இலங்கை உபன்யாசம். குடி அரசு - 20.11.1938

Rate this item
(0 votes)

தோழர்களே!

கடவுள், மதம், ஜாதியம், தேசீயம், தேசாபிமா னம் என்பவைகள் எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியி லுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்பட வேண்டிய அவசியமும், கார ணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தை யும், அன்னியர் உழைப்பாலேயே வாழ வேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க் கைப் பிரியமுமேயாகும். பப்பாஆதியில், மனிதர்கள் காடுகளில் தனிமை யாய் - சுயேச்சையாய்த் திரிந்த - இயற்கை வாழ்க்கையிலிருந்து சமூகக் கூட்டு வாழ்க்கைக்கு வரும்போது அவனவன் தன் தனக்கு வேண்டிய சகல காரியங்களையும் தானே செய்து கொண்டும், ஒரே சமூகமாய் சமத்துவமாய் வாழலாம் என்று எண்ணியே ஒழிய, மற்றபடி மற்றொருவனை அடிமைப்படுத்தி அவனிடம் தனக்கு வேண்டிய எல்லா வேலை யையும் வாங்கிக் கொண்டு ஏய்த்து, அவனை உலக சுகபோகங் களில் பட்டினிபோட்டு, தான் மாத்திரம் சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு, எல்லா சுகபோகங்களையும் தானே அனுபவித்துக் கொண்டு, இருப்பதற்கோ, அல்லது மற்றவ னுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து, அவ்வு ழைப்பின் பெரும்பயனை மற்றவன் அனுபவிக்க விட்டு விட்டு, தான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப்புக் கொள்ளத்தக்க விஷயமாகும்.

ஆனால், நாள் ஏற ஏற, மக்களுக்குள் சிலருக்கு பேராசையும், . பொறாமையும், சோம்பேறித்தனமும் வலுக்க வலுக்க அவற்றி லிருந்து செல்வவானும், அரசனுக்கு குருவும் ஏற்பட்டு, பிறகு அவற்றை நிலைநிறுத்த ஆத்மா, கடவுள், வேதம், ரிஷிகள், மகாத்மாக்கள் ஆகியவைகளைக் கற்பித்து, பிறகு அவைகள் மூலம் கடவுள் செயல், முன்ஜென்மம், பின் ஜென்மம், கர்மம், பாவம் புண்ணியம், மேல் உலகம் , கீழ் உலகம், தீர்ப்பு நாள், மோட்சம், நரகம் ஆகியவைகளும் கற்பிக்க வேண்டியதாய்விட் டது. இந்தக் கற்பனைகளின் பயன்தான் பெரும்பான்மையான கவும், மற்றவர்களுக்கு அடிமையாகி உழைக்கவும், உழைத்தும் சரியான கூலி கிடைக்காமல் பட்டினி கிடந்து உழல்வதை பொறுமையுடன் பொறுத்துக் கொள்ளவுமான காரியங்கள் நடந்து வருவதுடன், அவை எங்கும், என்றும் நிலைத்தும் நிற்கின்றன. எப்படியாயினும், இந்த நிலை அடியோடு அழிபட வேண்டும். அதற்காக அதன் காப்புகளான மேற்குறிப்பிட்ட கடவுள், மதம், தேசீயம், ஜாதியம் என்பவைகளும், அவற்றின் பேறு களான ஆத்மா, முன்ஜென்மம், கர்மம், தீர்ப்பு, மோட்ச நரகம் பாவ புண்ணியம் ஆகியவைகளாகிய போலி உணர்ச்சிகளும் அவற்றின் ஸ்தாபனங்களும் உடைத்தெறி யப்பட வேண்டும்.
கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும், 'யோக்கியமாய்', 'நாணயமாய்' நடந் தும் இழிவாய்', 'கீழ்மக்களாய்' கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலைமைக்கு மற்றவர்களால் தாங்கள் ஏமாற்றப் படுவதுதான் காரணம் என்பதை உணராமல், தங்களுடைய முன்ஜென்ம கர்மபலன் - தலைவிதி - கடவுள் செயல் என்பதாகக் கருதிக் கொண்டு, சிறிதும் முன்னேறுவதும் முயற்சி செய்யாமலும், சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்ப தோடு, தங்கள் நிலைமையைப்பற்றி சிறிதும் அதிருப்திகூட அடையக்கூடாதென்று கருதி தங்கள் நிலையைப்பற்றி தாங் களே சமாதானமும் சாந்தமும் அடைந்து கொள்ளுகிறார்கள்; வெளியில் சொல்லிக் கொள்ளக்கூட வெட்கப்படுகிறார்கள். ஏனெனில், கஷ்டப்படுகின்ற மக்களுக்கு கடவுள் உணர்ச்சியும் மதமும் இதைத்தான் போதிக்கின்றது. எப்படி என்றால்:

