யார் யாரை எல்லாம் கண்டித்து இருக்கிறேன்? குடிஅரசு தலையங்கம் - 01.05.1927

Rate this item
(0 votes)

(குடிஅரசு மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் தந்தை பெரியாரால் எழுதப்பட்ட தலையங்கம்)

சகோதர வாசகர்களே!

நமது குடிஅரசு ஆரம்பமாகி இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருடத்தின் முதல் இதழ் இன்று வெளியாகிறது. குடிஅரசு ஆரம்ப இதழில் குடிஅரசு என்று ஒரு தலையங்கமும், ஆறு மாதம் கழிந்து நமது பத்திரிகை என்று ஒரு தலையங்கமும் ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது வருஷம் ஆரம்பத்தில் நமது பத்திரிகை என்று ஒரு தலையங்கமும் எழுதி இருக்கிறோம்.

இப்போது இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருஷ ஆரம்ப முதல் இதழிலும் அவ்வாறே நமது பத்திரிகை என்று தலையங்கமிட்டு ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம்.

நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையையும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கிக் குடி அரசு என்னும் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கவேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளையும் 1922இல் கோயமுத்தூர் ஜெயிலில், சிறைவாசம் செய்யும்போதே நினைத்தோம்.

அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச நாட்களுக்குள் குடிஅரசு என்று ஒரு வாரப் பத்திரிகையும் கொங்கு நாடு என்று ஒரு மாதந்திரமும் நடத்தப்போவதாய் 19.1.1923 தேதியில் சர்க்காரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.

இவ்விஷயத்தை முதலில் ஸ்ரீமான் திரு. வி. கல்யாண சுந்தர முதலியார் அவர்களிடம் சொன்னேன். அவர் எனது கொள்கையைக் கேட்டவுடன் சந்தோஷப்பட்டு இப்படி ஒரு பத்திரிகை வேண்டியதுதான். அதற்கு நீ தகுதியானவன், நீ ஆரம்பித்தால் தமிழ்நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால், அதிக நாள் நிலைக்காது. ஒரு கூட்டத்தார் எப்படியாவது அதை ஒழித்துவிடுவார்கள். ஆனாலும், நடந்த வரை லாபம், நடத்துங்கள் என்றார்.

பிறகு ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களிடம் சொன்னேன். அவரும் மிகச் சந்தோஷப்பட்டுச் சீக்கிரத்தில் வெளியாக்கவேண்டுமென்று விரும்புவதாகவும், வெளியாகத் தாமதம் ஏற்பட்டால் அதுவரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும் எழுதி வரும்படியும் சொன்னார்.

பிறகு ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் சொன்னேன். அவர் இந்தச் சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும் மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதைவிட்டு விட்டு நீ பத்திரிகை நடத்தப்போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசியமானது. ஆனதால் கண்டிப்பாய்ப் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். அதன் பேரில் அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துவிட்டு மறுபடியும் ஒத்துழையாமைக்காகவே உழைத்தேன்.

தற்செயலாய் வைக்கம் சத்தியாக்கிரகம் ஏற்பட்டது. ஸ்ரீமான் ஜார்ஜ்ஜோசப் அவர்களும், வைக்கத்திலிருந்து என்னைப் பிடிக்கப் போகிறார்கள் நான் இதோ ஜெயிலுக்குப் போகிறேன், வேறுயாரும் இல்லை. நீ வந்து ஒப்புக்கொள் என்று எழுதின கடிதமும் தந்தியும் என்னைக் குடும்பத்துடன் வைக்கத்திற்குப் போகும்படி செய்துவிட்டது. அங்கு ஜெயிலில் இருக்கும்போதும் இதே எண்ணம்தான். அதாவது வெளியில் போனதும் பத்திரிகை நடத்தவேண்டும் என்கிற ஆவல் அதிகமாயிற்று. அதுபோலவே வெளியில் வந்ததும் பத்திரிகை ஆரம்பிக்கத் தீர்மானித்துவிட்டேன். அதற்கேற்றாற்போல் திருப்பாப்புலியூர் ஞானியார் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவஷண்முக மெய்ஞான சிவாச்சார்ய சுவாமிகளும் கோயம்புத்தூருக்கு வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களை இங்கு அழைத்து அவர்களைக் கொண்டே ஆரம்ப விழா நடத்தி விடலாம் என நினைத்து, கோயம்புத்தூர் சென்று அழைத்ததும், யாதொரு ஆட்சேபணையும் சொல்லாமல் அவர்கள் ஒப்புக் கொண்டு ஈரோட்டிற்கு வந்து ஆரம்ப விழா நடத்திக் கொடுத்தார்கள். அது சமயம் பத்திரிகாலயத்தைத் திறந்து வைக்கும்படி ஞானியார் சுவாமிகளை கேட்டுக்கொண்டபோது,

அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தாலும் அவைகள் தங்கள் மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதை தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால் தான் நான் இப்பத்திரிகை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகை போலல்லாமல் மனதில் பட்டதைத் தைரியமாய்ப் பொது ஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டுமென்பது எமது நோக்கம் என்று சொல்லி இருக்கிறேன். ஞானியார் சுவாமிகளும் பத்திரிகாலயத்தை திறக்கும்போது,

"நமது நாட்டில் பல பத்திரிகை இருந்தும் இப்பத்திரிகை போன்ற கருத்துடைய பத்திரிகை வேறொன்றுமில்லை. உயர்வு தாழ்வு என்கிற ஆணவம் மிகுந்திருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவவேண்டும். குடிஅரசின் கருத்து இதுவே என நான் அறிந்து கொண்டேன்.

சமயத்திலிருக்கும் கேட்டை முதலில் ஒழிக்க வேண்-டும். இவை குடிஅரசின் முதல் கொள்கையாய் விளங்கவேண்டும் இப்பத்திரிகையில் ஸ்ரீமான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு" என்று ஆசீர்வதித்திருக்கிறார். முதல் இதழ் தலையங்கத்திலும் நமது நோக்கத்தை வெளியிட்ட தலையங்கத்திலும் நாம் குறிப்பிட்டிருப்பதாவது,

ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும் இதை அறவே விடுத்து வெறும் தேசம் தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று.

மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளரவேண்டும். உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்றென்றெண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும். இன்னோரன்ன பிற நறுங்குணங்கள் நம்மக்கள் அடையப் பாடுபடுவது நமது நோக்கமாகும்.

எவர் எனக்கு இனியர்; இவர் எனக்கு இன்னார் என்ற விருப்பு வெறுப்பின்றி
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு

என்ற வாக்கைக் கடைப்பிடித்து நண்பரேயாயினுமாகுக, அவர் தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும்... என்று எழுதி இருக்கிறோம். இவையாவும் 02-.05-.1925-தேதி குடிஅரசில் காணலாம்.

அடுத்தபடி ஆறு மாதம் முடிந்த இதழில் நமது பத்திரிகை என்னும் தலையங்கத்திலும், குடிஅரசு குறிப்பிட்ட கருத்தைப் பிரச்சாரம் செய்யும் பத்திரிகையே அல்லாமல் வெறும் வர்த்தமானப் பத்திரிகை அல்லாதாதலால்... பிரதிவாரமும் குடிஅரசு தனது ஆத்மாவை வெளிப்படுத்தும் (தத்துவத்தை விளக்கும்) போது கண்ணீர் கொட்டாமலிருக்க முடிவதே இல்லை. இதன் பலனால் உயர்ந்தோர் என்று சொல்லிக்கொள்வோராகிய பிராமணர் முதலிய சமுகத்தாருக்கும், ராஜீயத் தலைவர் என்று சொல்வோராகிய பல ராஜ தந்திரிகளுக்கும், விரோதியாகவும் அவர்களுடைய சூழ்ச்சிகளுக்கும் நமது குடிஅரசு ஆளாக வேண்டியிருப்பதால் இது சீக்கிரத்தில் பாமர ஜனங்களின் செல்வாக்கைப் பெற முடியாமலிருப்பது ஆச்சரியமல்ல என்றும்,

