வகுப்புரிமையா? வகுப்புத் துவேஷமா? விடுதலை - 29-8-1950

Rate this item
(0 votes)

 

வகுப்புவாரி உரிமை வேண்டாதவன் தன் வகுப்பை உணரமுடியாதவனோ, தன் வகுப்பைப் பற்றிச் சந்தேகப்படத்தக்கவனோ ஆவான். ஒரு வகுப்பான், தன் வகுப்புரிமை கேட்கும் தேசத் துரோகம் என்று சொல்லப்படுமானால் அப்படிச் சொல்லுகிறவன் ஒரு தேசத்தையும் சேர்ந்திராத நாடோடி, லம்பாடி வகுப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும். நம்மவர்களுக்கு உண்மையான வகுப்புணர்ச்சி இல்லாததாலேயே, நாம் நாடற்ற நாடோடிகளால் அடக்கி ஆளப்பட்டு வருகிறோம்.

இங்கிலீஷ்காரன் இன்று, அவன் நாட்டின் மீது இத்தனை ஆயிரக்கணக்கான ஆகாயக் கப்பல்கள் பறந்து, பதினாயிரக்கணக்கான வெடிகுண்டுகள் வீழ்ந்து, குழந்தைகளும், குட்டிகளும், மாடங்களும், மாளிகைகளும் நாசமானாலும் கூட, ‘ஓர் உயிர் உள்ளவரை போராடியே தீருவேன்’ என்று சொல்லுவதன் கருத்து, அவன் வகுப்பு உணர்ச்சியின் - வகுப்புவாதத் தன்மையின் உச்சநிலையேயாகும். நம் நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்களுக்கு வகுப்பு உணர்ச்சியோ, நாட்டு உணர்ச்சியோ ஏற்படுவதற்கு நியாயமில்லை. ஆகவேதான், ‘ஏன் சண்டை போட வேண்டும்? விட்டுவிட்டுப் போகலாமே’ என்கின்ற ஞானமும், ‘யார் ஜெயித்தால்தான் என்ன?’ என்கின்ற ஞானமும் உதயமாகின்றன. அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆதிக்கம் வந்ததாலேயே நம் நாட்டிற்கு இப்படி அடிக்கடி படையெடுப்புகளும், ஆபத்துகளும் நேருவது மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்களாகிய நாம் - நாடோடிகளால், சூத்திரர்களாகக் கருதப்படுகிறோம்.

மூன்று தலைமுறையோ அல்லது ஒரு நூற்றாண்டோ ஒரே ஊரில் இருந்ததாக ஏதாவது ஓர் ஆரியக் குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா? பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சவுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல் - ஊர் பாத்தியமோ, குலமுறை பாத்தியமோ சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா? அப்படிப்பட்டவர்கள் - நம்மை, நாம் நமது வகுப்புரிமை கேட்பதால் ‘வகுப்புவாதி’ என்றும் - ‘தேசத் துரோகி’ என்றும் - ‘உத்தியோக வேட்டைக்காரர்கள்’ என்றும் சொல்வார்களானால், அது நமது கோழைத்தன்மையும், வாழ்க்கையின் மானமற்ற ஈனத்தன்மையின் பயனுமே ஆகும்.

நாம் உத்தியோக வேட்டைக்காரர்களாம்! ‘ஆம்’ என்றே வைத்துக் கொள்வோம். நாம் உத்தியோக வேட்டை ஆடுவதில் தப்பு என்னவென்று கேட்கிறேன்? திராவிட நாட்டில் ஒரு பார்ப்பானோ - ஓர் ஆரியனோ உத்தியோக வேட்டையாடுவதும், ஒரு திராவிடன் உத்தியோக வேட்டையாடுவதும் என்றால், யாருக்கு உத்தியோக வேட்டை ஆட உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன். உத்தியோக வேட்டையாடாத வகுப்பானுக்கு அவன் நாட்டினிடமும், அவன் வகுப்பினிடமும் பொறுப்பில்லை என்பதோடு, அவனை வகுப்புத் துரோகி என்றுகூடச் சொல்லத் துணிவேன். ஒவ்வொரு வகுப்புக்கும் அவனது வகுப்பு எண்ணிக்கை அளவுக்கு உத்தியோகம் கொடுக்க ஆட்சேபித்தால் - ஆட்சேபிக்கப்பட்ட வகுப்பை இழிவுபடுத்தியதாகவும், கோழைத்தனமுள்ள, மானமற்ற, யோக்கியதையற்ற வகுப்பாகக் கருதியதாகவும், அர்த்தமாகும். எந்த வகுப்பான் தன்னுடைய வகுப்பு எண்ணிக்கை அளவுக்குத் தனது நாட்டில் உத்தியோக வேட்டையாடிப் பெறவில்லையோ, அந்த வகுப்பான் மானமற்ற கோழை வகுப்பானே ஆவான். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன்?

உத்தியோகம் யார் அப்பன் வீட்டுச் சொத்து? உத்தியோகத்துக்குத் தரப்படும் சம்பளம் யார் தாய் - தந்தையார் பாடுபட்ட சொத்து? உத்தியோகம் யாருக்காக, எந்த வகுப்புக்காக நிர்வாகம் செய்யப்படுவது என்பதை ஒரு நாட்டானோ, வகுப்பானோ தெரிந்து கொள்வானேயானால் - மற்ற நாட்டானோ, மற்ற வர்க்கத்தானோ, மற்ற வகுப்பானோ நம் நாட் டில் வந்து உத்தியோகம் பார்ப்பதைப் பிராணனை விட்டாவது தடுக்கமாட்டானா என்று கேட்கிறேன்.

சென்னையில், 8-9-1940இல் சொற்பொழிவு

விடுதலை - 29-8-1950

Read 35 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.