கடவுள் என்ன சமாதானம்? பகுத்தறிவு கட்டுரை - 1.7.1935

Rate this item
(1 Vote)

கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பற்றதாய் இருந்து வருகிறது.

கடவுள் என்ற வார்த்தை தோன்றி எவ்வளவு காலம் இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. 

அப்படியிருந்தும், கடவுள் என்றால் என்ன? என்று இன்று எப்படிப்பட்ட ஆஸ்திகராலும் சொல்ல முடி வதில்லை. ஆகவே, ஒவ்வொரு ஆஸ்திக னும், தனக்குப் புரியாத ஒன்றையேதன்னால் தெரிந்து கொள்ள முடியாததும், பிறருக்கு விளக்க முடியாததுமான ஒன் றையே குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு கடவுள் கடவுள் என்று கட்டி அழுகிறான்.

கடவுளுக்கு லட்சணமோ, இலக்கியமோ, குறிப்போ ஏதாவ தொன்று விளக்கமாய்ச் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டிருந் தால், இவ்வளவு காலத்துக்குள்ளாகக் கடவுள் சங்கதியில் இவ்வளவு காலத்துக்குள்ளாகக் கடவுள் சங்கதியில் இரண்டி லொன்று அதாவது, உண்டு, இல்லை என்கின்ற ஏதாவது ஒரு முடிவுக்கு உலக மக்கள் வந்திருப்பார்கள். கம்பர்கூட சீதையின் இடையை வர்ணிக்கும் போது, "சீதையின் இடையானது கட வுள்போல் இருந்தது” என்று வர்ணிக்கிறார். அதாவது, கடவுள் எப்படி "உண்டோ இல்லையோ" என்பதாகச் சந்தேகப்படக்கூ டியதாய் இருக்கின்றதோ, அதுபோல் சீதையின் இடையானது கண்டுபிடிக்க முடியாத அவ்வளவு நுண்ணியதாய் இருக்கிறது என்று கூறினார்.

கம்பரை நாஸ்திகர் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். 

மக்களுள் பெரும்பாலோரும், ஆஸ்திகர்கள் எல்லோரும் தங்கள் குற்றங்களுக்கும், தங்கள் துர்க்குணங்களுக்கும், தங்கள் தரித்திரத்துக்கும், துன்பத்துக்கும் தாங்களே காரணமென்று வருந்தி அவற்றைப் போக்கும்படி கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள்.

இந்துக்கள், கடவுளை ஒரு மனிதனைப் போலவே கற்பித்துக் கொண்டு, அதிலும் ஒரு செல்வம் பொருந்திய மனிதனாய்க் கற்பித்துக் கொண்டு, அதற்கு மனிதனைப் போலவே வீடு, வாசல், ஆகாரம், வாகனம் ஆகியவைகளைக் கொடுத்து வருகிறார்கள். 

மற்ற கிருஸ்து, முஸ்லீம் ஆகிய மதஸ்தர்களும், கடவுளை மனிதன் போலவே கற்பித்து, அக்கடவுளுக்கு நன்மை, தீமை, விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், கோபம் ஆகியகுணங்களைக் கற்பித்து, தன்னை வணங்கினவனுக்கும், தன் இஷ்டப்படி நடந்தவனுக்கும் நன்மையளிப்பதும்; தன்னை வணங்காதவனுக்கும், தன் இஷ்டப்படி நடக்காதவனுக் கும் தீமையளிப்பதுமான குணத்தைக் கற் பித்திருக்கிறார்கள்.

சர்வ சக்தியுடைய பூர்ணத்தன்மை பெற்று எங்கும் நிறைந்திருக்கிற ஒரு கடவுளுக்கு மோட்சம், நரகம் எதற்கு?

கடவுள் இஷ்டத்துக்கு விரோதமாய் நடக் கும்படியான சந்தர்ப்பம் மனிதனுக்கு எப்படி வரும்?

