கல்வி முறையில் மாற்றம் தேவை. விடுதலை - 12.11.1954

Rate this item
(0 votes)

நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்தியோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஆகையால், அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கூறுகின்ற ஒவ்வொன்றையும் அப்படியே மனப்பாடம் செய்து, அதையே பிறகு அவர்கள் கேட்கும்பொழுது சொல்லுவதாலும், எழுதுவதாலும் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையில் ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும், உலகியலில் தகுந்த ஞானமும் அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான். ஆசிரியர் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்; புத்தகத்திலுள்ளதைத்தான் மனப்பாடம் செய்து திரும்பவும் ஒப்புவிக்க வேண்டும் என்பது, நம் நாட்டுக் கல்வி முறை. இக்கல்வி முறையினால் மாணவர்களுக்கு அறிவு புகட்டப்படுவதால் அவர்கள் பிற்காலப் பழக்க வழக்கங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தகுதியுடையவர்களாக ஆகமாட்டார்கள்.

ஆனால், பலர் பலவிதமாக அறிவு, ஞானம் என்பதைக் கருதுகிறார்கள். பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான். பொதுவாகவே மாணவன் அதற்கு இடம் கொடுக்காமல் தன்னை இன்னான் என்றுணர்ந்து "நம் பருவம் எதையும் அறிந்து கொள்ளுகின்றதும், தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறதுமான மாணவப் பருவம்' என்பதை உணர வேண்டும். இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான் பிற்காலத்தில் எதையும் அறிந்த அறிவாளியாக விளங்க முடியும்.

மேல்நாட்டு மாணவர்கள் எல்லோரும் இவ்வித எண்ணம் கொண்டவர்களாக இருப்பதாலும், அவர்களுக்கு இந்தப்படியே பயிற்சி அளிப்பதாலும்தான் அவர்கள் எதையும் ஆராயும் தன்மையுள்ளவர்களாகவும், மென்மேலும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு இது ஏன்? எப்படி? எதற்காக? இதனால் என்ன செய்ய முடியும்? என்று இப்படிப் பலவிதமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொண்டே பார்த்ததால் இன்றைக்கு அவர்கள் அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குகிறார்கள். மற்றும் பல பொது விஷயங்களிலும் நம் நாட்டு மக்களைப் போல் இல்லாது, எவ்விடத்திலும் பிறருடன் நன்முறையில் பழகுகிறார்கள். ஆனால், நம் நாட்டு மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள் ஒன்றும் இல்லாததாலும், நம் நாட்டுக் கல்வி முறையில் இவை கற்பிக்கப்படாததாலும் அவர்கள் வயது வந்தவர்களானதும் பொது இடங்களிலும், உலகத்தோடும் நன்முறையில் பழகுவது கிடையாது. புகைவண்டி நிலையம் சென்றால், எவன் ஒருவன் முதலில் டிக்கட் வாங்குகிறானோ, அவன்தான் சமர்த்தன் என்று புகழப்படுகிறான். புதிய சினிமா இன்றுதான் முதலில் வெளியிடப்படுகிறது என்றால் அன்றைக்கு படத்திற்கு முதல் டிக்கட் வாங்குகிறவன் அதிபராக்கிரம புத்திசாலி என்று போற்றப்படுகிறான். ஏதாவது ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்களைக் கூறித் தப்பித்துக் கொண்டால் அவன் அறிவிற் சிறந்தவன்; அவன் கூறியது பொய்யானாலும் தன் புத்தியின் யூகத்தால், வெகு சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டான் என்றுதான் கூறுவர்.

நன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன செய்யவேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்டாக்கும்படியான வழியில் நடந்து கொள்வதாகும். உங்களிடம் ஒருவர் நடந்து கொள்வதிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தையும், மனக்கலக்கத்தையும் அதிருப்தியையும் உண்டாக்குகிற முறைகள் எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிட வேண்டும். இது ஒரு சுலபமான கருத்து. இதை யாவரும் கைக்கொள்ளுவதால் நல்லறிவும், பொது அறிவும் அடைந்தவர்களாகலாம்.

7.11.1954 அன்று திருச்சியில் ஆற்றிய சொற்பொழிவு.

விடுதலை - 12.11.1954

Read 36 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.