இன்னமும் பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்களா? குடிஅரசு கற்பனை உரையாடல் - 04-01-1931

Rate this item
(0 votes)

மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டுப் போகின்றது. அம்மன் விக்ரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன. விஷ்ணு விக்ரகத்தின் நெற்றியிலிருக்கும் நடுநாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது. சிவன் விக்ரத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்ரகங்களைக் கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது. இவைகளின் வாகனத்தின் தேரில் நெருப்பு பிடிக்கின்றது. அச்சு ஒடிகின்றது. இவைகளின் பயனாய் பலர் சாகின்றனர். மூடர்களே, இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த விக்ரகங்களில், அந்த தேர்வாகனங்களின் புனிதத்தன்மை, தெய்வத்தன்மை, அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவைகள் இருக்கின்றதாக நினைக்கின்றீர்களா? உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா? தயவு செய்து சொல்லுங்கள்.

இன்னும் ஒரே ஒரு குட்டி சங்கதி. வட்டி வாங்குகிறவன்கள் கோடீசுவரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் பாப்ராய் போகிறான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமும் பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்களா? இன்னும் ஒன்றுதான். அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி... காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்தபிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள். . .

மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான், கடவுள்.

பதில்: சரி, அப்படியானால் அந்தக் காரணத்தை கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு).

மூடர்: கடவுளைப் படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது, முட்டாள்தனமாகும்.

பதில்: அப்படியானால், உலகப் படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.

மூடர்: உங்களோடு யார் பேசுவார்கள்?

பதில்: சரி நல்ல காரியமாச்சு, சனியன் தொலைந்தது. ஆனால் காணாத இடத்தில் குலைக்காதே.

 சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது

குடிஅரசு கற்பனை உரையாடல் - 04-01-1931

 
Read 18 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.