உலகத்தில் தீமை எப்படி உண்டாயிற்று? அதை யார் கற்பித்தார்கள்? தீய குணம் மனிதனை அடையக் காரண மென்ன? 

தீயதைச் செய்துவிட்டு கடவுளை வணங்குவதாலோ, பிரார்த் திப்பதாலோ அதன் பயன் எப்படி அகற்றப்பட்டுவிடும்! தீமையினால் துன்பம் அடைந்தவனுக்குப் பரிகாரம் எப்படி ஏற்படும்? தீமை செய்தவர்கள் கடவுளை வணங்கிப் பிரார்த்திப் பதின் மூலம், தீமைக்குண்டான பலனை அனுபவிக்க முடியா மல் போய் விடுவார்கள் என்றால், தீமை எப்படி எப்பொழுது உலகைவிட்டு அகல்வது?

எத்தனையோ கோடிக்கணக்கான வருடங்களாக கோடிக்க ணக்கான மக்கள் தீமைக்காக மன்னிக்கப்பட்டும் தீமைக்காகத் தண்டிக்கப்பட்டும், உலகில் இன்றும் நாளையும் இனியும் வெகு காலத்துக்கும் தீமை இருந்து கொண்டே வருகிறது. என்றால், இதுவரையும் தண்டனையும் மன்னிப்பும் என்ன பலனைக் கொடுத்து வந்திருக்கின்றன?

தீமையின் கொடுமையை - மக்கள் அனுபவிக்காமல் இருப்ப தற்கு என்னதான் வழி?

தீமையைச் செய்தவன் மன்னிப்புப் பெற்றோ, தண்டனை அடைந்தோ தன் செய்கைக்குப் பரிகாரம் பெற்றுக் கொள்ளுகி றான் என்றே வைத்துக் கொள்வோம். தீமையை அடைந்தவ னுக்கு இந்தக் கடவுள்கான்ன பரிகாரம் செய்கிறார் என்பது விளங்கவில்லை. தீமையை அடைகின்ற மனிதன் கடவுள் சித்தத்தால்தான் தீமை அடைகிறான் என்றுதானே சொல்ல வேண்டும். அப்படியில்லாவிட்டால், கடவுளின் காவலை மீறி ஒரு மனிதனுக்கு ஒரு மனிதன் தீமை செய்துவிட முடியுமா?
ஆகவே, கடவுள் சித்தத்தால் ஒரு மனிதன் தீமையை அடைகிறான் என்றால், பிறகு, தீமை செய்தவனுக்கு தண்டனை எப்படி வரும்? அவன் எதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்?

கடவுள் சித்தமில்லாமல் தனிப்பட்ட முறையில் தன் சொந்தத்தில் ஒரு மனிதன் ஒரு காரியத்தை ஒருவருக்குச் செய்துவிட முடியுமா?
கடவுள், மனிதன் மூலமாகவே தன்னு டைய ஆட்சியை நடத்துகிறார் என்பதே பெரும்பாலான ஆஸ்திகர்கள் முடிவு. அதனாலேயே, பிச்சை பெற்றவனும், கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகிறான்; உத்தியோகம் பெற்றவனும், கடவுள் கொடுத்தார் என்று சொல் லுகிறான்; உதவி பெற்றவனும், கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகிறான்; ஏதாவது ஒரு கூட்டத்தில் நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொண்டவனும், கடவுள் தப்பித்துவிட்டார் என்று சொல்லுகிறான்.

ஆகவே, எந்த நன்மைக்கும் தீமைக்கும் மனிதன்மீது பொறுப் பைச் சுமத்துவது எப்படி முடியும்?

அன்றியும், கடவுள் சர்வ வியாபியாய் இருக்கும்போதும், மனிதனுடைய ஒவ்வொரு. எண்ணங்களையும், காரியங்களை யும் கவனித்து வருகின்றவராய் இருக்கும்போதும், மனிதனுக்கு தனிப்பட்ட பிரார்த்தனை எதற்கு? அதற்காக இடம், பொருள், நேரம் எதற்காகச் செலவு செய்யவேண்டும்?

