தமிழ் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும்? விடுதலை - 1-5-1949

Rate this item
(0 votes)

தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும். மத சம்பந்தமற்ற ஒருவனுக்கு, தமிழில் இலக்கியம் காண்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக் கணம் கூட மதத்தோடு பொருத்தப் பட்டே இருக்கிறது.

உதாரணமாக மக்கள், தேவர், நரகர், உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?

இனி பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம்தானே அதிகமாகயிருக்கின்றது?

மேல் நாட்டு இலக்கியம்

மேல்நாட்டுப் புலவர்கள், மேல் நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது? இந்தியா வேண்டுமா? கம்பராமாயணம் வேண்டுமா என்றால் உண்மைத் தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்லுவான்.

மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ் நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை. மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்தமின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக் கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.

கீழ் நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.

மலத்தில் அரிசி பொறுக்கலாமா? கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவு தான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல்தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்களை எவ் வளவு இழிவாகக்குறிப்பிடப்பட்டிருக் கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப்பட் டிருக்கிறது. சுயமரியாதையை விரும்பு கிறவன் எப்படி கம்பராமாயண இலக்கி யத்தைப் படிப்பான்? இன்று கம்பராமா யணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா என்று நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கடவுளால் மொழி உயராது தமிழ் மொழியின் பெருமை பரமசிவனுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ, சொல்லி விடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்டபாலனை அழைத்ததாலும், எலும்பைப் பெண்ணாக்கினதாலும், தமிழ் வளர்ச்சியையும், மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்குகந்த மொழி தமிழ் என்றால் வைணவனும் முஸ்லிமும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக்காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.

இந்திப் புரட்டு

இன்று தமிழ் நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்தியப்பாஷை ஆகவேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்றுவருகிறார்கள். கோர்ட்பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தியமயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.

தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பாலோர்க்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப் பண்டிதர்கள் இந்த அரசியல்வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

செத்த பாம்பு

பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப் பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவது செலவாக வேண்டும்? தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டிதர்கள் தான் சத்தம் போடுகிறார்கள், ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜுகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும், உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றிக் கவலையும் இல்லை. தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.

தமிழாபிமானம் தேசத்துரோகம்!

தமிழினிடத்தில் ஒருவன் அபிமானியாக இருந்தாலே அவன் தேசத்துரோகி, வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றொல்லாம் ஆய்விடுகிறான். ஆதலால் கூட்டத்துக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள். தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழ் மொழியில், ஒரு சிறு மாற்றமோ, முற்போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதரவளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும், சவுகரியமுள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்? மாறுதல் அவசியம்

மேல் நாட்டு மொழிகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன; எழுத்துகளில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துகளை எடுத்து விட்டார்கள். புதிய எழுத்துகள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்துக் கூட்டுவதாகிய இஸ்பெல்லிங் முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்துகளையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள்? காலத்துக்கு ஏற்றமாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.

தமிழ் எழுத்துகளில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவராவது அம்முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்லர். இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.

ஆனால், தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்செய்வது? என்னைக் குறைகூறவோ, திருத்தவோ, முயற்சிப்பதின் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லட்சியம் செய்யவில்லை. ஆனாலும் நான் அம்முறையிலேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே 10, 20 புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது.

இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள்.

எங்கும் திருநாள்

எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது, அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.

தீபாவளி போன்ற மூட நம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படித் தமிழ்த்திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களைப் பரப்பவேண்டும். நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியும், மாரிப் பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்யவேண்டுகிறேன்.

விடுதலை - 1-5-1949

Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.