ஹிந்து மதம் - (நாம் ஹிந்துக்களா?) நூல்:-“உயர் எண்ணங்கள்”

Rate this item
(0 votes)

ஹிந்துமதம் என்பதும், ஹிந்துமத சம்பந்தமான சாஸ்திரங்கள், கடவுள்கள், கடவுள் கதைகள், நடத்தைகள் முதலியவைகள் எல்லாம் தமிழனுக்கோ, தமிழ்நாட்டிற்கோ சம்பந்தப்பட்டதல்ல; சிறிதளவும் சம்பந்தப்பட்டதல்ல. அவை யாவும் எந்தத் தமிழனாலும் ஏற்பட்டவையுமல்ல; அவற்றுள் எவையும் எதுவும் தமிழ்மொழியில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டவையுமல்ல.

இவையாவும் அந்நிய மொழியாகிய வட மொழியிலும், தமிழன் - தமிழ் நாட்டினன் அல்லாதவனான அந்நியன் மொழியாகிய ஆரிய மொழியிலும் வட நாட்டானான ஆரியனாலுமே ஏற்படுத்தப்பட்டவை, செய்யப்பட்டவையுமே ஆகும்.

ஆரியன் இங்கே வந்து “அய்யர்” ஆனான்

அது போலவேதான் ஜாதி என்பதும், ஜாதி முறை என்பதும், ஜாதி அமைப்பு என்பதும், தமிழ்நாட்டிற்கோ தமிழர் சமுதாயத்திற்கோ ஏற்றதுமல்ல; தமிழ் பழக்க வழக்கங்களுக்கு, தமிழர் வாழ்விற்கு ஏற்றவையுமல்ல; ஏனென்றால், இவை யாவும் யாவற்றுக்கும் ஏற்பட்ட நடப்பு எதுவும் தமிழ்மொழியில்லை என்பதோடு, தமிழர் சமுதாயத்தில் இருந்தவையுமல்ல; தமிழரால் உண்டாக்கப்பட்டவையுமல்ல.

ஜாதியானது, எப்படி வெள்ளைக்காரன் நம் நாட்டுக்கு வந்து “துரை”ஆனானோ - முஸ்லீம் எம்படி நம் நாட்டுக்கு வந்து, “சாயபு”ஆனானோ - அதுபோல் ஆரியன் நம் நாட்டுக்கு வந்து “அய்யர்” ஆனான்; “பிராமணன்” ஆனான்; “பிராமணாள்” ஆனான்.

பார்ப்பானைப்போல வேதத்தைத் தொட்டாலும் தீட்டு

பார்ப்பானுக்குக் குறிப்புப் பெயர் வேதியன் என்பதாகும். வேதியன் என்றால் வேதத்திற்கு உடையவன் என்பதுதான் பொரும். அந்த வேதம் எந்த விதத்திலும் தமிழர்களுக்குச் சம்பந்தப்பட்டதல்ல; தமிழர்களுக்கு உரியதுமல்ல; தமிழுமல்ல; தமிழரால் ஆக்கப்பட்டதுமல்ல. எப்படி ஆரியன் (பார்ப்பான்) கடவுள், தமிழன் தொட்டால் தீட்டு ஆகிவிடும் - கெட்டுப்போகும் என்று சொல்லப்படுகிறதோ, அதுபோலவே வேதமும் தமிழன் தொட்டாலும், அதைப் படித்தாலும், காதில் கேட்டாலும் கெட்டுவிடும். பார்ப்பான அல்லாதவன் பார்த்து கேட்டுவிட்டால், அவன் குருடனாக ஆக வேண்டும் - செவிடனாக ஆகவேண்டும் என்பது பார்ப்பனர் நிபந்தனை ஆகும்.

இதையேதான் சற்றேறக்குறைய பார்ப்பன ஆதாரங்களாகிய சாஸ்திர - தர்ம சாஸ்திர - புராணங்களுக்குமே பார்ப்பனர் நிபந்தனை விதித்து இருக்கிறார்கள். இவைகள்தான் இந்துமத தர்மம் ஆகவும் - இந்து மதக் கொள்கை ஆகவும் இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் இருந்துவருவதுமாகும்; இவைதான் இந்துமதத் தர்மமும் ஆகும்.

நமது மதமாயிருந்தால் நாம் ஏன் ஈனஜாதி இவற்றிற்குக் கட்டுப்பட்டவன்தான் - இந்த நிபந்தனையை ஏற்றவன்தான் ஹிந்து ஆவான். தமிழ் நாட்டாரே! தமிழ் சமுதாயத்தாரே! தமிழர்களே இப்பொழுது சிந்தியுங்கள்.

