கடவுள் - II நூல் - உயர் எண்ணங்கள்

Rate this item
(0 votes)

மனிதனுக்குப் புகுத்தப்பட்ட (கற்பிக்கப்பட்ட) கடவுள் சர்வ சக்தியுள்ளது; எல்லாம் வல்லது; யாவுமாயிருப்பது; கடவுளன்றி அணுவும் அசையாது; கடவுளன்றி உலகில் எந்தக் காரியமும் நடவாது; யாவற்றையும் கடவுளே நடத்துகிறார் என்றெல்லாம் கடவுளைப் பற்றிக் கூறித்தான் மனிதனுக்கு கடவுள் புகுத்தப்பட்டிருக்கிறது. மனிதனும், இந்தத் தன்மைகள் சக்திகள் இருக்கின்றன என்கின்ற உண்மையோடு தான் கடவும் நம்பிக்கைக்காரன் ஆகிறான். ஆனால் வாழ்வில் மனிதன் எந்தத் துறையிலாவது இந்தப்படி நம்பி நடந்துகொள்கிறானா?

மனித, மற்றும் ஜீவராசிகள் யாவும் ஆண் பெண் சேர்க்கையால் தான் சூல் ஆகிப் பிறக்கின்றன. இதில் எதுவும் எவனும் கடவுளை நம்புவதுமில்லை; கடவுளை எதிர்பார்ப்பதுமில்லை, மனித ஜீவன் பிள்ளை பெற மருத்துவம் வேண்டியிருக்கிறது. தாய், பிள்ளைக்கும் பால் கொடுத்தாக வேண்டியிருக்கிறது; பிறகு சோறூட்ட வேண்டும். பெரியதானால் துணி வாங்கி உடுத்த வேண்டும். பள்ளிக்கு அனுப்ப வேண்டும்; உபாத்தியாயர் படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டும்; பையன் கஷ்டப்பட்டு, கவலை கொண்டு படிக்க வேண்டும். பரீட்சையில் பையன் தேற வேண்டும்.

இப்படியாக ஒரு துறையில் இவ்வளவு வேலைகளைப் பெற்றோர் செய்தாக வேண்டும். இப்படி மனிதனுக்கு வாழ்வில் எத்தனைத் துறைகள் இருக்கின்றனவோ, அத்தனைத் துறைக்கும் பெற்றோர்களும் பிள்ளைகளும் அவரவர் முயற்சித்தும் பாடுபட்டுச் செய்தால்தான் வாழ முடிகிறது. மற்றும், மனிதன் உணவு, ஜலமலம் கழித்தல், உறங்கல், கலவி செய்தல் முதலிய சகல காரியங்களும் அவனே முயற்சித்தும் பாடும்பட்டும் பக்குவம் படுத்திக் கொண்டுதான் வாழ்கிறான். இப்படியே நோய் வந்தாலும் அதற்கும் பரிகாரம் அவனே செய்து கொள்ளவேண்டும். நோயின் பரிகாரத்தன்மைக்கு ஏற்ப குணமடைவது, சாவது முதலியவை மனிதனால் அல்லாமல் இவ்வளவு காரியங்களுக்கும் எவன் கடவுளை நம்பி கைகட்டிக் கொண்டிருக்கிறான்?

ஆனால், வாழ்வில் எல்லா நிலையிலும் அறிவற்ற தனமாய் கடவுள் செயல், கடவுள் செயல் என்று சொல்லிக் கொண்டும், தனது முயற்சிக்கெல்லாம் கடவுளை வேண்டுவதை போல் நடித்துக் கொண்டுமிருக்கிறான் என்பதல்லாமல், எந்த மனிதன், எந்த ஒரு சிறு காரியத்திற்குக் கடவுளை நம்பி எதிர்பார்த்துக்காத்துக் கிடக்கிறான்? நடந்து கொள்கிறான்?

