கடவுளும் மதமும் இரட்டைப் பிள்ளைகள் அல்ல. பகுத்தறிவு கட்டுரை மார்ச் -1936

Rate this item
(0 votes)

மதம் என்னும் வார்த்தைக்குப் பலவித அர்த்தங்களும், கருத்துகளும் சொல்லப்படுகின்றன. உதாரணமாக ஒருவர், என்னுடைய மதம் யார் மனத்தையும் புண்படுத்தாமலிருப்பதும், யாருக்கும் என்னால் கூடிய நன்மை செய்வதும்தான் என்று சொல்லுகிறார். மற்றொருவர், என்னுடைய மதம் கடவுளைப் பற்றிக் கவலைப்படாத நாஸ்திக மதம் தான் என்கின்றார்.

மற்றொருவர், என்னுடைய மதம் கடவுள் இல்லை; ஆத்மா இல்லை. ஆனால், அதற்குத் தகுந்த பலன் உண்டு என்பதுதான் என்கிறார். மற்றொருவர், நான் கருதி இருக்கும் மதம் திமிர் அல்லது கொழுப்பு என்கிறார். மற்றொருவர், மதம் என்னும் வார்த்தைக்குக் கொள்கை அல்லது கடமை என்பது அர்த்தம் என்கிறார்.

 மற்றொருவர், என்னுடைய மதம் விஞ்ஞானம் என்கிறார். மற்றொருவர், என்னுடைய மதம் மனித ஜீவ அபிமானம்தான் என்கிறார். மற்றொருவர், என்னுடைய மதம் பொதுவுடைமைக் கொள்கை என்கிறார். இப்படியே இன்னும் பலவிதமாய், மதம் என்னும் வார்த்தைக்குத் தனித்தனிக் கருத்துகள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அவைகளைப் பற்றி எல்லாம் விவரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம். ஆனால், முகப்பில் கூறிய இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய மதங்களின் அஸ்திவாரம் ஒன்றுபோலவே இருந்தாலும், அதன்மேல் கட்டப்பட்ட கட்டடங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

 ஒருவன் உண்மையாகவே மதம் இல்லாமல் இருப்பது நாஸ்திகம் என்று கருதிக் கொண்டு ஏதாவது ஒரு மதத்தின் பேரால் உயிர்வாழ வேண்டியவனாய் இருக்கிறான்; ஆதலால், எப்படியாவது தான் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க வேண்டும்; மற்றபடி மதக் கொள்கைகள் எவை, எப்படி இருந்தாலும் தான் இலட்சியம் செய்வதில்லை என்கின்ற கருத்தின் மீதே தனக்குள் எவ்விதக் கொள்கையும் இல்லாமல், ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு, ஏதோ ஒரு மத வேஷத்தைப் போட்டுக் கொண்டு இருக்க வேண்டியவனாக இருக்கிறான்.

 மற்றும் பலரும் அதுபோலவே மதங்களுக்கு உள்ள செல்வாக்குக்குப் பயந்து கொண்டு மத வேஷக்காரர்களாய் இருக்கிறார்கள். பரத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருப்பது போலவே, இகத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருக்கிறார்கள்.

பொதுவாகப் பார்க்கப்போனால், கடவுள் ஏற்பட்ட வெகு காலத்துக்குப் பிறகுதான் மதம் ஏற்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய, கடவுளும் மதமும் இரட்டைப் பிள்ளைகள்போல் பிறந்தவை அல்ல. எப்படி இருந்தாலும், மதங்களானவை இன்று சடங்காகவும், வேஷமாகவும் இருக்கின்றனவே ஒழிய, கொள்கையாகக் கூட எந்த மதமும் அனுபவத்தில் இருக்கவில்லை; புத்தகங்களில் பல கொள்கைகள் இந்திருக்கலாம்; இன்னும் இருந்து கொண்டிருக்கலாம். காரியத்தில் அக் கொள்கைகள் பெரிதும் அமலில் இல்லை.

