கடவுளைப் போல் மோசமானதல்ல நம் அறிவு. குடி அரசு - 8.2.1931

Rate this item
(0 votes)

சகோதரர்களே! சகோதரிகளே!!

சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில், எது எது சமரச சன்மாக்கம் என்கிறோமோ, எது எது உண்மையான, இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின்றோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது. இது நமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே அப்படித்தான் அமைக்கப்பட்டுப் போயிற்று.

ஆனால், நமது நாட்டில் மற்ற நாடுகளை விட வெகுதூரம் அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டுவிட்டது. முதலாவது, கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவைகள் இயற்கைக்குப் பாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல், நியாயப்பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில், ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றிப் பேசவேண்டுமானால், மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களாலோ, அறிவாளிகளாகலோ பேச முடியாது.

 ஏனெனில், அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும். அதோடு மாத்திரமல்லாமல், சமசரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப்பட்டவைகளாகும்.

கடவுளையும், மதத்தையும், பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியாதென்று கருதித்தான் ருசியர்கள் பாதிரிமார்கள் தொல்லையையும், சர்ச்சுகளையும், பணக்காரத் தன்மைகளையும் அழித்துத்தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ருசிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகள் என்றே தீர்மானிக்கப்பட்டு அவர்களை அழித்து விட்டார்கள். அழித்துவிட்டார்கள் என்றால் கொன்று விட்டார்கள் என்பது கருத்தல்ல.

 ஏதோ சிலரை அதாவது, சமரசத்திற்கு எதிர்ப்பிரசாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர, மற்றவர்களைப் பட்டாளத்தில் சேரச் செய்தார்கள்; சிலரை விவசாயத்தில் போட்டார்கள்; சிலரை வைத்தியத்தில் போட்டார்கள்; வேறு காரியங்களுக்கு உதவாதவர்களை காவல் காக்கப் போட்டார்கள், அது போலவே சர்ச்சுகளை தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள். இவைகளுக்கு உதவாமல் போக்குவரவுக்கும், மற்ற சவுகரியங்களுக்கும் இடையூறாயிருப்பவைகளை இடித்தார்கள்.

 பணக்காரர்கள் சொத்தைப் பிடுங்கி, பொதுஜன சொத்தாக்கி பூமி இல்லாதவர்களுக்குப் பூமி, தொழில் இல்லாதவர்களுக்குத் தொழில், படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பு முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத்தினார்கள். கல்யாண முறையை ஒழித்து பெண் அடிமையை நீக்கினார்கள். கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறும் முறையை நிறுத்தச் செய்து, அளவுபடுத்தி ஆண், பெண் வாழ்க்கை இன்பத்திற்கு சவுகரியம் செய்தார்கள்; இன்னும் பல காரியங்கள் செய்தார்கள்.

ஆனால் நமக்கு இவை பொருந்துமா? என்று சிலர் கேட்பார்கள், யார் கேட்பார்கள் என்றால், பணக்காரன், பாதிரி, உயர்ந்த சாதிக்காரன், அரசன் ஆகியவர்கள்தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத்தொகையில் 100-க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள், மற்றவர்கள் 100-க்கு 90-க்கு மேற்பட்டவர் களாவார்கள். ஆதலால் குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள், அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கவேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்?

 முதலாவது, இந்த மூன்று ஆதிக்கத்தை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா? இருக்க வேண்டுமென்று சொல்லுகின்றீர்களா? என்ன சொல்லுகின்றீர்கள்? (சிரிப்பு) ஆகவே, இம்மூன்றும் ஒழிய அவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால், நமக்கு இன்றே அம்மூன்றும் ஒழிய வேண்டும் என்கின்ற ஆத்திரமுமில்லை. ஏனெனில், இன்னும் அனேக நாடுகள் இருக்கின்றன. அவை இப்போதுதான் முயற்சித்திருக்கின்றது. ஆகையால், வரிசைக்கிரமத்தில் அந்த முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாததான ஜாதி உயர்வு தாழ்வு முறை என்பது சாதாரண சமரச சமன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆகவேண்டும். இதற்கு நாம் தர்ம சாத்திரம், கடவுள் செயல், கர்ம பலன் ஆகியவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் பலனில்லை.