"ஓ கஷ்டப்படுகின்ற மனிதனே! கஷ்டப்பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே!! நீ உனது முன்ஜென்ம பாபகர்ம பலத்தினால் - தலைவிதியால் - கடவுள் சித்தத்தால் இம்மாதிரி துன்பத்தை அனுபவிக்கின்றாய். இந்த ஜென்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையைப் பொறுமையுடன் ஏற்று சமாதானமும், சாந்தமும் அடைந்து இருப்பாயாகில், அடுத்த ஜன்மத்தில் சுகப்படுவாய் - மேலான பிறவி பெறுவாய் - அல்லது மேல் உலகில் மோட்சம் என்னும் மேன்மையை அடைவாய் - கடவுள் சன்மானம் அருளுவார்''

என்கின்ற உபதேசமுமேயாகும். இந்தப் பொறுமை உபதேச மும் சாந்த உபதேசமும் சமாதான உபதேசமும், சமாதான உபதேசமும், மக்களைக் கோழைகளாகவும், முற்போக்கற்றவர் களாகவும் செய்து அவர்களது கஷ்டத்திலிருந்தும் இழிவிலிருந் தும் முன்னேற முடியாமலும் விடுபட முடியாமலும் சுயமரி யாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து உயிர் வாழும்படி செய்து வந்திருக்கிறது.

இவ்வாறு மாத்திரம்தானா? இந்தக் கடவுள் உணர்ச்சியும், மதமும் செல்வந்தர்களுக்கும், மிராசுதாரர்களுக்கும், மற்றும் உத்தியோகம், வியாபாரம், லேவாதேவி என்னும் பேர்க ளால் ஏழைகளிடமிருந்து பெரும்பணம் கொள்ளை கொண்டு மற்றவர்களைப் பட்டி னிபோட்டுப் பெரும் பணம் சேர்க்கும் பணக்காரர்களுக்கும் போதிப்பது என்ன என்பதைப் பார்த் தாலோ, அது, படிப்பட்ட "ஓ பிரபுக்களே! செல்வவான்களே!! ஏராளமாக மேலும் மேலும் பணம் சேர்க்கும் பணக்காரர்களே!! லட்சுமி புத்திரர் களே!! நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த புண்ணிய கர்மங்களால் - கடவுள் உங்கள்மீது வைத்த கருணையினால் இவ்வுயர் நிலையை அடைந்திருக்கிறீர்கள். இவ்வேராளமான பண வரு வாய்கள், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இச்சுகபோகம் உங்க ளுக்குக் கிடைத்ததற்கும் காரணம் கடவுள் சித்தமேயாகும். ஆதலால், நீங்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதன் மூலமும், கடவுளுக்கு கோயில் கட்டுவதன் மூலமும், கடவுள் பக்தர்களான பாதிரி, குரு, பிராமணர் முதலியவர்களுக்கு மரியாதை செய்து சத்திரம், மடம் முதலிய உதவி அளிப்பதன் மூலமும் நன்றி செலுத்தி இந்நிலையை நிலைநிறுத்திக் கொள்ளுவதுடன், மோட்ச லோகத் திலும் சுலபமாக இடம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.''