அவர் தெரிந்துகொள்ள முடியாத எந்த காரியத்தை பிரார்த்த னையினாலும், ஜபத்தினாலும், தொழுகையினாலும் அவருக்கு அறிவிக்க முடியும்? பிரார்த்தனைக்கும் ஜபத்துக்கும் இரங்குகிற வர் என்றால், கடவுள் தற்பெருமைக்காரரா - அல்லது பிரதியோ ஜனம் பெறும் வியாபாரம் முறைக்காரரா?

இவ்வளவு காலப் பிரார்த்தனையும், ஜபமும், தொழுகையும் மனிதனை ஏதாவது ஒரு வழியில் யோக்கியமாய் நடப்பதற்குப் பயன்பட்டிருக்கின்றதா? 

நன்மைக்கும், தீமைக்கும் கடவுளே கர்த்தராய் இருக்கும் போது, உலகில் தீமைகளே இல்லாமல் இருக்கச் செய்ய முடியாதா? அதை எவராவது சில மக்கள் அடைந்துதான் தீரவேண்டுமா?

அன்றியும், நமது பிரார்த்தனையும், தொழுகையுமாவது நமக்குத் தீமை அணுகாமல் செய்ய முடியுமா? அப்படிசெய்தாலும், அத்தீமை உலகில் உள்ளவரை ஏதாவது ஒரு மனிதனையாவது அணுகித் தானே தீரவேண்டும்?

ஆகவே, மனித சமூகம், பொதுவில் தீமை யில் இருந்து எப்படித் தப்ப முடியும்? தீமையினால் மக்கள் கஷ்டப்படுவார்கள், துன்பப்படுவார்கள் என்பதை கடவுள் அறிந் திருக்க மாட்டார் என்று யாராவது நம்ப முடியுமா?

அப்படி இருக்கும்போது, சர்வ சக்தியும், சர்வ தயாபரத் தன்மையும் கொண்ட கடவுள் உலகத்துக்கு தீமையை ஏன் சிருஷ்டித்தார்? 

விஷப் பூச்சி, விஷக் கிருமி, விஷரோகம், தரித்திரம், துன்பம், கொலைத் தொழில், கொள்ளைத் தொழில், திருட்டு, பொய், வஞ்சகம், விபச்சாரம், கஷ்டமான வேலை, அடிமைத்தனம், கொடுங்கோல் ஆட்சி, ராஜத் துரோகப் பிரஜைகள் கடவுளை மறுப்பது, கடவுளை வைவது முதலாகிய தீமை என்னும் விஷயங்களையெல்லாம் கடவுள் ஏன் சிருஷ்டித்தார்?

இவற்றால் யாராவது ஒருவர் கஷ்டப்படுகிறாரா - இல்லையா? இவற்றால் கடவுளுக்கு என்ன லாபம்? 

பூகம்பம், எரிமலை வெடிப்பு, புயல் காற்று, கடுமழை ஆகிய காரியங்களை ஏன் சிருஷ்டித்தார்?

கெட்ட மனிதர்கள் துன்பமனுபவிக்க என்று சொல்லப்படுமா னால், கெட்ட மனிதர்களை ஏன் சிருஷ்டித்தார்?

நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்று சொல்ல முடியாத குழந்தைகள், மற்ற ஜீவன்கள் ஆகியவைகளுக்கும், துன்பம் அடையும்படி ஏன் செய்தார்? இவைகளுக்கெல்லாம், சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சர்வ தயாபரத் தத்துவமும் உடைய ஒரு கடவுள் உலகத்தைச் சிருஷ்டித்து நடத்தி வருகிறார் என்று சொல்லும் ஆஸ்திகன் என்ன சமாதானம், பதில் சொல்லக் கூடும்?

இந்தக் கேள்விகள் வெகுகாலமாகவே இருந்து வருகின்றன என்று பதில் சொல்லிவிட்டால் போதுமா? 


பகுத்தறிவு கட்டுரை - 1.7.1935

Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.