதாய புரட்டுத் துறையிலும் தீண்டாமை விலக்கைப் பற்றி எங்கும் வெகுதாராளமாய் பேசப்படுகின்றது. சமபந்தி போஜனம் அதிசயிக்கத் தக்க வண்ணம் முன்னேறி வருகின்றது.

பொதுவாக இவைகளுக்கு ஒரு கடுகளவு அறிவுள்ள கூட்டத்திலும் அணுவளவு ஆட்சேபமாவது அதிருப்தியாவது கிளம்புவதாக யாருமே சொல்ல முடியாத நிலைமை, எய்திவிட்டது என்று உறுதியாய்ச் சொல்லலாம். ஆனால் பொறாமைக்காரர்களுடையவும் சுயநலக்காரர்களுடையவும் அவர்களது கூலிகளுடையவும் எதிர்ப்பும் அதிருப்தியும் சிறிதாவது இல்லை யென்று சொல்ல முடியாது. என்றாலும் அவர்களையும் இக்கொள்கைகளை நேரான முறையில் வெளிப்படையாய் எதிர்ப்பதற்குத் தைரியமற்றவர்களாக்கி சூழ்ச்சியிலும் பித்தலாட்டத்திலுமே தான் மறைமுகமாய் தலைகாட்ட முடியும்படியாகச் செய்திருக்கின்றது.

இதுபோலவே கல்யாண முறையிலும் சாதாரணமாய் எதிர்பார்க்க முடியாத அளவு சீர்திருத்தமும், கலப்புமண உணர்ச்சியில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக ஆவலும், பெண் உரிமையில் ஆண்களைவிட அதிகமான உரிமை பெண்களுக்கு வேண்டும் என்று பெண்களே கருதத்தக்க வண்ணமும் ஆண்கள் சிறிதும் ஆட்சேபிக்க முடியாமல் தலை குனிந்து ஒப்புக்கொள்ள வேண்டிய தான உணர்ச்சியும் உண்டாயிருக்கின்றது.

இவைகள் தவிர சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்பவை முதலியவற்றின் யோக்கியதைகளும், புரட்டுகளும் சந்தி சிரிக்கத் தக்க வண்ணம் வெளியாகி முக்கிய சாஸ்திரங்கள் இதிகாசங்கள் என்பவைகளை அதாவது வருணாசிரமக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவைகளை ஆயிரம், பதினாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் முன் நெருப்பு வைத்து கொளுத்தத் தக்க ஆவேசமும், உணர்ச்சியும் ஏற்பட்டு விட்டது. தினம் தினம் வருணாசிரம மகாநாடுகளும் அடிக்கடி சைவ சமய மகாநாடுகளும் மூலை முடுக்குகளில் கூட்டி குடிஅரசையும் அதன் கொள்கைகளையும் கண்டிப்பதும், சட்டசபைகளில் சரமாரியாக கேள்விகளைக் கேட்பதும் ஆகிய பல அவசியத்தைக் கொண்டு வந்தும் விட்டுவிட்டது.

இந்த சொற்ப காலத்திற்குள் இவ்வளவு காரியங்கள் நடைபெற்றதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போம். நாம் இத்தொண்டில் இறங்கிய காலம் முதல் இதுவரை யாருடைய வாக்கு சகாயமாவது, பண சம்பந்தமான உதவியாவது கடுகளவுகூட கிடையாது. இதற்கு விரோதமாய் எதிர்ப்புகள் மாத்திரம் மலிந்து கிடந்தன. பள்ளிக்கூட படிப்பில்லாமலும் பத்திரிகை அனுபவம் சிறிதுமில்லாமலும் உள்ள நிலையில் இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதும் நமக்கெதிராக அநேக பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்து எதிர்த்துக் கொண்டிருந்தன. உதாரணமாக நமது பத்திரிகை விளம்பரத்தைக்கூட எவ்வளவு பணம் கொடுத்தாலும் விளம்பரப்படுத்த சுதேசமித்திரன், நவசக்தி போன்றவைகள் மறுத்துவிட்டன. பத்திரிகை வெளிப்படுத்தும் விஷயத்தில் தபால் ரயில் இலாகாவிலுங் கூட சகிக்க முடியாத தொல்லைகள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. எங்கு சென்றாலும் ஆங்காங்குள்ள ஸ்தல அதிகாரிகளின் தொல்லையும் வெகு தொல்லையாயிருந்தது.

