ஆத்மா மோசடி. உண்மை கட்டுரை - 14.6.1970

Rate this item
(0 votes)

சாவுக்குப் பின்னால்...

மனிதன் செத்துப் போனான் என்பதற்குப் பொருள்: மனிதன் இயங்குவதற்கு ஆதாரமாகவுள்ள சுவாசம் அதாவது மனிதன் மூக்கால், வாயால் உள்ளே இழுத்து வெளியே விடும் காற்றுப் போக்குவரத்து நின்றுவிட்டால், அதாவது அந்தக் காற்றை இழுக்கும் சக்தி அந்த உடலுக்கு இல்லாமல் போனால் செத்துப் போனான் என்பது பொருள். உடனே மனிதன் பிணமாகி விடுகிறான், இந்த காற்றுப் போக்குவரத்திற்குக் காரணமான உடலிலிருக்கும் சக்தி வேலை செய்யச் சக்தியற்றுப் போய்விட்டால் சுவாசம் நின்று விடுகிறது.

இந்த நிலையைத்தான் மதவாதிகள் மூடநம்பிக்கைக்காரர்கள், ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து போய் விட்டது என்று சொல்லுகிறார்கள் ஆத்மா என்றாலே சுவாசம் (காற்று) என்றுதான் பொருள். அது பிரிவதும் இல்லை. பிரிந்து எங்கும் போவதுமில்லை. உதாரணமாக; ஒரு மனிதனின் மூக்கையும் வாயையும் காற்று போகாமல், வராமல் மூடி அழுத்திப் பிடித்துக் கொண்டோமானால் அந்த மனிதன் துள்ளிக் குதித்து ஆடி அமர்ந்து செத்தே போகிறான். இப்படி ஆகிவிடுவதில் ஆத்மா பிரிகிறது எங்கே இருக்கிறது? ஆத்மாவை சொன்னவன் ஆத்மாவிற்கு உருவமில்லை, அரூபம், கண்ணுக்குத் தெரியாதது, சூட்சுமம், கண்டுபிடிக்க முடியாதது என்றுதான் சொன்னானேயொழிய அதை ஒரு வஸ்துவாக்கவில்லை.

இந்தப்படி முடித்து விட்டுப் பிறகு அது மேல் லோகத்திற்குப் போய் உருவெடுத்து அதே மனிதனாகிக் கர்மத்தை அனுபவிக்கிறது என்று புளுகி இருக்கிறான். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இதில் கொஞ்சம் மாற்றம் செய்து சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்தாலும், விசாரணை - தீர்ப்புக்காலம் வந்தவுடன், பிரிந்த ஆத்மா மறுபடியும் சரீரத்திற்குள் வந்து புகுந்து தீர்ப்பை (ஜட்ஜ்மென்டை) ஏற்கிறது என்பதாகக் கருதுகிறார்கள்.

இப்படியெல்லாம் மதக்காரர்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால், கடவுளுக்கு மனிதன் மீது ஒரு அதிகாரம் (வேலை) வேண்டுமென்பதற்காகவேயாகும். மனிதன் செத்த பிறகு கடவுள் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்றாகிவிட்டால், கடவுளை எவன்தான் சட்டை செய்வான்? ஏன், எதற்காகச் சட்டை செய்வான்?

ஆனதினாலேயே கடவுள் பெயரால் முட்டாள்களும், பிழைக்க வேண்டிய அயோக்கியர்களும் இந்த ஏற்பாடு செய்து விட்டார்கள். சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்தால் அது மோட்சத்திற்குப் போவதா? நரகத்திற்குப் போவதா? மறுஜன்மம் எடுப்பதா? பிதிர் லோகத்தில் வாழ்வதா? பேயாய் அலைவதா? செத்தவனுக்காகச் செய்யப்படும் காரியங்களை அனுபவிப்பதா? இவற்றில் எந்தக் காரியத்திற்குச் செத்தவன் ஆளாவது?

செத்தவனைப் புதைத்தால் உடல் முழுவதும் நீராக, மண்ணாக ஆகிவிடுகிறது. நெருப்பில் கொளுத்தினால் சரீரம் முழுவதும் சாம்பலாக ஆகிக் காற்றில் பறந்து மறைந்து விடுகிறது. இரண்டுமில்லாமல் பூமியில் கிடந்தால் கழுகு, காக்கை, நரி, நாய் மற்றும் மாமிச பட்சிணி ஜீவன்கள் தின்று தீர்த்துவிடுகின்றன.

ஆகவே, செத்த மனிதன் எப்படி இருப்பான், எதை அனுபவிப்பான், எங்கே இருப்பான் என்பனவற்றையும், இந்த அனுபவம் எல்லாம் மனிதனுக்கு மாத்திரம் தானா? மற்ற ஜீவன்களுக்கும், மற்றும் செத்துப்போன பட்டுப்போன மரம், செடி, கொடி, புல், பூண்டுகளுக்கும் உண்டா என்பதையும் ஆறறிவுள்ள மனிதன் சிந்தித்துப் பார்ப்பானாக.

உண்மை கட்டுரை - 14.6.1970 

 
Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.