தீபாவளி தேவையா? குடிஅரசு தலையங்கம் - 22.11.1931

Rate this item
(0 votes)

வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த 10 கோடியும் அனாவசியமாய் - துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசன் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த - சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

 இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு? தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

குடிஅரசு தலையங்கம் - 22.11.1931

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்!

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து - புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.

 பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவது ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது ஏழு; மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன் படவேண்டியிருக்கிறது என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் - மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

 ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனீயப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்துக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாகச் சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று ஒப்புக்கொண்டாய்விட்டது. அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரகணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய, தீபாவளிப் பண்டிகைக்கு மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இவ்வளவு பாராட்டுதலும் செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்லவேண்டும்?

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று. அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் - நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை - தீபவாளி என்று கொண்டாடவேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

பகுத்தறிவு - 1936

Read 61 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.