உண்மையில் குடி அரசுக்கு எந்த பிராமணனிடத்தும் குரோதமோ வெறுப்போ கிடையாது. ஆனால் பிராமணன் உயர்ந்தவன் என்றும், மற்றவர்கள் தீண்டாதவர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள் என்பன போன்ற இழிவான மிருக உரிமைக்கும் பாத்திரமில்லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணத்தினிடத்திலும், தங்கள் வகுப்பார் தான் முன்னணியில் இருக்க வேண்டும். மேன்மையுடன் பிழைக்க வேண்டும், மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு அதற்காகச் செய்யும் சூழ்ச்சிகளிடத்திலும் தான் குடிஅரசுக்கு குரோதமும் வெறுப்பும் இருப்பதுடன், அதை அடியோடே களைந்தெறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டு உழைத்துவருகிறது! என்றும்,

குடிஅரசு ஏற்பட்டு ஆறுமாத காலமாகியும், அதுவரை ஆயிரத்துச் சில்லரை சந்தாதாரர்களே சேர்ந்திருக்கிறார்கள், அதனைப் படிக்க வேண்டிய அளவு ஜனங்கள் படிக்கவில்லை என்றும், பாமர ஜனங்கள் சரியானபடி குடிஅரசை ஆதரிக்கவில்லையானால் அது தானாகவே மறைந்து போக வேண்டியதுதான். அதன் கடமையே அல்லாமல் வியாபார தோரணையாய் நடந்து வராது என்றும் எழுதியிருந்தது, (இதை 01.11.1925 தேதி இதழில் எழுதியிருந்தது.)

பிறகு ஒருவருஷம் முடிந்து, இரண்டாவது வருஷ ஆரம்ப இதழில் நமது பத்திரிகை என்ற தலையங்கத்திலும், இதுவரை நமக்குள்ள 2000 சந்தாதாரர்களில் நால்வர் அதிருப்திக்கே ஆளாகிறோம் என்று எழுதிவிட்டு,

குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால், அதுதானே மறைந்துவிடுமேயல்லாமல், மானங்கெட்டு விலங்குகளைப்போல் வாழாது. குடி அரசு தோன்றிய பிறகு அது ராஜ்ய உலகத்திலும், சமுக உலகத்திலும், பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்று பலர் நமக்கு எழுதியிருப்பதை நாமும் உபயோகப்படுத்திக் கொள்கிறோம் என்றும் எழுதி இருக்கிறோம்.

ஆகவே, இப்போது இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடம் ஆரம்ப இதழில் அதே தலையங்கத்துடன் ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம். முதலாவதாக ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்துகிறோம். அதாவது குடி அரசுக்கு ஆறு மாதத்தில் ஆயிரம் சந்தாதாரர்களும், ஒரு வருஷத்தில் இரண்டாயிரம் சந்தாதாரர்களும் இப்போது இரண்டு வருஷத்தில் நாலாயிரத்து அய்நூறு சந்தாதாரர்களும் இருப்பதால் கூடுமானவரையில் தமிழ் மக்களின் ஆதரவைப்பெற்று இருக்கிறது என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஆரம்பத்திலிருந்து இதுவரை முன்னே குறிப்பிட்ட கொள்கைகளில், அது ஒரு சிறிதும் தவறாமல் ஏற்றுக்கொண்டபடி நடந்து வந்திருக்கிறது என்பதையும் மெய்ப்பித்து விட்டோம். ஆகவே, குடிஅரசு குறைந்தது ஒரு பதினாயிரம் பிரதிகளாவது அச்சிட்டு வெளியாக வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் இந்நாலாயிரத்து அய்நூறைக்கொண்டு நான் சந்தோஷமடைகிறேனே தவிர, ஒரு சிறிதும் அதிருப்தி அடையவில்லை. அன்றியும், எமது விருப்பத்தை நிறைவேற்ற அநேக நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். 250 சந்தாதாரர்களை ஏற்படுத்திக்கொடுத்தும் இனியும் இருநூற்றைம்பது சந்தாதாரர்களை ஒரு மாதத்தில் சேர்ப்பதாய் வாக்களித்த சிங்கப்பூர் நண்பர்களுக்கும், மற்றும் 250 சந்தாதாரர்களை எதிர்பார்க்கும் மலேயா நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன்.

