விரதப்புரட்டு. குடி அரசு - கட்டுரை - 06.04.1930

Rate this item
(0 votes)

உமாமகேஸ்வர பூஜை விரதம் “நைமிசாரண்ய வாசிகளைக்கு சூத புராணிகர் சொன்னது”

ஆனந்த தேசத்தில் வேத விரதன் என்னும் பிராமணனுக்கு சாரதை என்று ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரில் மனைவியை இழந்த பத்மநாபன் என்னும் கிழப் பார்ப்பான் அந்தப் பெண்ணின் தகப்பனுக்கு நிறைய பணம் கொடுத்து தனக்கு அந்த பெண்ணை இரண்டாவது பெண்ஜாதியாக விவாகம் செய்து கொண்டான்.

percuஅந்த கிழப் பார்ப்பான் மணக் கோலம் முடியும் முன்பே விஷம் தீண்டி இறந்து போனான். பிறகு அந்த பெண் தகப்பன் வீட்டிலேயே இருந்தாள். சில நாள் பொருத்து ஒரு முனிவர் சாரதையின் வீட்டிற்கு வந்தார்.

சாரதை அவருக்கு மரியாதை செய்தாள். உடனே அந்த முனிவர் சாரதையை “நீ புருடனுடன் இன்பமாய் வாழ்ந்து நல்ல பிள்ளைகளை பெறக் கடவாய்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

அதற்கு சாரதை “பூர்வ ஜன்ம கருமத்தின் பலனாய் நான் விதவையாகி விட்டதால், தங்களின் ஆசீர்வாதம் பலியாமல் வீணாய் போய் விட்டதே” என்றாள். அதற்கு அந்த ரிஷி “நான் கண் தெரியாத குருடனானதால் அறியாமல் அந்தப்படி ஆசீர்வாதம் செய்ய நேரிட்டு விட்டது.

ஆனாலும் அது பலிக்கும் படி செய்கிறேன் பார்” என்று சொன்னார். “என் புருஷன் இறந்து வெகு நாளாய் விட்டதே. இனி அது எப்படி பலிக்கும்”? என்று சாரதா கேள்க்க அதற்கு அவர் “நீ உமாமகேஸ்வர விரதம் அனுஷ்டித்து வந்தால் கண்டிப்பாய் நீ உத்தேசித்த காரியம் கை கூடு மென்று”கூறினார்.

“அவ்விரதம் அனுஷ்டிப்பதெப்படி?” என்று சாரதா கேட்டாள். அதற்கு முனி சொல்லுவதாவது:-

“சித்திரை அல்லது மார்கழி மாதத்தில் ஒரு பிராமணனை அவன் மனைவியுடன் நல்ல பீடத்தில் உட்கார வைத்து அவர்களைப் பார்வதி பரமசிவனாகப் பாவித்து மலர்களால் அர்ச்சித்து தினமும் அன்ன ஆகார மிட்டு வருஷக் கணக்காய் பூசை செய்து பார்வதி பரமசிவ உருவத்தை மனதில் நினைத்து அதற்கு விரத அபிஷேகம் செய்து ஆராதித்து பஞ்சாக்ஷரத்தை தியானித்துக் கொண்டிருந்தால் நினைத்த காரியமெல்லாம் கைகூடும்” என்றார்.

அது கேட்ட சாரதை யானவள் அந்தப் படியே அதுமுதல் தனக்கு முனிவரின் ஆசீர்வாதம் பலிக்க வேண்டுமென்று கருத்தில் கொண்டு முனிவர் சொன்னபடி உமாமகேஸ்வர விரதத்தை கிரமமாய் அனுஷ்டித்து வந்தாள். உடனே பார்வதி தேவி சாரதைக்கு பிரத்தியட்சமாகி. “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டாள்.

சாரதை, “எனக்கு புருஷன் வேண்டும்” என்றாள். பார்வதி “அப்ப டியே உன்னை ஒரு புருஷன் தினமும் வந்து சொற்பனத்தில் புணருவான். அதனால் நல்ல ஒரு குழந்தை பிறக்கும்” என்று வரம் கொடுத்தாள். அது முதல் சாரதையின் சொற்பனத்தில் தினமும் ஒரு புருஷன் வந்து புணர்ந்து கொண்டே இருந்தான். அதனால் சாரதைக்கு கர்ப்பமும் உண்டாயிற்று.

அதைக் கண்ட அவ்வூரார் எல்லோரும் சாரதை சோரம் போய் கர்ப்பம் ஆய் விட்டாள் என்று பழித்தார்கள். இதைக் கண்டு சாரதை துக்கப்பட்டாள். பிறகு பழித்தவர்கள் வாய் அழுகி அதில் புளுவுதிறும்படி பார்வதி செய்து விட்டாள். 10 பொருத்து சாரதை ஒரு புத்திரனைப் பெற்றாள்.

அதற்கு சாரதேயன் என்று பெயர் சூட்டி மகா மகிமை பொருந்திய சிவராத்திரியன்று தாயும் பிள்ளையும் கோகர்ணத்திற்கு யாத்திரை சென்றார்கள். செல்லும் வழியில் சொர்ப்பனத்தில் வந்த புருஷன் நேரில் வந்து சாரதையுடன் கலந்து கொண்டான்.

பிறகு கொஞ்ச காலம் சாரதையும் புருஷனும் சந்தோஷமாய் வாழ்ந்து இன்பமனுவித்து புருஷன் இறந்து போனான். புருஷன் இறந்ததும் உடனே சாரதை உடன் கட்டையேறி இருவரும் சிவபத மடைந்தார்கள் என்று நைமி சாரண்யவாசிகளுக்கு சூதக முனிவர் வியாசரிடம் கேட்டுத் தெரிந்ததை சொல்லுகிறேன் என்று சொன்னார்.

