சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை. குடி அரசு - உரையாடல் - 13.08.1933

Rate this item
(0 votes)

- சித்திரபுத்திரன்

சு-ம - ஒரு மனிதன் உயர்தரப்படிப்பு அதாவது பி.ஏ., எம்.ஏ., ஐ.சி.எஸ் முதலிய படிப்புப் படித்து பட்டதாரியாயிருப்பதற்கும் மற்றும் தொழில் சம்மந்தமான படிப்பில் நிபுணத்துவம் பெற்று இருப்பதற்கும், மற்றொரு மனிதன் அவற்றை அடையாமல் தன் கையெழுத்துப் போடக்கூடத் தகுதியில்லாமல் இருப்பதற்கும் என்ன காரணம் சொல்லுகிறாய்?

பு-ம :- அவனுக்குப் போதிய அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆதலால் அவன் அவற்றை கற்க முடியாமல் போயிருக்கும்.

சு-ம :- அப்படிச் சொல்ல முடியாது. இதோ பார் இந்த மனிதனை, அவன் எவ்வளவு சுருசுருப்பாகவும், புத்திசாலித்தனமாய் பேசக்கூடிய வனாகவும், மண்வெட்டுவதிலும், பாரம் சுமப்பதிலும், கோடாரியால் விறகை வெட்டுவதிலும் எவ்வளவு புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறான். நாம் நான்கு பேர் சேர்ந்தால் கூட செய்ய முடியாத வேலையை அவன் ஒருவனே செய் வது எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது பார். இப்படிப்பட்டவனை புத்தி யில்லாதவன் என்று சொல்லிவிட முடியுமா? ஆதலால் இவனுக்கு அறிவு இருக்கிறதே இவன் ஏன் பட்டதாரியாகவில்லை ?

பு-ம :- அப்படியானால் அவன் தாய், தந்தையர்கள் இவனைப் படிக்கப் போதிய கவலை எடுத்துக் கொள்ளாமலிருக்கலாம்.

சு-ம :- இதோ, அவன் தகப்பனார் வந்துவிட்டார். அவரைக் கேட்டுப் பார். அவர் தன் மகன் படிக்க வேண்டுமென்ற ஆசையுடன் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பார்த்ததாக தானே சொல்லுகிறார். அப்படியிருந்தும் ஏன் அவர் குமாரன் படிக்கவில்லை ?

பு-ம :- ஒரு சமயம் அவர் குமாரனுக்குப் படிக்கவேண்டுமென்ற கவலையில்லாமலிருந்திருக்கலாம்.

சு-ம :- அப்படியும் சொல்ல முடியவில்லையே. அவர் மகனைக் கூப்பிட்டுக் கேட்டுப்பார். அவன் தான் படிக்கவேண்டுமென்று எவ்வளவோ ஆசைப்பட்டு அலைந்து திரிந்து பார்த்ததாகவும், காரியம் கைகூடாமல் போய்விட்டதாகவும் சொல்லுகிறானே இதற்கென்ன சமாதானம் சொல்லு கிறாய்?

பு-ம :- அப்படியானால் அதாவது மகனும் புத்திசாலியாயிருந்து, தகப்பனுக்கும் தன் மகன் படிக்கவேண்டு மென்கின்ற ஆசையும் இருந்து பிள்ளையும் படிக்க ஆவலுள்ளவனாய் இருந்து படிக்காதவனாயிருக்கிறான் என்றால் ஒரு சமயம் அவன் தகப்பனுக்கு தன் பிள்ளையைப் படிக்க வைக்கப் பணம் இல்லாமலிருந்திருக்கலாம்.

சு-ம -- இதுதான் சரியான பதிலாகும். அப்படியானால் அவன் தகப்பனுக்கு ஏன் பணமில்லாமல் போய்விட்டது?

பு-ம :- இது ஒரு கேள்வியாகுமா? பணம் என்பது அவனவன் பாடுபட்டுச் சம்பாதித்திருக்க வேண்டியதாகும்.