என்பதேயாகும். ஆகவே தோழர்களே! இந்தக் காரணங்களா லேயே மக்களில் உயர்வு - தாழ்வும், எஜமான் - அடிமையும், முதலாளி - தொழிலாளியும், அரசன் - குடிகளும், குரு - சிஷ்யனும் ஏற்பட்டிருக்கின்ற என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

உலகிற்கு அரசன் அரசாட்சி என்பதாக ஒரு வகை இருந்து வருவதின் காரணமெல்லாம்கூட செல்வவான்களின் செல்வங்க ளைக் காப்பாற்றவும், சோம்பேறி வாழ்க்கைகளையும் அவர்க ளது தத்துவங்களையும் பிறர் இகழாமல் இருக்கவுமே ஒழிய, மற்றபடி மக்கள் சமூகம் துன்பப்படாமலோ, மற்றவர்களால் கொடுமைப்படுத்தப்படாமலோ, சகல துறைகளிலும் உயர்வு - தாழ்வு கொடுமை இல்லாமலோ இருப்பதற்காக அல்லவே அல்ல என்பதை நீங்கள் உறுதியாய் நம்புங்கள்.

 இதுபோலவேதான் முன் குறிப்பிட்ட ஏழைகள் தாங்கள் படும் கஷ்டங்களுக்குக் காரணம் முதலாளிகளின் சூழ்ச்சியும், சோம் பேறிகளின் தத்துவங்களும் என்பதை உண ராமல் இருப்பதற்காகவே ஒழிய வேறில்லை.

உதாரணம் வேண்டுமானால், இன்றைய தினம் கஷ்டப்படுவ தாகவும், இழிவுபடுத்தப்பட்டதாகவும், பட்டினி கிடந்து துன்பப் படுவதாகவும், ஏழைகளாகவும் காணப்படும் மக்களில் அநே கரை அணுகி அவர்களது இவ்வித கஷ்ட நிலைக்குக் காரணம் என்ன என்று கேட்டுப் பாருங்கள். உடனே அவர்கள் சற்றும் தயக்கமின்றி தங்களின் கஷ்டநிலைக்குக் காரணம் தங்கள் ''தலைவிதி" என்றும், 'முன்ஜென்ம கர்மபலன்" என்றும், "கடவுள் சித்தம்” என்றும், 'ஆண்டவன் கட்டளை'' என்றும் தான் பதில் சொல்லுவார்களேயொழிய, பிற மனிதர்களால் அரசாங்க சட்டத்தால் - செல்வவான்களின் சூழ்ச்சியால் சோம் பேறிகளின் தந்திரத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு அவதிப்படுவதாக ஒரு நாளும் சொல்ல மாட்டார்கள். ஆதலால் தான், ஏழைகளின் கஷ்டங்களை விலக்க வேண்டுமென்பவர்கள் முதலில் அதற்கு அஸ்திவாரமான காரண காரியங்களைக் கண்டுபிடித்து அழித்தெறிய வேண்டுமென்று சொல்ல வேண்டி இருக்கின்றது.

கடவுள் என்பது அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்தபோதிலும் அது மனித சமூகத்தில் 100-க்கு 99 மக்களைப் பிடித்து தன் வயப்படுத்தி மடமையாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகியிருந்தபோதிலும்கூட, கடவுள் என்பது இன்னது என்று குறிப்பாக குளறுபடி இல்லாமல் தெளிவுபட உணர்த்தியவர்களோ, உணர்ந்தவர் களோ இதுவரையில் காணக்கிடைக்கவில்லை. பொதுவாக, அந்தப்படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி அவர்களைப் பயப்படுத்தி வைக்க வேண்டும் என்கின்ற அவசியத்தினால் அதற்கு என்று வேறு ஒரு (மானச) உலகத்தை யும், பாவ புண்ணிய பயனையும், மோட்ச நரகத்தையும் கற்பித்து, அதைப் பரப்ப பலவித ஸ்தாபனங்களை உண்டாக்கி, அதன் பிரச்சாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்து, அக்கூட் டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீர வேண் டியதான நிலைமையையும் ஏற்படுத்தி விட் டதால் வெகு சுலபமாகவும் செல்வாக்காக வும் அதன் பிரச்சாரம் நடக்கவும், மக்களை தன்வயப்படுத்தவுமான காரியங்கள் நடந்து கொண்டே வருகின்றன. கடவுள் என்றால்என்ன? என்றாலும் கடவுள் என்றால் என்ன? என்பதை உணர்வதற்கில்லாமலும், உணர வேண்டும் என்று நினைப்பதற் கில்லாமலும் இருந்து வருகிறது.