நாம் ஹிந்துக்களா? ஹிந்து மதத்தவர்களா? ஹிந்து மதத்திற்கு உரிய கடவுள், மத வேத சாஸ்திர புராண இதிகாச தர்மங்கள், ஜாதிமுறைகள், அமைப்புகள் - இவை சம்பந்தமான கோயில் குளம், அவற்றின் கதைகள் - நடப்புகள் நமக்குச் சம்பந்தப்பட்டவைகளா என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஹிந்துமதம் நமது மதமாயிருந்தால், அதில் நாம் நம்மை ஈன ஜாதி - இழிபிறவி - நாலாம் ஜாதி - சூத்திரன் பார்ப்பானின் அடிமை - பார்ப்பானின் தாசி மக்கள் - நமது பெண்கள் பார்ப்பானுக்குத் தாசிகளாக இருக்கத் தக்கவர்கள் என்று எழுதிவைத்துக் கொண்டிருக்க முடியுமா?

“ஹிந்து”என்ற சொல் “சிந்து”விலிருந்து வந்தது

நிற்க. ஹிந்து என்றோ - இந்துமதம் என்றோ - இந்தியா என்றோ ஆரியர்களின் எந்த ஆதாரத்திலும் ஒரு இடத்திலாவது - ஒரு சொல்லாவது இல்லவே இல்லை. மத ஆதாரங்களில் காணம் படுவதெல்லாம் பாரத தேசம், பாரதம் என்றும், சமுதாயத்திற்கும் ஆரியர் என்றும், தேவர்கள் என்றும், ஆரியர்களுடைய எதிரிகளைக் குறிக்க அசுரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், இராக்கதர்கள் என்றும்தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே ஒழிய - இந்தியா, ஹிந்து என்ற சொற்கள் எந்த சாஸ்திர - புராண இதிகாசங்களிலும் மத சம்பந்தமான எந்த ஆதாரங்களிலும் காணமுடிவதில்லை.

தவிரவும் இந்தியா என்ற சொல் - ஹிந்து என்ற சொல் “சிந்து”என்னும் ஒரு நதியின் காரணமாக அதன் கரையில் வாழ்ந்தவர்களுக்கு ஏற்பட்ட பெயர் என்றும், வடமொழியில் “சி” என்பதும் “ஹி”என்பதும் ஒரே சப்தமாக மாற இடம் உண்டு என்கிற காரணத்தால் சிந்து ஹிந்து என்றாயிற்று என்றும் சொல்லுகிறார்கள். ஆங்கில அகராதிகள் சொல்வது என்ன?

பிறகு, ஹிந்துக்களைக் கொண்ட நாடு இந்தியா என்று ஆயிற்று என்றும், இந்தப் பெயரும் அந்நியரால் கொடுக்கப்பட்டதென்றும், இந்தியாவில் வசித்ததால் ஹிந்து என்று அழைக்க நேர்ந்தது என்றும், இதுவும் இஸ்லாமானவர்களாலும் வெள்ளையர்களாலும் கொடுக்கப்பட்ட பெயரே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

அதுவும் எந்தவிதத்திலும் தமிழர்களுக்குப் பொருந்தாது என்பதோடு, ஆரியர்களுக்குத்தான் பொருந்தும் என்பதே ஆராய்ச்சியாளர்கள் முடிவு.

ஹிந்து என்ற சொல்லுக்கு “ ஆரியர்கள்” என்ற பொருள்.மேனாட்டு அகராதிகளில் காணப்படுகின்றது. தவிரவும், ஹிந்துக்கள் என்ற சொல்லுக்கு கிறிஸ்தவர், முகமதியர் அல்லாத மக்கள் என்று ஆங்கில அகராதிகள் (டிக்சனரிகள்) கூறுகின்றன.

The concise oxboard dictionary of current English(1968 ஆம் ஆண்டு பதிப்பு) பக்கம் 516 இல் Hindu என்பதற்கு “Aryan of N. india who(also any one who) professes hindusim என்று போட்டிருப்பதுடன் இதற்குச் சமஸ்கிருத “ரூட்” என்று குறிப்பிட்டு “SINDU RIVER” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து என்றால் அறிவற்றவன் - முட்டாள்

ஹிந்து என்ற சொல்லையும், இந்துக்கள் என்ற குழுவினரையும் மேனாட்டவர்களும் முஸ்லீம்களும் மிகமிக இழிவாகவே கருதுகிறார்கள். அதாவது, அஞ்ஞானிகள் என்றும் அறிவற்ற முட்டாள்கள் என்றும் கருதுகிறார்கள்.

மத கடவுள்கள், அக்கடவுள்களின் நடப்புகள். அவற்றின் கதைகளான புராண இதிகாசக் கூற்றுக்கள் நமக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டவை அல்ல என்பதைச் சிந்தித்துத் தெளியுங்கள்.

(தந்தை பெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-26-29)

 
Read 41 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.