சகோதரர்களே! நீங்கள் தர்மத்திற்கும், சாஸ்திரத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும் எத்தனைக் காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். என்ன பலன் அடைந்து இருக்கின்றீர்கள்? இந்த நிலைமையில் உங்கள் ஆயுட்காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று கருதுகின்றீர்களா? இன்றைய நிலைமையே தான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லட்சியம் என்று கருதுவீர்களானால், நீங்கள் எதற்காக நாளைய தினம் வரையில் கூட உயிருடன் இருக்கவேண்டும் என்று கருதுகின்றீர்கள் என்பது எனக்குப் புலப்படவில்லை.

மனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லட்சியமோ இருக்கவேண்டும். சும்மா, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதுபோல் வெறும் ஆகாரம் உட்கொள்ளவும், உட்கொண்டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீன உணர்ச்சியும், ஞானமுமற்ற ஜந்துக்கள் இருக்கின்றதோ, இது போதாதா? இனி, மனிதன் என்றும், ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன் என்றும் சொல்லிக் கொண்டு, பண்டிதன் என்றும் பணக்காரன் என்றும் கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும் பின்பற்றி, கடவுளென்று பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழ வேண்டுமா? என்று கேட்கின்றேன்.

இதைப் போன்ற ஆறிவீனமும், அவமானமுமான காரியம் மனித சமூகத்திற்கு வேறொன்றில்லை என்றே சொல்லுவேன். இந்த வித மனித சமூகம் அழிந்து போவது ஜீவகாருண்ணியத்தை உத்தேசித்தாவது மிகவும் அவசியமானதென்று தோன்றுகின்றது.

ஆகவே, உங்கள் லட்சியங்களை முடிவு செய்துகொள்ளுங்கள். அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள். அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள். இந்த ஜன்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டைக் கற்பித்திருக்கின்றார்கள். முன் ஜென்ம சங்கதி ஏதாவது ஒன்று அதாவது, உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டானது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருக்கின்றதா? ஞாபகமிருந்தால் அல்லவா இந்த ஜென்ம காரியங்களின் செய்கைகளோ, பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப் போகின்றது?

அன்றியும், கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி, உங்கள் கஷ்டத்தை நிலைநிறுத்தி உங்கள் சந்ததிகளுக்கு விட்டுவிட்டுச் சாகாதீர்கள். உணர்ச்சியும், அறிவும் அற்ற சோம்பேறிகளுக்குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும். மற்றவனுக்கு அது சிறிதும் பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேறியாகின்றீர்கள்? கடவுளுக்கு இடம் கொடுத்து கோயில் கட்டி, உறுப்படிகளை அதிகமாக்கி, நமது குறைகளையும், கஷ்டங்களையும் முறையிட்டு, முறையிட்டு அழுது வந்தது போதும் என்றே சொல்லுகின்றேன்.

இனி, அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள்; உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நடவுங்கள், உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள்; அதை மதியுங்கள், அதனிடம் நம்பிக்கை வையுங்கள்; அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும்.

கடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும், வளர்ச்சியும், மற்ற நாட்டு வர்த்தமானங்களும், உங்கள் நடுநிலைமையுமேயாகும். ஆகையால், மற்ற நாட்டு வர்த்தமானங்களை உணர்ந்து, நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்குப் பூசை போட்டீர்களானால், வந்துவிட்டது அன்றே சமரசம்! சன்மார்க்கம்! விடுதலை!!! இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

16.1.1931) அன்று ஈரோட்டு தாலுகாவை அடுத்த கிரே நகரில் நடந்த ஆதித் திராவிடரின் ஆண்டு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

குடி அரசு - 8.2.1931  

Read 27 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.