யாராவது கடவுளைப்பற்றி நெருக்கிப் பிடித்துக் கேட்டால், அது முழுவதும் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களையும், செய்கைகளையும் கொண்டிருப்பதும், ஆளுக்கு ஒருவித வியாக்கியானம் கூறுவதுமாய் இருப்பதோடல்லாமல், வேறுவி தமாய் குறிப்பாக பதில் கிடைப்பது என்பது அரிதாகவே இருக்கிறது.

கடவுள் என்பது சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ சக்தியும் கொண்ட ஒரு ஒப்பற்ற தனிப் பொருளென்று சொல்லப்பட்டு விடும், உடனேயே அது கண்ணுக்குத் தெரியா தது என்றும், மனத்திற்குத் தோன்றாதது என்றும் சொல்லப்படு வதோட்டாமல், அதற்கு உருவம் இல்லையென்றும், குணம் இல்லையென்றும், இன்ன தன்மையது என்று விளக்க முடியா தது என்றும் சொல்லப்பட்டு விடுகின்றது. 

இவற்றுள் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், இப்படிப் பட்ட ஒரு கடவுள் தன்மையை அதாவது "சர்வ சக்தியும் சர்வ வியாபகமும் உடையதும், கண்ணுக்கும் மனதிற்கும் தென்படாததும், குணமும் உருவமும் இன்ன தன்மையென்று குறிப்பிடக்கூடிய தன்மையும் இல்லாதது”மான ஒரு கடவுளை நிலை நிறுத்தவும், அதைப்பற்றி மக்கள் நம்பிக்கை கொள்ளவும் "கடவுளால் உண்டாக்கப்பட்ட" மக்களிலேயே பலர் வக்கா லத்து பெற்று கடவுளை நிரூபிக்க ஒழுங்கற்ற முறையிலும் ஒழுக்கயீனமான முறையிலும் எவ்வளவோ பாடுபட வேண்டி யிருப்பதுமேயாகும்.

மற்றும், அப்படிப்பட்ட வக்காலத்துக்காரர் தங்கள் சொந்த நிலையில் தங்களால் செய்யப்படும் ஒவ்வொரு காரியத்தையும் தாங்களே செய்வதாகவும், தங்களால் சொல் லப்படும் ஒவ்வொரு விஷயமும் தாங்களே அறிந்து சொல்வதாகவும் நினைத்தே பேசி யும் நடந்தும் வருகிறார்கள். அது மாத்திரமல் லாமல், மற்றவர்களால் செய்யப்படும் சொல் லப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் மற்ற வர்கள் தங்களுக்குச் செய்வதாகவும், சொல் லுவதாகவும், எழுதுவதாகவும் கருதுவது டன், மற்றவர்கள் மீது துவேஷமும் வெறுப்பும் விருப்பும் கொண்டு அவர்களை இன்ன இன்னபடி நடவுங்கள் என்றும், தங்களுக்கு இன்ன இன்ன காரியங்களைச் செய்து கொடுங்கள் என்றும் கோருகிறார்களேயல்லாமல், "இவை எல்லாம் சர்வ வல்லமையுள்ள கடவுள்" செயலால் சர்வ வல்லமையுள்ள கடவுள்'' செயலால்தான் நடக்கின்றது - நடந்து விடும் என்ற நம்பிக்கையும் உறுதியும் தைரியமும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

மற்றொரு சாரார், ''கடவுளைப் பார்க்காவிட்டாலும், உணரா விட்டாலும், உலகப் படைப்புக்கும் நடப்புக்கும் ஏதாவது ஒரு கர்த்தாவோ, காரணமோ இருக்க வேண்டாமா? அப்படிப்பட்ட கர்த்தாவோ காரணமோதான் கடவுள்'' என்று சொல்லுகிறார்கள்.