தமிழ்நாட்டிலும், ஊர்கள்தோறும் குடி அரசின் வளர்ச்சியையும் பரவுதலையும் எம்மைவிட அதிக கவலை கொண்டு எதிர்பார்க்கும் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அவர்கள் குடிஅரசுக்காக உழைத்து வந்ததற்கும், சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தற்காகவும் குடிஅரசுக் கொள்கைகளைப் பரப்பப் பாடுபட்டதற்கும், நான் மனப்பூர்வமாய் நன்றி செலுத்துகிறேன்.

குடிஅரசுக்கு இரண்டாவது வருஷத்தில் நஷ்டமில்லை. முதல் வருஷத்தின் நஷ்டம் அடைபடவேண்டும். ஆனால் இன்னமும் கொஞ்சம் நல்ல இதழில் இன்னும் நான்கு பக்கம் அதிகப்படுத்தவேண்டும் என்கிற ஆவல் இருந்து வருகிறது. இக்காரியங்களுக்கு இப்போது ஆகும் செலவை விட இன்னமும் வருஷம் ஒன்றுக்கு 2000 ரூபாய் அதிகமாகச் செலவு பிடிக்கும். இனியும் கொஞ்சம் சந்தாதாரர்கள் அதிகமானால் இவைகளைச் செய்ய சவுகரியமாயிருக்கும்.

இவ்வருஷம் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் அதிகமாய் இல்லை என்றே நினைக்கிறேன். பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், குடிஅரசினாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவைகளைக் கண்டித்தேன், அரசியல் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன், மதம் என்பதைக் கண்டித்தேன், மதத்தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன், மதச்சடங்கு என்பதைக் கண்டித்திருக்கிறேன், குருக்கள் என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன், கோவில் என்பதைக் கண்டித்திருக்கிறேன், சாமி என்பதைக் கண்டித்திருக்கிறேன், வேதம் என்று சொல்வதைக் கண்டித்திருக்கிறேன், சாஸ்திரம் என்பதைக் கண்டித்திருக்கிறேன், புராணம் என்பதைக் கண்டித்திருக்கிறேன், பார்ப்பனீயம் என்பதைக் கண்டித்திருக்கிறேன், ஜாதி என்பதைக் கண்டித்திருக்கிறேன், அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கிறேன், உத்தியோகம் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன், நீதி ஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கிறேன், நியாயாதிபதி என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன், நிர்வாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன், ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கிறேன், பிரதிநிதிகள் என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன், தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கிறேன், கல்வி என்பதைக் கண்டித்திருக்கிறேன், சுயராஜ்யம் என்பதைக் கண்டித்திருக்கிறேன், ஸ்ரீமான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு, சி. ராஜகோபாலாச்சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கிறேன்.