சு-ம:- சரி என்றே ஒப்புக்கொள்ளுகிறேன். இந்த மனிதன் பாடுபடவில்லை என்று நீ சொல்லுகிறாயா? இந்த மனிதன் கல் உடைக்கிறார், இவர் சம்சாரம் விறகு கொண்டு வந்து விற்கிறார், வெளியில் வேலைக்குப் போய் வந்த நேரம் போக மீதி நேரத்தில் பெரிய கட்டைகளை வீட்டில் போட்டு கோடாரி கொண்டு பிளந்து சிறு சிறு சுமையாக அழகாகக் கட்டி வைக்கிறார். போதாக்குறைக்கு இவரின் தாயார் வயது சென்ற கூன் விழுந்த கிழவியம்மாள் புட்டும், முருக்கும் சுட்டு வீட்டுக்கு முன்னால் இருந்து விற்றுக் கொண்டே யிருக்கிறார்கள். இரவில் 4 மணி நேரம் மாமியும், மருமகளும் தினம் ராட் டினத்தில் நூல் நூற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இப்படியெல்லாம் இருக்க இவர்கள் பாடுபடவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

பு-ம:- இதெல்லாம் சரிதான். என்ன பாடுபட்டாலும் பணம் சேருவதற்கு பிராப்தம் வேண்டாமா? ஜன்மாந்திர கர்ம பலன் அதற்கு அனு சரணையாக இருக்க வேண்டாமா? பையனுக்கும் அவன் தலையெழுத்து பலமாயிருக்க வேண்டாமா? இவ்வளவும் இருந்தாலும் பகவானுடைய அனுக்கிரகமும் தாராளமாய் இருக்க வேண்டாமா? இவ்வளவு சங்கதிகள் தேவை இருக்கும் போது "பையன் கெட்டிக்காரன், புத்திசாலி, தகப்பனுக்கும் படிப்பிக்க ஆசையிருந்தது, குடும்பத்திலும் பெற்றோர்கள் ஆளுக்கொரு கஷ்டப்பட்டார்களே, இப்படியெல்லாம் இருந்தும் பையன் ஏன் படிக்க வில்லை” என்றால் இது என்ன கேள்வி? இவை எல்லாம் என்ன நம்முடைய இச்சையா? அப்படியானால் நான் ஆகாயத்தில் பறக்க வேண்டுமென்றால் பறந்து விட முடியுமா? நான் ராஜா ஆகவேண்டுமென்றால் ஆகிவிட முடியுமா? நான் மகாத்மா ஆகவேணும் என்று ஆசைப்பட்டால் ஆகிவிட முடியுமா? நமக்கெல்லாம் மேலாக ஒன்று இருந்து கொண்டு நம்மை நடத்துகின்றது என்கின்ற ஆஸ்திக ஞானத்தை உணர்ந்தோமேயானால் இப்படிப்பட்ட நாஸ்திக உணர்ச்சிக் கேள்விக்கெல்லாம் இடமே இருக்காது.

சு-ம:- அப்படியா சங்கதி, சரி உன் கடையைக் கட்டு. நான் சொல் வதை சற்று கவனமாய்க் கேள். பிறகு உன்னுடைய ஆஸ்திக ஞானத்தின் யோக்கியதையைப் பார்ப்போம்.

பு-ம:-சரி சொல்லு பார்க்கலாம்.

சு-ம :- ஒரு ஆயிரம் ஏக்கரா பூமியும், 250 வீடுகளும், 1000 ஜனங்களும் உள்ள ஒரு கிராமத்தை எடுத்துக்கொள்ளுவோம். அந்த பூமியும், அந்த வீடுகளும் அங்குள்ள மற்ற செல்வங்களையும், வியாபாரங் களையும் அந்த ஒரு ஆயிரம் ஜனங்களுக்கும் பொதுவாக்கி விடுவோம். அந்த ஆயிரம் பேர்களுடைய வாழ்க்கைக்கும், அனுபவங்களுக்கும் வேண்டிய சாதனங்கள் என்ன என்ன என்பதாக ஒரு கணக்குப் போட்டுப் பார்த்து அவைகளை யெல்லாம் அங்கேயே உற்பத்தி செய்ய ஒரு திட்டம் போட்டுக் கொள்ளுவோம். அதற்கு ஏற்ற தொழிற்சாலைகளைக் கட்டி அத் தொழிற்சாலையில் வயது வந்த எல்லா மக்களையும் ஆண், பெண் அடங்க லும் எவ்வளவு நேரம் வேலை செய்தால் போதுமோ அவ்வளவு நேரம் வேலை செய்தாக வேண்டும் என்று ஒரு ஏற்பாடு செய்து கொள்ளுவோம். அவர்களுடைய குழந்தைகளை எல்லாம் ஒரு இடத்தில் கொண்டு வந்து சேர்த்து அவர்கள் எல்லோரையும் ஒரே மாதிரியாக ஆகாரம், துணி முதலிய வைகள் கொடுத்து ஒரே மாதிரி போஷித்து எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுவரை ஒரே மாதிரியான கல்வியைக் கொடுத்து, கடவுள் செயல், மதம், முன் ஜன்ம பலன், தலைவிதி, தலையெழுத்து முதலிய வார்த்தைகள் அவர்கள் காதில் விழாமலும், அப்படிப்பட்ட எண்ணங்கள் அவர் மனதில் உதிக்காமலும் இருக்கும்படி ஜாக்கிறதையாய் காவல் வைப் போம். பிறகு அவர்களுக்கு 14 அல்லது 15 வயது ஆனவுடன் அவர்களு டைய இயற்கை ருசிக்கும், மனப்போக்குக்கும் ஏற்ற தொழிலையும் - வித்தை யையும் கற்றுக்கொடுப்போம். அவற்றில் அவர்கள் 18, 19 வயதுவரை அனு போகம் பெற்ற பிறகு அவரவர்களுக்கு ஏற்ற வேலை செய்யும்படி தொழிற் சாலைகளுக்கு அனுப்பிக் கொடுப்போம். இதன் பயனாய் உண்டா கும் பயனை அந்தக் கிராமத்திலுள்ள எல்லா ஜனங்களுக்கும் சரி பங்கு கிடைக் கும்படிக்கும், இந்த கொள்கைகொண்ட அந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகம் நடக்கும் படிக்கும் ஏற்பாடு செய்வதோடு ஒவ்வொரு மனிதனும் தன் பங்குக் குக் கிடைக்கக் கூடிய சாதனத்தை அவனவன் அனுபவித்தே தீரவேண்டுமே ஒழிய எவனும் மீதி வைக்கக்கூடாதென்றும் திட்டம் செய்வோம்.

