திருமணங்களை சட்ட விரோதமாக்க வேண்டும். விடுதலை - 28.6.1973

Rate this item
(0 votes)

மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக, பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிப்போடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.

பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?

"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and Wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

விடுதலை - 28.6.1973

Read 54 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.