இந்த சரிதை பிரமோத்திர புராணத்தில் உமாமகேஸ்வர விரத மகிமை யும் விரதத்தின் பலனும் என்கின்ற தலைப்பில் சொல்லப் பட்டிருக்கிறது. இதை கவனிப்போம்.

இந்த கதையின் ஆபாசம் எவ்வளவு மோசாமாயிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள். ஒரு சிறு பெண்ணை ஒரு கிழவன் அந்தக் காலத்திலும் கட்டிக் கொள்ளுகின்ற வழக்கமும், தகப்பன் பணம் வாங்கிக் கொண்டு சாகப் போகும் கிழவனுக்கு தனது சிறு பெண்ணை கட்டிக் கொடுக்கும் வழக்கமும், பார்ப்பனர்களுக்குள் இருந்ததாக வைத்துக் கொண்டாலும் புருஷன் இறந்தவுடன் உடன்கட்டையேராமல் பெண்ஜாதியான (சாரதை) சிறு பெண் இருந்திருக்க முடியுமா? என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஒரு சமயம் உடன்கட்டையேராமல் இருந்திருந்தாலும், ஒரு ரிஷிக்கு இந்தப்பெண் விதவை என்ற சங்கதி தெரியாமல் போகுமா? ரிஷிக்கு ஒரு சமயம் அந்தப்படி தெரியாமல் போயிருந்தாலும் ஒரு குருட்டு ரிஷி தெரியாமல் சொல்லிவிட்ட காரியம் ஒரு விரதம் அனுஷ்டிப்பதால் கைகூடிவிடுமா?

அந்தப்படி கூடுமானாலும் பார்ப்பனனையும் அவன் பெண் ஜாதியையும் பார்வதி பரமசிவன் போல் எண்ணி பூசை செய்தால் பார்வதி வந்து விடுவாளா? அப்படி வருவதாயிருந்தாலும் பார்வதி நேரில் புருஷனை கொடுக்காமல் தூக்கத்தின் போது கனவில் வந்து வந்து புணர்ந்து விட்டு போகும்படி கட்டளையிடுவாளா? அப்படி கட்டளையிடுவதானாலும் கனவில் புணர்ந்ததற்கு கனவில் கற்பமுண்டு பண்ணாமல் விழித்த பிறகுங்கூட அந்தகற்பம் இருக்கும்படி செய்வாளா?

அப்படித்தான் செய்தாலும் அதன் காரணத்தை பொது ஜனங்களுக்கு தெரியப்படுத்தாமல் இரகசியமாய் இருக்கச் செய்து இந்த இரகசியம் தெரியாத பொது ஜனங்கள் சாரதையின் கர்ப்பத்தைப் பற்றி சந்தேகப்பட்டால் அதற்கு பார்வதி திருப்தி அடையும்படி சமாதானம் சொல்லாமல் சந்தேகப்பட்டவர்கள் வாய் அழுகிப்புளுவு தள்ளும்படி செய்வது யோக்கியமாகுமா?

அன்றியும் கோகர்ணத்திற்கு போகும் வழியில் அந்த சொர்பனப் புருஷனை வரும்படி செய்த பார்வதியும் பரமசிவனும் பொது ஜனங்கள் சந்தேகப்படும் போது வரும்படி செய்திருக்கப்படாதா? அன்றியும் அந்தப் புருஷனும் சாவானேன்? அப்படியே காலம் வந்து செத்து இருந்தாலும் முன்னைய கிழப்புருஷனுக்கு உடன் கட்டை ஏராத குமரி சாரதை இந்தப் புருஷனுக்கு ஏன் கிழவி ஆன பின் உடன் கட்டை ஏறினாள்?

வாசகர்களே! வேதப்புரட்டு, இதிகாசப் புரட்டு, புராணப் புரட்டு என்பது போல் இந்த விரதப் புரட்டும் எவ்வளவு முட்டாள் தனமானதும் அயோக்கியத் தனமானதும் சுய நல சூக்ஷி கொண்டதுமாய் இருக்கின்றது என்பதை நன்றாய் கவனித்துப் பாருங்கள்.

விரதம் என்றால் ஒரு பார்ப்பனனையும் பார்ப்பனத்தியையும் பார்வதி பரமசிவன் போல் பாவித்து, அபிஷேகம் பூசை ஆராதனை செய்தால் விதவைகளுக்கு புருஷன் சுவர்ப்பனத்தில் வருவான் என்பது எவ்வளவு அயோக்கியத்தனமான கதை?

இப்படித்தானே இப்போதுள்ள விதவைகள் புருஷ ஆசைக்கு விரத மிருந்து “சொர்ப்பனத்தில்” புருஷருடன் புணர்ந்து கொண்டிருப்பார்கள்.

சாரதையைப்போல் அநேக விதவைகள் இப்போதும் கற்பமானாலும் பழி சொல்லுகின்றவர்கள் வாயில் பார்வதி புழுக்கள் தள்ளச் செய்யாததால்தான் அந்த விரதமிருக்கும் விதவைகளெல்லாம் கர்ப்பங்களை தாங்களாகவே அழித்து விடுகின்றார்கள் போலும்.

பார்ப்பன சூக்ஷி எவ்வளவு மோசமானது என்பதை இதிலிருந்தாவது விரதமிருக்கும் வைதீகர்களும் விரதமிருக்கும் பெண்களும் புருஷர்களும் அறிந்து கொள்ளுங்கள்.

குடி அரசு - கட்டுரை - 06.04.1930

Read 25 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.