மற்றொரு சாரார், "உலகத் தோற்றத்திற்கும் நடப்புக்கும் ஏதாவது ஒரு சக்தியாவது இருக்குமல்லவா! அதுதான் கடவுள்" என்கிறார்கள். மற்றொரு சாரார், "இயற்கையே - அழகே, அன்பே - சத்தியமே கடவுள்' என்றும், இன்னும் பலவாறாக சொல்லுகிறார்கள். ஆனால், நமது நாட்டைப் பொறுத்த மக்கள் கடவுளுக்கு மனித உருவம் கற்பித்து, சாதாரண மனித வாழ்க்கையிலுள்ள பெண்டு பிள்ளை முதலியவைகளைக் கற்பித்து, செல்வ அதற்குக் கோயில், பூசை, உற்சவம், கலியாணம், சாந்திமுகூர்த் தம் முதலியவைகளைக் கற்பித்து, வணக்கத்திற்காக என்று கோடானு கோடி ரூபாய்களை செலவு செய்யச் செய்து மக்களை அதுவும் ஏழை மக்களை வாட்டி வளைவெடுத்து தொல்லைப்படுத்தியும் வருகிறார்கள். இப்படியாக கடவுளைப் பற்றி இன்னும் பல விதமாய் அபிப்பிராயங்கள் சொல்லப்பட் டும் காரியத்திலும் பல செய்யப்பட்டும் வருகின்றன. இந்தவிதமான கடவுளைப்பற்றி அர்த்தமற்ற - குறிப் பற்ற - பரிகாசத்திற்கும் முட்டாள்தனத்திற் கும் இடமான அபிப்பிராயங்களும், மற்றும் பாமர மக்களை தந்திரக்காரர்கள் ஏமாற்றுவ தற்கான முறைகள் கொண்ட கருத்துகளும் விவகாரங்களும் இன்றோ நேற்றோ அல்லா மல் வெகு காலமாகவே இருந்து வருகின்றன. அன்றியும், இக்கருத்துக்கள் மதக் கொள்கைகள் என்பவற்றின் மூலமாகவும் அரசாங்க சட்டங்களின் மூலமாகவும் மறுத்துப் பேச இடங் கொடுக்கப்படாமலும், மீறிப் பேசினால் தண்டித்தும், மதவெறி யால் என்றும் கொடுக்கப்படுத்தியும்தான் காப்பாற்றப்பட்டும் நிலை நிறுத்தப்பட்டும் வந்திருக்கின்றது. 

இன்றும்கூட நமது இயக்கப் பிரச்சாரங்களில் அவற்றின் கொள்கைகளைப் பற்றி ஆட்சேபிக்கக்கூடிய வகை சுலபத்தில் இல்லாமல் இருப்பதால் வேறு வழியில் தந்திரமாய் அதாவது 'சு-ம. இயக்கக் கொள்கைள் எல்லாம் சரி. அது ஏழை மக்களுக்குத்தான் பாடுபடுகின்றது. ஏழை - பணக்காரன் என் கின்ற வித்தியாசம் கூடாதென்கின்றது. ஆனால், அது கடவுள் இல்லை என்று சொல்லுகின்றது. மதத்தை அழிக்கின்றது. மக்களை நாஸ்திகராக்குகின்றது. அதுதான் எமக்குப் பிடிக்க வில்லை . ஆதலால், அதை வளரவிடக் கூடாது" என்று சொல்லுவதன் மூலம் நமக்கு எதிர்ப் பிரச்சாரம் செய்கின்றார்கள். மற்றும் பல இடங்களில் நாம் போகுமுன்பே, நாஸ்திகன் வந்துவிட்டான், மதத் துரோகி வந்துவிட்டான் என்று விஷமப் பிரச்சாரம் செய்து மக்களை நமது பிரசங்கத்தை - நான் என்ன சொல்லுகிறேன் என்பதைக் கேட்க அனுமதிக்கக்கூட மறுக்கின் றார்கள், மற்றும் சில இடங்களில் பலாத்கார முறையில் - காலித்தனமான முறையில் நமது பிரச்சாரத்தைக் கலைக்க முயற்சிக்கிறார்கள்.