ஆகவே, அமலில் இல்லாத கொள்கைகளைக் கொண்ட மதங்களில் எந்த மதம் மேலானது என்றோ, எந்த மதக் கொள்கை மேலானது என்றோ வாதிப்பதானது, ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கோட்டைகளில் எது பலமான கட்டடம் என்றும், எது வசிப்பதற்குச் சவுகரியமானது என்றும் கேட்பதுபோல் தான் ஆகும்.

முதலாவதாக, ஒரு மதத்துக்குக் கொள்கைகள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு கொள்கை நல்ல கொள்கை என்றால், அதற்கு இரண்டு சக்திகள் இருக்க வேண்டும். முதலாவது, அவை எல்லா மக்களுக்கும் ஒன்றுபோல் அனுபோகத்தில் சமமாக நடத்தக்கூடியனவாக இருக்கவேண்டும். அதோடு கூடவே அக் கொள்கைகள் எல்லா மக்களாலும், எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் தாமாகவே பின்பற்றித் தீர வேண்டியதாகவும் இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட தத்துவங்களைக் கொண்ட கொள்கையை இதுவரை எந்தப் பெரியவரும் கண்டு பிடிக்கவுமில்லை; எந்த மதமும் கொண்டிருக்கவும் இல்லை.

அது செய்தால் பாவம், இது செய்தால் மோட்சம் என்றும்; அது செய்தால் தண்டனை, இது செய்தால் தூக்கு என்றும் இப்படியாகப் பல நிர்ப்பந்தங்கள், பயம், தண்டனை, தண்டனை ஆகியவைகளின் பாதுகாப்பில் ஏற்படுத்தப்பட்ட கொள்கையாகவும், அமலில் கொண்டு வர எப்போதுமே முடியாதனவாகவும், அமலில் கொண்டு வர மிகவும் கஷ்டப்பட வேண்டியவையாகவும், மனிதனால் சாதாரணமாகச் செய்யக் கூடியதும், செய்வதற்கு ஆசையுண்டாக்கக்கூடியதும் அல்லாதவையாகவும் இருக்கக்கூடிய கொள்கைகளையேதான் எந்த மதமும் கொண்டிருக்கிறது.

எந்தக் கொள்கையாவது கடவுளால் உண்டாக்கப்பட்டதாகவோ அல்லது கடவுளுக்கு இஷ்டமானதாகவோ இருந்திருக்குமானால், அது மக்களுக்கு மிகவும் இஷ்டமானதாகவும், செய்வதற்கு மிகவும் ஆசையுடையதாகவும், சுலபத்தில் செய்து முடிக்கக்கூடியதாகவும் இருந்திருக்க வேண்டாமா? கடவுளுக்கு இஷ்டமான கொள்கை மனிதனுக்குக் கசப்பானதாகவும், பெரும்பான்மையோருக்குச் செய்வதற்கு முடியாததாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?

ஆகவே, கடவுளின் பேரால் மதத்தின்மூலம் மத கர்த்தாக்களால் சொல்லப்பட்ட கொள்கைகள் என்பவை, சொன்னவர்களுக்கு அவர்களது புத்தித் திறமையும், அக்காலத்துக்குச் சரி என்று பட்ட கருத்துகளையும் கொண்டவையே தவிர, எந்தக் கொள்கையும் எந்தக் கடவுளாலும் சிருஷ்டிக்கப்பட்டதல்லவென்றே சுயமரியாதைக்காரர்கள் எழுதுகிறார்கள்.

இன்று மதமானது மக்களின் கூட்டு வாழ்க்கையின் அவசியத்துக்கு ஏற்ற கொள்கைகளைக் கொண்டது என்பதுடன் அவை பகுத்தறிவுக்கு ஒத்ததாகவும், கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப திருத்திக் கொள்ளக் கூடியதாகவும் சகல மக்களுக்கும் பலன் ஒன்று போல் உண்டாகக்கூடியதாகவும் இருக்கத்தக்க கொள்கைகள் கொண்டது என்றால், அதை சுயமரியாதைக்காரர்கள் மறுப்பதற்கு முன் வரமாட்டார்கள்.

பகுத்தறிவு கட்டுரை மார்ச் -1936

Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.