ஆணுக்கு ஆண் கூடிப் பிறந்தவன் அய்யப்பன். நூல் - இந்து மதப் பண்டிகைகள்

Rate this item
(0 votes)

அய்யப்பன் சீசன் துவங்கி விட்டது. பக்தர்கள் என்ற போர்வையில் ஒவ்வொரு நகரத்தையும் அசுத்தம் செய்து சுகாதரக்கேடு உண்டாக்கி அந்தந்த பகுதி மக்களுக்கு நோயைப் பரப்பி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மாலையைப் போட்டுக் கொண்டு ஒழுக்கமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு அனைத்து ஒழுக்ககேடுகளும் செய்து வருகிறனர். பொது இடங்களில் புகைபிடிக்ககூடாது என்ற சட்டம் இருக்கிறது ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் வாயில் பீடியுடன் திரிகின்றனர். இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் போது கூட புகையை ஊதித் தள்ளி மக்களுக்கு இன்னல் விளைவிக்கின்றனர். இது போல் பல உள்ளன. எழுதிக் கொண்டே போகலாம்.நிற்க.

இப்போது அய்யப்பன் கதைக்கு வருவோம்.

அய்யப்பன் எப்படி பிறந்தான்? ஏன் பிறந்தான்? அய்யப்பன் கதையின் கரு என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

அய்யப்பன் கதை

பத்மாசூரன் என்கிற அசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சிவன் அவன் முன் தோன்றி 'உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்' என்றான் அதற்கு பத்மாசூரன் 'நான் யார் தலையில் கை வைக்கின்றேனோ அவன் எரிந்து சாம்பலாகும்படியாக வரம் அளித்தருள வேண்டும்' என்றானாம்.

சிவனும் 'அவ்வளவுதானே! அளித்தேன் போ!' என்று கூறலானான். பத்மாசூரனுக்கு ஓர் சந்தேகம் உண்டாயிற்று. சிவன் அளித்த வரமானது உண்மைதானா? பலிக்குமா? என்று சோதனை செய்ய எண்ணினான். உடனே அவன் சிவன் தலையிலேயே கை வைத்துச் சோதிக்க முற்பட்டான். சிவன் பயந்து போய் பல இடங் களுக்கும் ஓடினான். பத்மாசூரன் விட்டபாடில்லை. பிறகு விஷ்ணு விடம் அலைந்து சென்று, தாம் முட்டாள்தனமாக அளித்த வரத்தினைப் பற்றியும், பத்மாசூரன் தன் தலையில் கை வைக்க விரட்டி வருவது பற்றியும் கூறி, அதற்குப் பரிகாரம் தேடித் தன்னைக் காக்கும்படி வேண்டினான்.

அதற்கு விஷ்ணுவானவன் 'அதுதானா பிரமாதம் இதோ ஒரு நொடிப் பொழுதில் அவனை ஒழித்துவிட்டு வருகின்றேன்.'என்று கூறி அழகிய மோகினிப் பெண் உருவம் எடுத்து பத்மாசூரன் முன் சென்று நின்றான். அந்த மோகினிப்பெண்ணைக் கண்ட அசுரன் அவளை கட்டி அணைக்க எத்தனித்தான். அதற்கு அவள் நான் உனக்கு உடன்படுகின்றேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ மிகவும் அழுக்காய் இருக்கின்றாய். எனவே நீ அருகில் உள்ள நீர் நிலையில் இறங்கிக் குளித்து விட்டுவா என்று கூறினாள்.

அதன்படியே பத்மாசூரன் தண்ணீரில் இறங்கிக் குளிக்கும் போது தம் தலையில் கைவைத்துத் தேய்த்துத் தண்ணீரில் மூழ்கி எழ முற்பட்டான். அவனது கை அவனது தலையில் பட்டவுடனே அவன் தலை எரிந்து மடியலானான். விஷ்ணு சிவனிடம் சென்று பயத்தை விட்டு வெளியே வாருங்கள் நான் அவனைப் பெண் வேடம் எடுத்துக் கொன்று விட்டு வந்துவிட்டேன் என்று கூறினான்.

அதற்கு சிவன், 'எப்படிப் பெண்வேடம் போட்டு சென்றாய்? அந்த வேடத்தை எனக்குக் கொஞ்சம் காட்டுங்கள்' என்றான் விஷ்ணு தான் போட்டுச் சென்ற பெண் வேடத்தைப் போட்டுக்காட்டினான் . அதனைக் கண்ட சிவனானவன், விஷ்ணுவாகிய மோகினிமீது மையல் கொண்டு கட்டியணைக்க முற்பட்டான். ஒருவருக்கு ஒருவர் துரத்திக் கொண்டு ஓட இருவருக்கும் ஆடைகள் நெகிழ்ந்துவிட இருவரும் கலவி செய்தனர். உடனே ஓர் குழந்தை பிறந்தது. அதனைச் சிவன் கையில் தாங்கினானாம். அந்தக் குழந்தை கையில் பிறந்ததனால், கையனார் என்று அழைக்கப்பட்டு, பிறகு அய்யனார் என்றும், அய்யப்பன் என்றும் ஆனது.

இப்படி அரிக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாதலால், அய்யனார் அல்லது அய்யப்பனை ஹரிஹரன் என்றும் அழைப்பதுண்டு. எனவே இந்தப் பிறப்புப் பற்றிக் கூறப்படும் கதையோ நல்லறிவும். நல்லொழுக்கமும் உடையோர் கேட்கவும் மனம்கூட வெட்கப்படவேண்டியதாம். இயற்கை விபரீத நடத்தை வர்ணனை, ஆணுக்கு ஆண் கூடிப் பிறந்தவனாம் இவன் . இதை இயற்கை ஒப்புமா? மற்ற எந்த ஜீவராசிகளும் இப்படி நடப்பதில்லையே.

(தந்தை பெரியார் -நூல்:- "இந்து மதப் பண்டிகைகள்" பக்கம்: 41-43)

 
Read 63 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.