இன்னும் என்ன என்னவற்றையோ யார் யாரையோ கண்டித்திருக்கிறேன். கோபம் வரும்படி வைதுமிருக்கிறேன். எதைக் கண்டித்திருக்கிறேன், எதைக் கண்டிக்கவில்லை, யாரை வையவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாம் என்று பேனாவை எடுத்தாலும், பேசலாம் என்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும், வையவும், துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை. கண்டிக்கத்தகாத, வையத்தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ, என் கண்களுக்குப் படமாட்டேன் என்கிறது. இவைகளன்றி எனது வார்த்தைகளும், எழுத்துக்களும் செய்கைகளும் தேசத் துரோகமென்றும், வகுப்பு துவேஷமென்றும், பிராமணத்துவேஷமென்றும், மான நஷ்டமென்றும், அவதூறு என்றும், ராஜ துரோகமென்றும், ராஜத்துவேஷமென்றும், நாஸ்திகமென்றும், மத தூஷணை என்றும், சிலர் சொல்லவும் ஆத்திரப்படவும் ஆளானேன். அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள் தேச பக்தர்கள், என்பவர்கள் என்னை வையவும், என்னை தண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்யவேண்டும்? சிலருக்காவது மனவருத்தத்தையும், அதிருப்தியையும் கொடுக்கத்தக்க காரியத்தை ஏன் செய்ய வேண்டும்? என்று நானே யோசிப்பதுண்டு. சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும் நாம் ஏன் இக்கவலையும் இவ்வளவு தொல்லையும் அடைய வேண்டும்? நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி, சம்பாதனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவியுண்டா? ஒரு தலைவராவது உதவியுண்டா? ஒரு தேச பக்தராவது உதவியுண்டா?

இமயமலை வெயிலில் காய்கிறது என்று குடை பிடிப்பது போல் இருக்கிறது என்பதாக நினைத்து விலகி விடலாமா என்று யோசிப்பதுமுண்டு. ஆனால் விலகுவதில்தான் என்ன லாபம்? ஏறக்குறைய நமது ஆயுள் காலமும் தீர்ந்து விட்டது. இனி நாலோ அய்ந்தோ அல்லது அதிகமாயிருந்தால் பத்து வயது காலமோ இருக்கலாம். இந்தக் கொஞ்ச காலத்தை ஏன் நமது மனச்சாட்சிக்கு விட்டுவிடக் கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப்போகிறோம்? என்பதாகக் கருதி மறுபடியும் இதிலேயே உழன்று கொண்டிருக்கிறோமே அல்லாமல் வேறில்லை.

உண்மையில் நாம் முன் சொன்ன அரசியல் மதவிஷயம் முதலியதுகளைக் கண்டிக்க நேரிட்டபோது உண்மையான அரசியல் மதஇயல் இவைகளை நாம் கண்டிக்கவே இல்லை.

எதைப்பார்த்தாலும் புரட்டும் பித்தலாட்டமும் பெயரைப் பார்த்து ஏமாறத் தகுந்ததாயிருக்கிறதே அல்லாமல் தத்துவங்கள் எல்லாம் நமக்கும் நமது நாட்டுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் கொஞ்சங்கூட ரிப்பேர் செய்வதற்கில்லாமல் அடியோடு அழித்து மறுபடியும் புதிதாய் உண்டாக்க வேண்டியதாகவே இருக்கிறது. நமது காலத்தில் இவை திருத்தப்பாடடையும் என்கிற நம்பிக்கை கொஞ்சமும் இல்லாவிட்டாலும் வேறு யாராவது மகாத்மாவைப் போன்ற மகான்கள் வந்தால் அவர்களுக்கு பக்குவம் செய்து வைத்திருக்க கூடாதா என்றும், அதுவும் முடியாவிட்டால் பலன் எப்படியானாலும் கடமையைச் செய்ய வேண்டியது தானே என்கிற முடிவும் கிடைக்கிறது. ஆகவே இக்கஷ்ட மானதும், மனதுக்கு இன்பத்தைக் கொடுக்கக் கட்டாயமான இக்காரியத்தில் இறங்கிவிட்டோம்.

உலகம் ஒப்புக்கொண்டாலும் சரி தள்ளிவிட்டாலும் சரி. நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. நமது கடமையை எப்படி நாம் பிரதானமாய்க் கருதி இறங்கி இருக்கிறோமோ அதுபோலவே பொது ஜனங்களும், அதாவது இக்கடமையைச் சரி என்று எண்ணியவர்கள் தங்கள் தங்களது கடமையையும் எண்ணி அக் கடமையைச் செலுத்துவார்கள் என்று நம்புகிறோம்.


தந்தை பெரியார் -

குடிஅரசு தலையங்கம் - 01.05.1927

 
Read 18 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.