மனிதனுக்கு மனிதன் கண்டால், “ வாங்க - வாங்க சௌக்கியமா?” என்று கேட்பது போலும், “மகராசியாய் நீடுழி வாழவேண்டும்” என்று ஆசி கூறுவதும் போலும், தொட்டதற்கெல்லாம் “ கடவுள் செயல்” என்கின்ற சொல் ஒரு சம்பிரதாயச் சொல்லாக ஆகிவிட்டது. அதேமாதிரி தான் மனிதன் கோவிலுக்கும் போவதும், கும்பிடுவதும் இதுவும் ஒரு பழக்கத்தில் - சம்பிரதாயத்தில் பட்டு விட்டது.

அப்படியேதான் கோவிலுக்கும் போகும் போது தேங்காய், பழம் மற்ற ஆராதனை முதலியவையும் ஏற்பட்டுவிட்டன. சாமிக்கு வைக்கும் “நைவேத்தியம்”, “ஆராதனை”ப் பொருள்கள் சாமி சாப்பிடுகிறது என்றோ, சாமிக்கும் பயன்படுகிறதென்றோ எந்த அறிவாளியாவது, மடையனாவது சொல்ல முடியுமா?

அப்படியேதான் சாமிக்கு உருவங்கள் கற்பிக்கப்பட்டவையும், சாமிக்கு உருவம் உண்டு என்று சாமியைக் கற்பித்தவன் சொல்லவே இல்லையே. குணம் இல்லை; பிறப்பு இல்லை; ஆதி இல்லை - அந்தம் இல்லை-இல்லை-இல்லை என்று சொன்னானே தவிர, சாமிக்கு ஏதாவது இருக்கிறது என்று எவன் சொன்னான்? இப்படி இருக்க, பிறகு எப்படி சாமி (கடவுள்) மனிதனைப் போல நன்மை செய்தவர்களுக்கு நல்லது செய்வான் - கெட்டது செய்தவர்களுக்குத் தண்டனை கொடுப்பான்?

பிரார்த்தனை செய்தவர்களுக்கு நல்லது செய்வான் - செய்யாதவர்களைக் கவனிக்க மாட்டான் என்பதும், பாவம், புண்ணியம் என்பதும் (கடவுள்) மன்னிப்பு என்பதும், இப்படிப்பட்ட காரியங்கள் - எப்படி கடவுளுடன் சம்பந்தப்படுத்தப்பட்டது? மற்றும் உருவமே இல்லாதவனுக்கு மனித உருவம்; வேண்டுதலே இல்லாதவனுக்கு பெண்டாட்டி - வைப்பாட்டி - பிள்ளை - நகை கல்யாணம் முதலிய இவை எப்படி ஏற்பட்டன?

கருணைசாலி - யாரையும் காப்பாற்றும் உதார குணசாலி என்பவனுக்கு கத்தி, வேல், வில், சக்கரம், மழு இவை எதற்கு? மற்றும் அவனை மோட்சத்தில் வைத்தான்; இவனை நரகத்தில் வைத்தான் - இதெல்லாம் எதற்காகச் சொல்வது? மற்றும், கடவுள் ஒழுக்க சீலன் என்று சொல்லிவிட்டு “அவன் பெண்டாட்டியைக் கெடுத்தான்”, “இவன் பெண்டாட்டியைப் பலாத்காரம் செய்து ஏமாற்றிக் கெடுத்தான்’’ இரண்டு பெண்டாட்டி மூன்று பெண்டாட்டி - ஆயிரம் பெண்டாட்டி - பல்லாயிரம் பெண்களிடம் சுகம் அனுபவித்தான் என்பதெல்லாம் எதற்கு?

இவை மனிதனுக்கு உள்ள கடவுள் நம்பிக்கையைக் காட்டுகிறதா? மனிதன் கடவுள் நம்பிக்கையால் சுத்த காட்டுமிராண்டி ஆகிவிட்டான் - ஆகிவருகிறான் என்பதைக் காட்டுகிறதா? இவற்றைக் கடவுள் பிரசாரகர்கள் உணரவேண்டும் கடவும் நம்பிக்கை இருந்தால், மானம், வெட்கம், அறிவு, தெளிவு இருக்கக் கூடாது என்பது நிபந்தனையா?

(தந்தை பெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 12 -14)

 
Read 29 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.