இதன் காரணம் என்னவென்று பார்க்கப் போனால் கண்டுபி டிப்பது மிகவும் சாதாரணமான விஷயமேயாகும். அதாவது, அவர்களது "எங்கும் நிறைந்த'', “எல்லாம் வல்ல", "அவ னன்றி ஓரணுவும் அசையாததான" கடவுள் நம்பிக்கையும், அப்படிப்பட்ட கடவுளின் அவதாரங்களாலும், கடவுள் அம்சம் பெற்றவர்களாலும், கடவுள் குமாரராலும் உண்டாக்கப்பட்ட மத நம்பிக்கையுமேயொழிய வேறில்லை என்று சொல்லப்படுகி றது. ஆகவே, அதன் கருத்து என்னவென்றால், எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த கடவுள் உணர்ச்சியும், தத்துவமும் ஒரு சாதாரண மனிதனால் அழிக் கப்பட்டு விடும் என்றும், கடவுள், அவதா ரம், அம்சம், குமாரன், தூதன் ஆகியவர்கள் மூலம் உபதேசிக்கப்பட்ட மதமானது ஒரு சாதாரண மனிதனின் முயற்சியால் அழிக்கப் பட்டு விடும் என்றும், இதனால் மனித சமூகத்தின் மேன்மை போய்விடுமென்றும்
பயந்தே இம்மாதிரி விஷமப் பிரச்சாரம் செய்வதாயும், பலாத்கா ரச் செயல்கள்கூட செய்ய வேண்டி இருப்பதாயும் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது.

இவ்விதமாக கடவுள் நம்பிக்கையின் பேரால், மத நம்பிக்கை யின் பேரால், பலாத்காரச் செயல் - எதிர்ப்பிரச்சாரம் விஷமப் பிரச்சாரம் ஆகியவைகள் செய்யப்படுவது பெரிதும் அறியாமை யால் என்றோ , மதத்தையும், கடவுள் தன்மையையும் சரிவர உணராததினால் என்றோ , அல்லது மதவெறி, கடவுள் வெறி என்றோ சொல்லிட முடியாது. ஏனெனில், கடவுளும் மதமும் உள்ள உலகில் மக்கள் தோன்றிய காலமுதலே அவற்றுக்கு எதிரிடையான கருத்துடையவர்களையும், அவற்றை ஒப்புக் கொள்ளாதவர்களையும், அரசாங்கமும், மதஸ்தாபனக்காரர்க ளும் கொன்றும் சித்திரவதை செய்தும் தண்டித்தும் கொடுமை செய்தும் வந்திருப்பதானது, கடவுள் மதம் சம்பந்தமான சரித்தி ரங்களாலும், பிரச்சார முறைகளாலும் நன்றாய் உணரலாம். இக்கொள்கையை, முறையை இன்றும் சில சமயக்காரர்கள் கையாண்டு வருவதையும் நம் போன்றவர்கள் கடவுள், மத நம்பிக்கைக்காரர்கள் என்பவர்களால் நடத்தப்படுவதையும் கொண்டு உணரலாம். ஆகவே, இதன் கருத்து, சுயநலமும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமே ஒழிய வேறில்லை.

(அய்ரோப்பா, ஆப்பிரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, இலங்கை வழியாக இந்தியாவுக்குத் திரும்புகையில் 1938 ஆம் வருடம் அக்டோபர் 17-ந் தேதி கொழும்பு வந்திறங்கிய தந்தை பெரியார் அவர்களுக்கு இலங்கையில் கொழும்பு, கண்டி, தாவல்பட்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித் துறை முதலிய இடங்களிலும், இந்தியாவில் தூத்துக்குடி, மதுரை முதலாகிய இடங்களிலும் பல நிறுவனங்களின் பேரால் அனித்த பல வரவேற்பு நிகழ்ச்சிகளிலும், பொது கூட்டங்களிலும் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்து "கடவுள் பற்றி திரட்டியது.

குடி அரசு - 20.11.1938 

 

 

 

Read 26 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.