இவ்வளவுமல்லாமல் நமது எழுத்துகளையும் சொற்களையும் நமது எதிரிகள் பாமர மக்களுக்குத் திரித்து எழுதியும், கூறியும் வந்த தொல்லைகள் எல்லாவற்றையும் விட அதிகமாக இருந்தன. அதோடு மாத்திரமல்லாமல் பத்திரிகை ஆரம்பித்தவுடன் நம்மை தேசத்துரோகி என்று தீர்மானித்து காங்கிரஸிலிருந்து வெளியாக்கி விட்டதாக நவசக்தி முதலிய பத்திரிகைகளின் பிரச்சாரமும் நாம் காங்கிரஸிலிருந்து பணம் திருடிக் கொண்டதாக தமிழ்நாடு முதலிய பத்திரிகைகளின் பிரச்சாரமும் பறை அடிப்பதுபோல் மூலை முடுக்குகளில் எல்லாம் செய்து வந்ததல்லாமல் மலேயா முதலிய வெளிநாடுகளுக்கும் ஆட்களை அனுப்பி அங்கும் விஷமப் பிரச்சாரம் செய்தும் சில சந்தாதாரர்களிடம் குடிஅரசு வரவழைப்பதை நிறுத்திவிட்டால் தமிழ்நாடுவை இலவசமாய் அனுப்புகின்றோம் என்று சொல்லியும், குடிஅரசை நிந்தித்துத் தாங்களே கடிதம் எழுதி அதில் பாமர சந்தாதாரர்கள் கையெழுத்து வாங்கி நமக்கனுப்புவதும், குடிஅரசுக்கு விளம்பரம் கொடுத்திருப்பவர்களிடமெல்லாம் சென்று குடிஅரசுக்கு விளம்பரம் கொடுக்கக் கூடாது என்று சகல செல்வாக்கையும் செலுத்தி பலவந்தம் செய்தும் கடைசியாக குடிஅரசு விளம்பரத்தை நிறுத்திக் கொண்டால் தமிழ்நாடுவில் இலவசமாய் விளம்பரம் போடுவதாகச் சொல்லி குடிஅரசுக்கு வந்த விளம்பரங்களை நிறுத்தியும், மற்றும் ஒவ்வொரு சமூகத்தாரையும் நமக்கு விரோதமாய்க் கிளப்பிவிடக் கருதி நாம் சொல்லாதவைகளையும், எழுதாதவைகளையும் எழுதியும் தங்கள் நிருபர்களைவிட்டு உட்கலகம் செய்யும்படி செய்தும், உதாரணமாக விருதுநகர் நாடார் சமுகத்தை நமக்கு விரோதமாக கிளப்பிவிட சூழ்ச்சி செய்ததும் ஆகிய எத்தனையோ இழித்தன்மையான எதிர்ப்புகள் எல்லாம் இருந்தும் இன்று குடிஅரசும் அதன் கொள்கையும் வெற்றியில் இருப்பதற்குக் காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? அப்படி யோசித்தால் என்ன பதில் கிடைக்கும்? ஒரே ஒரு பதில்தான் கிடைக்கும்.

அதாவது குடிஅரசோ அதன் ஆசிரியரோ ஆரம்ப காலம் முதல் மனதில் பட்டதை ஒளிக்காமல் சொல்லும் கொள்கைகளில் சமயத்திற்குத் தகுந்தபடி சுயநலத்தையே கருதி அடிக்கடி குட்டிக்கரணம் போடாமல் இருந்ததும், வேறு யாருடைய தயவையும் கையையும் எதிர்பாராமல் தன் காலிலேயே நின்று தன்னுடைய சொந்த செலவிலேயே இயக்கத்தை நடத்தினதுமே முக்கிய காரணமாகும் என்பதே! இதில் யாருக்காவது சந்தேகம் இருக்குமானால் விளக்குவதற்கு வெளிப்படையாகவே சொல்லுகின்றோம்.

அதாவது குடிஅரசு ஆரம்பித்த காலம் முதல் இன்றையவரை ஏதோ சிலர் கல்யாண காலத்திலும், கருமாதி காலத்திலும் 4 அணா, 8 அணா, ஒரு ரூபாய் வீதம் நன்கொடையாக அளித்து வந்ததில் மொத்தம் சுமார் 100 அல்லது 120 ரூபாய்கள் தவிர மேற்கொண்டு ஒரு அம்மன் காசாவது கொடுத்தவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லுவோம். ஆனால் குடிஅரசின் கொள்கையையும் தொண்டையும் ஒப்புக் கொண்ட சில நண்பர்கள் குடிஅரசுக்குச் சில சமயங்களில் பண உதவி செய்ய தாங்களாகவே முன்வந்த போதும் அதைத் திருப்பி விட்டு வேண்டுமானால் தயவு செய்து திராவிடனுக்கு உதவுங்கள் என்று கேட்டு கொண்டதன் மூலம் திராவிடனுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டிருக்கின்றது.

