சூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா? விடுதலை - 20.4.1955

Rate this item
(0 votes)

நாங்கள் இவ்விதக் காரியத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் எல்லாம் முதலாவதாக, எங்களுக்குள்ள இழிநிலையும் சூத்திர, பஞ்சமன் என்ற இழிவுப் பட்டம் நீங்க வேண்டும் என்பதற்கேயாகும். ஆனால், இவ்வித இழிவையும் கீழ்சாதிப் பட்டத்தையும் எண்ணி இதை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் நாங்கள்தான். வேறு யாரும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால், இவ்வித இழி நிலைமை நீங்க வேண்டுமென்பது, தனிப்பட்ட என்னுடைய சுயநலத்திற்கு மட்டுமல்ல; இதனால் எனக்கு மட்டும் இழிவு கிடையாது. சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் அழைக்கப்படுகிற திராவிட மக்கள் அத்தனை பேருக்கும் உள்ள இழிவைப் போக்கவேயாகும்.

இன்று மந்திரியாக இருக்கும் சூத்திரன், மந்திரி என்பதால் சூத்திரன் என்ற இழிநிலை போகாது. இன்று மந்திரியாக இருக்கிற பறையர், மந்திரியாக இருப்பதால் அவருடைய பறையர் என்ற பட்டம் போகாது. வேலை முடிந்ததும் ஊருக்குப் போகிற அவர்கள், தங்கள் தங்கள் பறைச்சேரிக்குத்தான் போவார்கள். இன்று சூத்திரர்களும், பஞ்சமர்களும், மந்திரியாகவும், சட்டசபை மெம்பராகவும் (உறுப்பினராகவும்) வந்தார்கள் என்றால், நாங்கள் கூப்பாடு போட்டதால்தான் முடிந்தது. இன்றைக்குப் பறையரும், பள்ளரும் ஓரளவு கல்வி கற்க போதிய வசதியும் சலுகையும் அளிக்கப்பட்டு, அதனால் படிக்கவும் முடிந்தது என்றால், அதுவும் எங்களது முயற்சியினால்தான். எனவே, இவர்கள் யாரைக் கொண்டு முன்னுக்கு வர முடிந்ததோ, அவர்களையே எதிரிகளாக நினைக்கின்றனர். ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினால், எங்களை வகுப்புவாதி என்கின்றனர்.

 "உலக உத்தமர்' என்ற காந்தியாரே சூத்திரன்தான். அவரும் தன்னை அடிக்கடி "நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வார். அப்படிப்பட்ட "மகாத்மாவே' ஜாதியைப் பற்றிச் சிந்தித்தாரா? அதை ஒழிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது பேசினாரா? அவர் பச்சையாகவே “நான் வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே வந்தேன்; ராமராஜ்யத்தை நிலைநாட்டுவதே என் நோக்கம்'' என்று கூறினார். அதற்கென்று மக்களை எல்லாம் ராமபஜனை செய்யச் சொன்னார். அதனால்தான் பார்ப்பனர் எல்லாரும் கூடி, அவருக்கு "மகாத்மா' பட்டம் கொடுத்தனர். இல்லையேல், அவர் இதுவரையாவது உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

நானும் "மகாத்மா' ஆக முடியும். இன்றைக்கே “பார்ப்பனர் எல்லாரும் சாட்ஷாத் பூதேவர்கள்; மதம் அவசியம் வேண்டும், கடவுள் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அவசியம் பார்ப்பனர்கள் எல்லாக் கோயிலுக்கும் மணியாட்டத்தான் வேண்டும். இல்லையேல் உலகமே நாசமாய்ப் போய்விடும்'' என்று, இன்றைக்கு இக்கூட்டத்திலேயே பேசினால் போதுமே! உடனே தந்திமேல் தந்தி பறக்கும்; இங்குள்ள பார்ப்பனர் எல்லாரும் உடனே திரு. காமராசருக்குத் தந்தி கொடுப்பார்கள்; உடனே அவர் மத்திய அரசாங்கத்துக்கு "இங்கு இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ. ராமசாமி பக்தராகிவிட்டார். அதுவும் என்னுடைய ஆட்சியில் அவர் கொள்கைகள் மாற்றப்பட்டன'' என்று ஒரு வரி அதிகம் கொடுத்தால், உடனே எனக்கு மறுகணமே "மகாத்மா ராமசாமி' என்று கூப்பிட உத்தரவிடுவார்கள்! அங்கிருந்து “ராமசாமிக்கு ஒரு மந்திரி வேலை வேண்டுமா? இரண்டு மந்திரி வேலை வேண்டுமா? என்று கேள்!'' என்று பதில் வரும்.

ஆனால், நான் மற்றவர்களைப் போல் எண்ணமில்லாதவனாகையால், என்னுடைய வாழ்நாளில் ஏதும் பொதுத் தொண்டினைச் செய்தாக வேண்டும் என்று, நம் திராவிட மக்களுக்கென்று இக்காரியத்தில் ஈடுபட்டு, கடந்த 30 ஆண்டுகளாகப் பற்பல எதிர்ப்புகளுக்கிடையிலும் கஷ்டங்களுக்கிடையிலும் துணிந்து செய்து வருகிறேன்.

ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர். "பணக்காரன் ஒழிந்தால் ஜாதி ஒழியும்'' என்கின்றனர். ஆனால், ஜாதி இருப்பதால்தானே அவனிடம் பணம் போய்ச் சேருகிறது என்பதை உணருவதில்லை. தனக்குத் தெரியுமானாலும், அக்கட்சியின் தலைவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் ஆனதால், அதுபற்றிக் கூறுவதே கிடையாது. ஏதாவது உதாரணம் சொல்ல லெனின் சொல்லவில்லையே, மார்க்ஸ் சொல்லவில்லையே? என்றால், லெனின் இருந்த நாட்டில் பார்ப்பான் பறையன் இருந்தானா? இவர்கள் இருக்கவுமில்லை; அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், இங்கு நேரிலேயே பார்க்கிறோமே பார்ப்பானையும் பறையனையும்! அதுமட்டுமா? சாஸ்திரத்தில் பார்க்கிறோம், சட்டத்தில் பார்க்கிறோம். ஆகவேதான் இங்கு இவைகளை ஒழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எனவேதான், நாங்கள் கோருவது எல்லாம் மக்களுக்குச் சோற்றுக்கும், உத்தியோகத்திற்கும் மாத்திரமின்றி, பரம்பரை இழிவு நீங்க வேண்டும் என்பதேதான். அந்நியன் இந்நாட்டைச் சுரண்டாது, வேறு இங்குள்ள எவராவது ஆட்சி செய்தாலும் போதும். பார்ப்பனர்களின் அட்டூழியம், ஜாதி முறையும் ஒழிந்து, ராமாயணத்தில் ஒரு ஜதை செருப்பு ஆண்டதாகக் கூறப்படுகிறதைப் போல் எங்களை ஒரு ஜதை செருப்பு ஆட்சிபுரிந்தாலும் சரியே. மக்கள் சுயமரியாதை கொண்டவர்களாக, மனிதத் தன்மையுடன் வாழ வேண்டும். மனித ஜாதி என்ற ஒரு ஜாதிதான் இருக்க வேண்டும்.

13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை.

விடுதலை - 20.4.1955

 
 
Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.