இடஒதுக்கீடே தேசாபிமானத்தின் ரகசியம். பகுத்தறிவு தலையங்கம் - 23.12.1934

Rate this item
(0 votes)

பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டு சுமார் 15 வருட காலமே ஆகியிருந்தாலுங்கூட, அது ஏற்பட்ட பிறகு இந்த நாட்டுக்கு 100க்கு 97 பேர்களாய் உள்ள நம் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும், சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் எவ்வளவு பயன் அளித்து வந்திருக்கின்றது என்பதை உணர்ந்தால், பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் அவர்களுக்கு உதவி செய்யும் மூடர்களுடையவும், கூலிகளுடையவும், குலத் துரோகிகளுடையவும், யோக்கியதையும் சிறிதாவது விளங்காமல் போகாது.

தென்னிந்தியாவில் போலிஸ் இலாக்காவிலும், முன்சீப் இலாக்காவிலும் (நிர்வாகம், நீதி என்கின்ற இரண்டு இலாக்காவிலும்) பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்திருக்குமானால், நேற்று நடந்த இந்திய சட்டசபைத் தேர்தல்களின் முடிவு இப்படி ஆகியிருக்காது என்பதற்கு அனேக ஆதாரங்கள் காட்ட நம்மால் முடியும். இது ஒருபுறமிருக்க, இந்த நாட்டுக்குப் பழம்பெரும் குடிமக்களாகிய பார்ப்பனரல்லாதார் நிலை இந்த இருபதாம் நூற்றாண்டிலும், சூத்திரராயும் சண்டாளர்களாயும் மதிக்கப்படவே முடியாது. ஆகவே, கப்பலுக்கு சுக்கான் எப்படி முக்கிய கருவியோ அதுபோல மக்களுக்கு மக்களை நடத்துவதற்கு போலிசும், முன்சீப்பும், சுக்கான் மாதிரியாய் இருந்து வருகின்ற அவ்வளவு முக்கியமானவையாகும்.

 ஆனால், உத்தியோகம்தான் பெரிதா? தேசம் பெரிதா? என்று பார்ப்பனர்கள் நம்மைப் பார்த்துக் கேள்விகள் கேட்பார்கள்; பார்ப்பனர்களது கூலிகளும், அடிமைகளும் இதற்குப் பின்பாட்டும் பாடுவார்கள். உத்தியோகத்தை மனதில் வைத்தே தேசம், தேசாபிமானம் என்று பார்ப்பனர்கள் போசி வரும் ரகசியம் பார்ப்பனரல்லாத "தேசாபிமானிகள்' பலருக்குத் தெரியாது என்பதோடு, பலர் தெரிந்தும் தங்கள் பிழைப்புக்கு வேறு விதியில்லாமல் பின்பாட்டுப் பாடுகின்றார்கள் என்றே நினைக்கின்றோம்.

இன்று தமிழ் நாட்டிலுள்ள தேசபக்திப் பார்ப்பனர்களை எடுத்துக் கொண்டால், அவர்களது பிள்ளை குட்டிகள், போத்துப் பிதிர்கள் எல்லாம் எதை எதிர்பார்த்து இன்று வாழ்கின்றார்கள் வளர்க்கப்படுகின்றார்கள்? B.A., M.A, B.Com, IAS முதலிய படிப்புகள் படிக்க வைக்கிறார்கள் என்பவைகளைப் பார்த்தால், பார்ப்பனர்கள் தேசாபிமானத்தைப் பிரதானமாகக் கருதுகிறார்களா? அல்லது, உத்தியோகத்தைப் பெரிதாகக் கருதுகின்றார்களா? என்ற சூழ்ச்சி விளங்காமல் போகாது. பார்ப்பனர்கள், சர்க்கார் உத்தியோகத்தை எதிர்பார்க்காமலும் வெறும், புத்திக்காகவும் அறிவுக்காகவும், தேசபக்திக்காகவும் படிக்கின்றார்கள் என்று, இன்று எந்த முட்டாளாவது கருதியிருக்கின்றார்களா என்று கேட்கின்றோம்.