என்றாலும் திராவிடன், குடிஅரசுக்கு உதவியாய் நின்றதன் பயனாக குடிஅரசுக்கு ஏற்பட்ட உதவிக்கு நாம் நன்றி செலுத்தியாக வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இதுதவிர அதுபோலவே, நமது சுற்றுப் பிரயாணங்களுக்கும் நமது பிரச்சாரகர்களுக்கும் நண்பர்களுக்கும், இன்றைய வரை யாரும் எவ்வித பண உதவியும், செய்யப் பெறவில்லை என்றும், தைரியமாய்ச் சொல்லுவோம். பத்திரிகை நடத்துவதிலும், குடிஅரசு ஆரம்பித்த காலம் முதல் இது ஒரு வருஷம் தவிர; அதாவது மலேயா நாட்டுக்கு நமது சகோதரர் சந்தா சேர்க்கச் சென்றுவந்த வருஷம் தவிர, மற்றபடி நஷ்டத்திலேயே நடைபெறுகின்றதேயல்லாமல் வேறில்லை.

உடல்நிலையும் முதலாவது கண்பார்வை சற்றுக் குறைவு. தலைவலி, அடிக்கடி மயக்கம், ஜீரண குறைவால் மார்பு வலி, பல்வலி சிறிது, காதிலும் தொல்லை, குடல்வாதம், அதிக வேலை செய்யக் கூடாது என்று பிரபல வைத்தியர்களின் கண்டிப்பான அபிப்பிராயம், முதலிய நெருக்கடியான கஷ்டத்தில் இருக்கின்றது.

தினப்படி வரும் தபால்களில் நூற்றுக்கணக்காய் வெறுக்கத் தக்கவண்ணம், புகழ்ந்தெழுதுபவை ஒருபுறமிருந்தாலும், வைதும் மிரட்டியும் எழுதப்பட்டு வரும் மொட்டைக் கடிதங்களுக்கும் குறைவில்லை. இவ்வளவு நிர்ப்பந்தங்களுக்கிடையில் நமது இயக்கம் ஒருவித, நன்னிலை அடைந்து மேற்செல்லுவதையும் இவைகள் நமக்குப் பேரூக்கத்தை விளைவித்து வருவதையும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள், நம்மைத் தாங்கி நிற்பதையும், நாம் மனமார உணருகின்றோம். முடிவாக நமது கொள்கைகளிலாவது, நமது எழுத்துகளிலாவது, சொற்களிலாவது, நமக்குச் சிறிதளவும் சந்தேகமோ மயக்கமோ இல்லாத அளவு தெளிவாயிருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

கடைசியாக நமக்கு உதவியாக இருக்கும். குமரன், நாடார், குலமித்திரன், தமிழன் முன்னேற்றம், விஸ்வநேசன்; சுயமரியாதைத் தொண்டன், லட்சுமி, ரிவோல்ட். திராவிடன், முத்தமிழ் நாட்டின் பள்ளி உதயம், பிரசண்ட மகாவிகடன், மலையாளமொழி பத்திரிகைகளாகிய சகோதரன், மிதவாதி, தேசாபிமானி முதலாகியவைகள் மொத்தம் சுமார் நாற்பதினாயிரம் சந்தாதாரர்களைக் கொண்டு, நமக்காக உழைத்து வருவதற்கும், தென் இந்திய நல உரிமைச் சங்கத்திற்கும், பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்திற்கும், நாடார் மகாஜன சங்கத்திற்கும் மற்றும் சைவ சமாஜம், சன்மார்க்க சங்கம், முதலிய சங்கங்களுக்கும் சிறிதும் தன்னலமின்றி, தங்களது முழு நேரத்தையும், தங்களது உடல் பொருள் ஆவி ஆகியவைகளையெல்லாம், இவ்வியக்கத்திற்கே உவந்தளிக்கத் காத்திருக்கும் எமது அருமை வாலிப இளஞ்சிங்கங்களுக்கும், அவசிய மானபோது எவ்வித உதவியும் புரியத் தயாராயிருக்கும் செல்வமும், செல்வாக்கும் உண்மை ஆசையும் கொண்ட செல்வ நண்பர்களுக்கும், எமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொண்டு, நான்காவது ஆண்டைக் கடந்து அய்ந்தாவது ஆண்டிற்குச் செல்கின்றோம்.

தந்தை பெரியார்

குடிஅரசு தலையங்கம் - 05.05.1929

 
Read 28 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.