மற்றும் நொண்டி, முடம், வேலைக்கு லாயக்கற்றது, வயது சென்றது ஆகியவர்களைப் போஷிக்க ஒரு திட்டம் போட்டு அதற்கு வேண்டிய அளவு சாதனங்களையும் தனித்தனியாக எடுத்து ஒதுக்கி வைத்துக்கொள்ளு வோம். பிறகு இந்தக் கிராமத்தில் உள்ள ஆயிரம் பேருக்கும் ஏதாவது அவசர காலங்களில் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டால் அதை சமாளிக்க பயிற்சி கொடுத்து அது மறந்து போகாமலிருக்கும்படி அடிக்கடி பரீக்ஷை செய்து வருவோம். இந்தக் கிராமத்தில் உள்ள 1000 பேருக்கும் வசிப்பதற்கு ஒரே அளவான இடம் கொண்ட வீடுகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கி விடுவோம். இந்த கிராமத்து ஜனங்கள் பூராவும் சந்தோஷம் அனுபவிக்கவும் நேரப் போக்கு உண்டாகவும், சுகாதார சௌக்கியமும், உலாவ நந்தவனமும் முதலிய போகபோக்கியங்களுக்கு ஏற்பட்ட சாதனங்களை கூடியவரையில் பொதுவிலேயே உற்பத்தி செய்து வைத்து இலவசமாகவே அனுபவிக்க உதவுவோம்.

ஆண் பெண் சேர்க்கைத் துணை விஷயங்களுக்கு அவரவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் மாத்திரம், இஷ்டம் உள்ள வரையில் மாத்திரம் துணைவர்களாயிருக்க ஏற்பாடு செய்வோம். ஆக, இவை முதலிய காரியங் களை ஒழுங்காக பாரபக்ஷமில்லாமல் நடத்தி வருவதாயிருந்தால் நீ மேலே சொன்ன பிராப்தம், ஜென்மாந்திர கரும பலன், தலையெழுத்து, பகவா னுடைய அனுக்கிரகம், நமக்கு எல்லாம் மேலாக ஒன்று இருந்து கொண்டு நம்மை நடத்துகிறது என்கின்றதான வார்த்தைகளுக்கும், கொள்கைகளுக்கும், எண்ணங்களுக்கும் இடமுண்டா என்று யோசித்துப் பார்.

குறிப்பு :- இந்த சம்பாஷணையானது தனிவுடமைத் தத்துவத்தில் தான் கடவுள், கடவுள் செயல் முதலியவைகள் உண்டு என்றும், பொது உடமைத் தத்துவத்தில் அவைகளுக்கு வேலையில்லை என்றும், தனிவுடமைத் தத்துவத்தை நிலை நிறுத்தவே மேல்கண்ட கடவுள், கடவுள் செயல் முதலிய கற்பனைகள் ஏற்படுத்தப்பட்டு அது நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் குறிப்பிடவே எற்பட்டதாகும். மற்றபடி அரசியல் சம்மந்தமாக மற்றொரு சமயம் எழுதுவோம்.


குடி அரசு - உரையாடல் - 13.08.1933

 
Read 32 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.