ஆகவே, உத்தியோகத்தையே நம்பி உயிர் வாழும் ஒரு கூட்டம் உத்தியோகத்திலேயே 100க்கு 70, 80, 90 கணக்கில் புகுந்து கொண்டும், நத்திக் கொண்டும் மற்றவர்களை உள்ளே விட ஒட்டாமலும் சூழ்ச்சி செய்து வயிறு பிழைக்கும் ஒரு கூட்டம் அதற்காகவே தங்கள் பிள்ளை குட்டி, போத்துப் பிதிர்களைத் தற்புத்தி செய்து கொண்டு அரசாங்க ஆதிக்கத்தைக் கைப்பற்ற எவ்வித இழி தொழிலையும் கையாளும் ஒரு கூட்டம், "உத்தியோகம் பெரிதா? தேசம் பெரிதா?' என்று உத்தியோகத்தில் 100க்கு 25 போர்கள்கூட இல்லாத நம்மைக் கேட்பதாயிருந்தால், இதில் யோக்கியப் பொறுப்போ, நாணயமோ, கடுகளவாவது இருக்க முடியுமா?

ஜஸ்டிஸ் இயக்கத்தின் பயனாய்ப் பார்ப்பனர்களின் ஏகபோக (உத்தியோக) அனுபவிப்பு குறைந்த பிறகுதான் பார்ப்பனர்கள் உத்தியோகம் வேறு, தேசாபிமானம் வேறு என்று சொல்ல ஆரம்பித்தார்களே தவிர, அதற்கு முன்பு வரை உத்தியோகங்களே தேசாபிமானமாய் இருந்து வந்தது யாரும் அறியாததல்ல. உதாரணமாக, ஜஸ்டிஸ் கட்சி ஏற்படும் வரை, காங்கிரஸ் பிரசிடெண்டுகளும் காரியதரிசிகளும், அய்க்கோர்ட் ஜட்ஜுகளாகவும், நிர்வாக சபை மெம்பர்களாகவும் இருந்து வந்ததே போதுமானதாகும்.

ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்பு, தீண்டப்படாதார் நிலை எப்படியிருந்தது என்பது, இப்பொழுது கூலிக்கு மாரடிக்கும் பச்சோந்திகளுக்கும் தேசபக்தர்களுக்கும் "அரைடிக்கட்' தேச பக்தர்களுக்கும் தெரியாவிட்டாலும் ஒரு நாற்பது வயதிற்கு மேற்பட்ட பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத தேசபக்தர் எவரும் அறிந்ததேயாகும். ஆகவே, நமது பார்ப்பனரல்லாதார் சமூகம் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரம் உத்தியோகத்தில் பெறும் வரையிலும் அல்லது பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்கு மேற்பட்ட விகித உத்தியோகம் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் வரையிலும் ஜஸ்டிஸ் கட்சி இருந்து தீர வேண்டியதே என்பதே நமது அபிப்பிராயம்.

அது தேசத் துரோகக் கட்சியாக ஆயினும் சரி, சர்க்கார் தாசர்கள் "குலாம்கள்' கட்சியாயினும் சரி, அதனுடைய பிறப்புரிமையைப் பெற்ற பிறகுதான் அது வேறு வேலையில் இறங்க வேண்டுமே தவிர, அதை விட்டுவிட்டுப் பார்ப்பனர்களுக்குப் பயந்து கொண்டு "எங்களுக்கு வகுப்புவாரித் திட்டம் வேண்டியதில்லை, யாரோ ஒருவர் இருவருக்கு மந்திரிப் பதவியோ, பெரிய சர்க்கார் உத்தியோகப் பதவியோ மாத்திரம் இருந்தால் போதும். நாங்களும் பெரிய தேசபக்தர்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்கள்தாம்' என்றால், அதைவிட ஈனத் துரோகமான கட்சி உலகில் வேறு இல்லையென்றுதான் சொல்லுவோம்.

பகுத்தறிவு தலையங்கம் - 23.12.1934

Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.