மலாய் நாட்டில் சுயமரியாதைச் சங்கம் உண்மைத் தர்மம் (குடி அரசு - தலையங்கம் - 27.07.1930)

Rate this item
(0 votes)

மலாய் நாட்டின் முக்கிய பட்டணமாகிய சிங்கப்பூரில் “தமிழர் சீர் திருத்தக்காரர்கள் சங்கம்” என்பதாக ஒரு சுயமரியாதைச் சங்கம் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பற்றிய விவரம் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம்.

இதற்காகக் கூட்டப்பட்டுள்ள முதல் கூட்டத்திற்கு அவ்வூர் பிரமுகர்கள் சுமார் 150 பேர்களுக்கு மேலாகவே கூட்டினதும், தலைமை வகித்த திரு. ராமசாமியார் பேசிய தலைமைப் பேருரைப் பேச்சுகளும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதாவது சங்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுகையில்,

1. மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாச்சிரம தர்மத்தையும், தீண்டாமையையும் ஒழித்தல்.
2. பெண்களுக்கு உரிமை அளித்தல்.
3. அறிவு விருத்திக்கான கல்வியைப் போதித்தல்.
4. சிக்கன முறையைக் கைக் கொள்ளுதல்.
5. அறிவிற்குப் பொருத்தமற்ற பழக்க வழக்கங்களை நீக்குதல்.

என்று சொன்னதிலிருந்து அவைகள் சுயமரியாதைக் கொள்கைகளை எவ்வளவு நுட்பமாக உணர்த்திச் சொல்லப்பட்ட உரைகள் என்பது யாவருக்கும் எளிதில் விளங்கும்.

 

தவிரவும் “சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சங்கங்கள் அனேகம் உடனுக்குடன் மறைந்து போவதற்குக் காரணம் அச்சங்கங்களுக்கு ஒரு சொந்த இடம் இல்லாததே” என்று குறிப்பிட்டு விட்டு அதற்காக தானும் திருவாளர் பி. கோவிந்தசாமி செட்டியாரும் சேர்ந்து ஒரு கட்டிடம் வாங்கி உதவுவதாய் அக்கூட்டத்திலேயே வாக்களித்திருப்பதானது அவர்களின் பரோபகார எண்ணத்தையும் உண்மைத் தர்மத்தை உணர்ந்திருக்கும் உணர்ச்சியையும் காட்டுகின்றது.

மலாய் நாட்டில் எங்கு பார்த்தாலும் சீனர்களுக்கு ஒரு பொது இடம் இருப்பதை நமது சுற்றுப் பிரயாணத்தில் கண்டோம்.

 

ஆனால் அங்கு இந்தியர்களுக்கு எங்கு பார்த்தாலும் கோவிலும், பூஜையும் தான் பார்க்க முடிந்ததே ஒழிய ஒரு தனிப் பொதுக் கட்டிடம் நமது கண்களுக்குத் தென்படவே இல்லை. இதை எதற்காக எடுத்துக்காட்டுகின்றோமென்றால் இந்தியர்களின் அறிவே, பொது நலம் என்றால்- பொது தர்மம் என்றால் கோவிலைக் கட்டி குழவிக் கல்லை நட்டி கும்பாபிஷேகம் செய்து அதில் முட்டிக் கொள்வதேதான் என்று கருதி இருக்கிறார்கள்.

ஆனால் நமது உயர் திருவாளர்கள் ஓ. ராமசாமி நாடார் அவர்களும், பி. கோவிந்தசாமி செட்டியார் (நாயுடு) அவர்களும் சேர்ந்து சுமார் 15 ஆயிரம் அல்லது 20000 ரூ.க்குள் ஒரு கட்டிடம் வாங்கி உதவுவதாய் தீர்மானித்து இருப்பதிலிருந்து கோவிலுக்கு பணம் போடுவது முட்டாள்தனம் என்பதை நன்றாய் உணர்ந்து விட்டார்கள் என்றே தெரிகின்றது.

 

இக்கட்டிடமும் சங்கமும் நிரந்தரமாய் இருந்து அதன் கடமைகளைச் செய்ய வேண்டுமானால் அதற்கு சிறிது பண்டுத் துகையும் இருக்க வேண்டும் என்பதே நமது அபிப்பிராயமாகும். அதற்கும் திரு. நாடார் அவர்கள் முயற்சிப்பார்கள் என்றே நம்புகின்றோம்.

இவ்விஷயத்தில் பார்ப்பன சூட்சியும், அவர்களது தாசர்களது தொல்லைகளும் தடைகளாக ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் அவர்களுக்கெல்லாம் நமது நாடாரவர்கள் சிறிதும் பயப்படமாட்டார் என்பது நமது உறுதியாகும்.

எப்படியெனில் திரு. நாடாரவர்கள் முடிவுரையில், “நமது இயக்கத்திற்கு எவ்வளவுக் கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு பலமாகவும், வேகமாகவும் இயக்கம் பரவும்”.

என்று சொல்லியிருப்பதிலிருந்து எதிர்ப்புகளையும், தடுப்புகளையும் வரவேற்கின்றார் என்பது நன்றாய் விளங்குகின்றது.

மற்றும் சுயமரியாதை வீரர்களான கோ. சாரங்கபாணி, அதிசயம், எஸ். கோபால், அ. ராஜகோபால் முதலியவர்களும் மற்றும் திருவாளர்கள் வெ. சோமசுந்திரம் செட்டியார், கோ. ராமலிங்கத் தேவர், அ. கி. சுப்பண்ணன், கா. தாமோதரனார், ரா. து. கோவிந்தசாமி, மு. ரெ. முத்துக்கண்டியர், த.வ. குமாரசாமி, ச. குப்புசாமி, பு. ரா. கோவிந்தசாமி, ரெ.திருவேங்கிடம், அ. க. நாராயணசாமி, எ. ஆ. சிவராயபிள்ளை ஆகியவர்களும் இம்முயற்சியில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்க இச்சங்கமானது சிங்கையில் தலைசிறந்து விளங்கி ஒரு செல்வாக்குப் பொருந்திய பொது நல ஸ்தாபனமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஆகவே வெகு சீக்கிரத்தில் அச்சங்கத்திற்கு கட்டிடம் முதலியவைகள் ஏற்பட்டு திறப்புவிழா நடந்து பிரசாரம் துவக்கப்படும் என்று உறுதியாய் நம்புவதுடன் இந்திய தாழ்த்தப்பட்ட - கொடுமைப் படுத்தப்பட்ட - இழிவுபடுத்தப்பட்ட - மக்களின் சார்பாக மேல்கண்ட நண்பர்களுக்கு நமது மனம் நிறைந்த நன்றியறிதலைச் செலுத்துகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 27.07.1930)

Read 48 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.