பாபச் செயல் என்று சொன்னாலும் பகுத்தறிவாளர்கள் பயப்படக்கூடாது. விடுதலை - 05.03.1950

Rate this item
(0 votes)

மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடையைப் பற்றிய கொள்கைகளைக் கொண்டது என்பவர்களிடத்தில் நமக்குச் சண்டையில்லை.

அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பைக் கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் 'சைவம்' என்பதனால் நாமும் சைவன் என்று சொல்லிக் கொள்ளவும் ஆசைப்படுகின்றோம். அதுபோலவே "ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள் தான் விஷ்ணு, அக்குணங்களைக் கைக்கொண்டு ஒழுகுவதுதான் வைணவம்" என்பதான விஷ்ணுவிடத்திலும், வைணவனிடத்திலும் நமக்குத் தகராறில்லை என்று சொல்லுவதோடு நாமும் நம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம். நமக்கும் மற்றும் உள்ள மக்களுக்கும் "சைவத் தன்மை"யும் "வைணவ தன்மை"யும் ஏற்பட வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.

அப்படிக்கில்லாமல் இன்ன மாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகிறவன் தான் சைவனென்றும் இப்படி வணங்ககிறவன் இன்னமாதிரியான உடை பாவனை கொண்டவனாகவும் இன்னமாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள இன்ன காரியம் செய்த கடவுள்களைப் பற்றி பாடின, எழுதின ஆசாமிகளையும், புஸ்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும் தான் சைவம் என்றும், மற்றபடி வேறு என்ன உருவமோ, பேரோ உள்ள கடவுள் என்பதை வணங்குகிறவர்களையும் வேறு குறி இடுகின்றவர்களையும் சைவரல்லாதவர் என்று சொல்லுவதுமான கொள்கைக்காரரிடமே நமக்குப் பெரிதும் தகராறு இருக்கிறது என்று சொல்வதுடன் அக்கொள்கைகளையும் அச்சமயங்களையும் அக்கடவுள்களையும் பாமர மக்களிடம் பரவ விடக்கூடாது என்றே சொல்லுகின்றோம்.

அன்றியும் பல சமயப் புரட்டர்கள் இம்மாதிரி விவகாரம் வரும்போது "நான் கடவுள் என்பதாக ஒரு தனி வஸ்தவோ ஒரு குணமோ இருப்பதாகச் சொல்லவில்லை என்றும், மலைதான் கடவுள், ஆறுதான் கடவுள், சமூத்திரம் தான் கடவுள், மரம் செடிதான் கடவுள், புஷ்பம் தான் கடவுள், அதன் மணம் தான் கடவுள், அழகுதான் கடவுள், பெண்தான் கடவுள், அதன் இன்பம் தான் கடவுள், இயற்கைதான் கடவுள், அத்தோற்றம் தான் கடவுள்" என்பதாக நமக்கே புரியாமல் உளறுவதும், மறுபடியும் "சிவன்தான் முழு முதற் கடவுள், மற்றபடி விஷ்ணுவும், பிரம்மாவும், அவரது பரிவார தேவதைகள், சைவ சம்யம் தான் உண்மைச் சமயம், அதுதான் முக்தி அளிக்க வல்லது" என்பதும், அல்லது "விஷ்ணுவின் பரிவார தேவதைகள்" என்பதும், "வைஷ்ணவ சமயம் தான் உண்மைச் சமயம், அதில்தான் பரத்திற்கு மார்க்கம் உண்டு" என்பதும், அச்சிவனையோ விஷ்ணுவையோ முழுமுதற் கடவுளாகக் கொண்டு அக்கடவுள்களையும் அச்சமயங்களையும் பாடினவர்கள் தம் கடவுள் நெறிகளையும் நிலைமைகளையும் உணர்த்தி பெரியோர்கள் சமயச்சாரியார்கள்" என்பதுமாக மக்கள் முன் உளறிக்கொட்டி அவர்களது மனதைக் குழப்பச் சேற்றில் அழுத்துகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது புரட்டையும் பித்தலாட்டங்களையும் வெளியாக்கி மக்களைக் குழப்பச் சேற்றிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றுதான் சொல்லுகின்றோம்.

உலகத்தில் கடவுள் என்பது இன்னது என்பதாக மனதில் விவரப்படுத்திக் கொள்ளாமலே கடவுளைப் பற்றிய தர்க்கங்களும் தகராறுகளும் தினமும் நடைபெற்று வருகின்றன. இது இன்று நேற்று ஏற்பட்ட விவகாரம் அல்ல என்று கூடச் சொல்லுவோம்.

எனவே மக்களின் பாரம்பரியமானதும் பரவியிருக்கும் படியானதுமான மடமைக்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில் இந்த விவகாரம் பாமர மக்களிடையில் மாத்திரம் நடைபெற்று வருகின்றது என்று சொல்லுவதற்கில்லை. இது பெரும்பாலும் படித்தவன், ஆராய்ச்சிக்காரன், பண்டிதன், பக்திமான் என்கின்ற கூட்டத்தாரிடையே தான் பெரிதும் (இவ்வறியாமை) இடம்பெற்று உரம் பெற்றிருக்கின்றது. இவைகள் ஒழியச் செய்யும் காரியத்தை நாஸ்திகமென்றும், பாபச்செயல் என்றும் யார் சொன்னாலும் பகுத்தறிவாளர்கள் பயப்படக்கூடாது.


பெரியார் மொழி" என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.

விடுதலை - 05.03.1950

Read 28 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.