ஆதிக்கத்திற்கு கேடு ஏற்படுவதால் வெள்ளையனை எதிர்க்கிறார்கள்! 29.9.1935

Rate this item
(0 votes)

இந்நாட்டில் இன்று எங்கே பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றி பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18 வருஷகாலமாகத்தான் வெளிப்படையாகவும் தைரியமாகவும் கிளர்ச்சி செய்ய சந்தர்ப்பமும் சவுகரியமும் பெற்றிருக்கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் அரசர்கள், மூவேந்தர்கள் முதலியவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மிகக் கேவலமாகவே உயிர் வாழ்ந்ததாகத்தான் காணக்கிடக்கிறது. இந்து அரசர்கள் அல்லாத முகமதியர் அரசர்கள், கிறிஸ்துவர் அரசர்கள் ஆகியவர்கள் ஆட்சிக்காலமே - உங்களை ஓரளவுக்காவது மனிதர்களாக நடத்தப்பட்டதாகச் சரித்திரமும் பிரத்தியட்ச அனுபவமும் காணப்படுகின்றன.

மற்ற காரியங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டு வந்தது என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய உங்களைப் பொறுத்தமட்டில் யோக்கியமாகவும் கூடிய அளவுக்கு நீதியாகவும் ஆட்சி புரிந்திருக்கிறது என்று தைரியமாய்ச் சொல்லுவேன். இன்று தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு, பஞ்சாயத்து சபை, சட்டசபை, இந்திய சட்டசபை ஆகியவைகளில் உங்களுக்கு ஸ்தானம் அளித்து பெரிய சாஸ்திரிகள், கனபாடிகள், சங்கராச்சாரிய சுவாமிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்பவர்களுக்குச் சமமாய் நடத்துகிறார்கள். ஆனால், ராமராஜ்யத்தில் இந்தச் சபைகளுக்கு கக்கூஸ் வாரவோ, பங்கா போடவோகூட உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.

 இப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களைப் பொறுத்தவரை, எவ்வளவோ நன்மை செய்து வந்திருப்பதோடு உங்களுக்கு ஒரு மந்திரி ஸ்தானமும் கிடைக்கும்படியான அளவுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி சீர்திருத்தம் வழங்கி இருக்கிறது. நான் ஏதோ ராஜவிஸ்வாச உபன்னியாசம் செய்வதாய் ‘தேசாபிமான வீரர்'களுக்குத் தோன்றலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமே அல்லாமல், உலகில் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே ஒழிந்துபோக வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவன் நான். ராஜாக்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும், பொதுஜனங்களுடைய சுயமரியாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும் சொல்லியும் எழுதியும் வருகின்றவன் நான்.

 இன்று உங்கள் மக்களுக்கு இருக்கும் தரித்திரமும் கொடுமையும் சேர்ந்து, இந்த ராமராஜ்ஜியத்தை ஆதரிக்கச் செய்கின்றது. ஏன், உங்களைவிட பெரிய ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதி இந்துக்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பசியான தங்களுடைய சூத்திரப்பட்டம், இந்த ராமராஜ்ஜியத்தில் ஒழியாது என்று தெரிந்திருந்தும் - எத்தனை பேர் இன்று அதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, உங்களில் சிலர் ஆதரிப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை.

இவ்வளவு தூரம் நான் இவற்றை விவரித்துச் சொல்லக் காரணம், இன்றுள்ள உங்கள் குறைகள், இழிவுகள் நீங்கி மனிதத்தன்மை பெறுவதற்கு நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியைத்தான் நம்ப வேண்டுமென்றும், அது உள்ள காலத்திலேயே உங்கள் குறைகளை, இழிவுகளை நிவர்த்தி செய்து கொள்ள முயல வேண்டும் என்றும், அரசாங்கத்துக்கு விரோதமாகப் பேசவோ, மக்களுக்குள் விரோத உணர்ச்சி ஏற்படச் செய்கின்றதோ, அரசாங்கத்தோடு போர் புரிவதாகவோ சொல்லிக் கொள்ளுகின்ற கட்சியிலோ, கூட்டத்திலோ நீங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் சொல்லுவதற்காகவே இவற்றைச் சொல்லுகிறேன்.

நீங்கள் எல்லோரும் அப்படிச் செய்யவில்லையா என்றும் மற்றும் எத்தனையோ பேர் அந்தப்படி அரசாங்கத்துக்கு விரோதமாய் நடந்து கொண்டு வாழவில்லையா என்றும் கேட்பீர்கள். அவர்கள் நிலை வேறு; உங்கள் நிலை வேறு; அவர்களில் சிலர் இன்று மதத்தில் கீழாக மதிக்கப்பட்டாலும் பழக்க வழக்கத்தில் பலர் சமமாக மதிக்கப்படுகிறார்கள். கல்வியில் சிறிது முன்னணிக்கு வந்து விட்டார்கள். பார்ப்பனர்கள் சங்கதியோ கேட்க வேண்டியதில்லை. பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் யோக்கியதையை அவர்கள் அடைந்து விட்டார்கள்.

இது மாத்திரமல்லாமல், அவர்கள் மதத்துக்கும் பழக்க வழக்கத்துக்கும் விரோதமாக அரசாங்கம் சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்படுவதாலும், அதனால் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பங்கம் வரும்போல் இருப்பதாலும், அச்சீர்திருத்தங்களைச் செய்ய வொட்டாமலும், செய்துவிட்டால் - அது அமலில் நடத்தப்படாமலும் இருப்பதற்கு ஆக வேண்டியாவது, அரசாங்கத்தை வழிமறிப்பதற்காக - அரசாங்கத்துக்குத் தொல்லை விளைவிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆதலால், அவர்களுடன் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.

((29.9.1935 அன்று ராசிபுரம் தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில் ஆற்றிய உரை))

Read 27 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.