துன்பம் தரும் தீபாவளி. குடிஅரசு கட்டுரை -31.10.1937

Rate this item
(0 votes)

தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.

இரண்யாட்சன் என்ற இராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்ச்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்திலிருந்து வெளியாக்கி, பூமியைப் பிடுங்குவதற்காகப் பன்றி உருவமெடுத்துப் போய் இராட்சதனைப் பிடித்துப் பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம். அந்தச் சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம்.

 அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும் அவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணு இடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் அவனைக் கொன்றாராம். நரகாசுரன், தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டுக் கொண்டானாம். அதற்காக விஷ்ணு அந்த நாளை உலகம் கொண்டாடும் படி செய்தாராம். இது தான் தீபாவளியாம்!

 தோழர்களே, ஆரியரின் கதை சோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில் பூமியை இராட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான். சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன் மேல் இருந்திருக்கும். கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவஉரு எடுக்காமல், மலம் சாப்பிடும் ஜீவஉரு எடுப்பானேன்?

 அந்த அழகைப் பார்த்துப் பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாள் என்றால் பூமிதேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத் தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லுவது. அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும். பூமிதேவியும், சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரததேவியும், அரபிக்கடலும், வங்காளக்குடாக் கடலுந்தானா இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றையெல்லாந் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள், தமிழர்களைத் தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்னென்னவோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அன்னிய மக்கள் நினைப்பார்கள்?

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய்க் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடாமல் இருந்து, மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா?

இந்தி ஆரிய மொழி என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிகத்தை நிலைநாட்டவே இந்தியை ஆரியர்கள் கட்டாயமாய்ப் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வது உண்மையானால் அதற்காகத் தமிழ் மக்கள் அதிருப்தியும் மனவேதனையும் படுவது உண்மையானால் தமிழ்மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடலாமா?

குடிஅரசு கட்டுரை -31.10.1937

***

அக்கிராசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும், நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள். இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு நஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பவைகளை நம் மக்கள் நினைப்பதேயில்லை. அப்பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவுசெய்து துன்பப்படுகிறான். தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது. கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகின்றது.

பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர்போவதாலும், பட்டாசு சுடும்போது திடீரென்று வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம் வருவதும் அல்லாமல், இந்தப் பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம் கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனை பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள். இவைகளை எந்த இந்தியப் பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன்.

(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் சொற்பொழிவு 'குடிஅரசு' 20.10.1929)

Read 32 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.