தமிழனுக்கு கடவுள் உண்டா ? குடி அரசு - சொற்பொழிவு - 29.06.1930

Rate this item
(0 votes)

தெய்வம்

இனி அடுத்தாற்போல் திரு. கையாலக்கேல் அவர்கள் பேசிய கடவுள் என்னும் விஷயத்தைப் பற்றி இக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவன் என்ற முறையில் சில வார்த்தைகள் நான் சொல்ல வேண்டியது அவசியமாகும்.

திரு. கையாலக்கேல் அவர்கள் கடவுள் என்பதைப் பற்றி பேசியதில் இந்து மதக் கடவுள்களை எடுத்துக் கொண்டு அவைகளின் உருவங்களைப் பற்றியும், பெயர்களைப் பற்றியும், குணங்களைப் பற்றியும், குடும்பங்களைப் பற்றியும், ஒரு கடவுளுக்கும் மற்றொரு கடவுளுக்குமுள்ள சொந்தங்களைப் பற்றியும், அதன் பூசை உத்சவம் முதலியவைகளைப் பற்றியும், அதைச் செய்கிற தரகர்களின் யோக்கியதையைப் பற்றியும், செய்விக்கிற பக்தர்களின் மனோபாவத்தைப் பற்றியும் வெகு விபரமாகவும், ஆரம்பமுதல் கடைசிவரை நீங்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டே இருக்கும் படியாக அவ்வளவு வேடிக்கையாகவும் பரிகாசமாகவும் பேசினார்.

 

அது அவ்வளவையும் விநயமாகவே எடுத்துக் கொண்டு பார்ப்போமானாலும், அவர் சொன்னவற்றுள் ஏதாவது ஒன்றை ஆட்சேபிக்கவோ மறுக்கவோ இடம் இருந்ததா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். திரு. கையாலக்கேல் அவர்கள் கடவுளைப் பற்றிப் பேசிய பரிகாசங்களை எல்லாம் வெகு காலத்திற்கு முன்னிருந்தே நம்மவர்களில் சில பண்டிதர்களும், பக்திமான்களும் பாட்டாகவும் வசன மாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் அவைகளெல்லாம் சிலேடைப் படுத்துவதிலும் தத்துவார்த்த வியாக்யானஞ் செய்விப்பதிலும் அவைகளை சொன்னவர்களை பெரிய ஞானிகள் என்றும், சித்தர்கள் என்றும் சொல்லுவ தின் மூலமும் உண்மையை மக்கள் அறிய முடியாமல் மறைக்கப்பட்டு விட்டது. ஆனால் மனிதனுக்குத் தைரியமும், அறிவும் வரவர இன்னும் அதிகமான துணிவோடும், யுக்தியோடும் தானாகவே உண்மைகள் வெளியாய்க் கொண்டேதான் இருக்கும்.

 திரு. கையாலக்கேல் அவர்கள் இந்துமதக் கடவுளைப் பற்றியே பெரும்பாலும் சொன்னார்களானாலும் உலகத்தில் மற்ற மதக்காரர்களுடைய கடவுள்களைப் பற்றி கவனித்துப் பார்த்தாலும் இவ்வளவு ஆபாசமாக இல்லாவிட்டாலும் யுக்திக்கோ, வாதத்திற்கோ நிற்க முடியாமல் அவைகளும் பெரிதும் பரிகசிக்கத்தக்கதாய் தான் இருக்கின்றது. அதாவது உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளைப் பொறுத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே மாதிரியாகத் தானிருக்கின்றன.

உதாரணமாக இந்து மதத்தில் உலக சிருஷ்டிக்கும் கடவுளுக்கும் சம்மந்தம் சொல்லுகிற போது கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி அதன் மீது இருந்து கொண்டு அதில் ஒரு விதையைப் போட்டு அந்த வித்திலிருந்து உலகத்தை உண்டாக்கி அவ்வுலகத்திலிருந்து பிர்மாவை சிருஷ்டித்து, அந்த பிர்மா அந்த உலகத்தை இரண்டாக்கி ஒன்றை சுவர்க்கமாகவும் மற்றொன்றை பூலோகமாகவும் செய்து அந்த பூலோகத்தில் பஞ்ச பூதங்களை யுண்டாக்கி பிறகு மனிதர், மிருகம், பட்சி முதலிய ஜாதிகளைச் சிருஷ்டித்து என்று ஆரம்பித்து மற்றும் இவைபோல அடுக்கடுக்காக எப்படி சொல்லிக் கொண்டே போகின்றதோ, அதுபோலவேதான் கிருஸ்து முதலிய இதர மதங்களிலும், கடவுள் முதல் ஒன்றை சிருஷ்டித்தார், இரண்டாவது நாள் மற்றொன்றை சிருஷ்டித்தார், மூன்றாவது நாள் வேறொன்றைச் சிருஷ்டித்தார் என்பதுபோலவே சொல்லிக் கொண்டு போகப்படுகின்றன.

 ஆகவே அஸ்திவாரத்தில் கடவுள் சிருஷ்டியைப் பற்றிச் சொல்லுகிற விஷயம் எல்லா மதத்திலும் ஒன்றுபோலவே தானிருக்கின்றன. இவை ஏன் இப்படியிருக்கின்றன என்று பார்ப்போமேயானால் கடவுள் உண்டு என்பதற்கு சமாதானம் சொல்லும் போது உலக உற்பத்திக்கு ஒரு ஆதாரம் வேண்டாமா? என்று கேட்டுவிட்டு அதற்காக கடவுள் உலகத்தை உண்டாக்கினார் என்று ஆரம்பித்து, அந்த உண்டாக்கப் பட்டவைகளென்பதை முதலில் இன்னதை உண்டாக்கினார்.

இன்னார் என்பதாகச் சில மதமும், முதல் நாள் இன்னதை உண்டாக்கினார்; இரண்டாவது நாள் இன்னதை உண்டாக்கினார் என்பதாகச் சில மதமும் சொல்லுகின்றன. ஆகவே இந்த இடம் மாத்திரம் எல்லாம் ஒன்று போலாகவே தானிருக்கின்றன. இதில் ஏதாவது தகராறு ஏற்படுமானால் எல்லா மதக் கடவுளுக்கும் ஒரே கதிதான் நேரும்.

கடவுள் ஸ்தாபனத்திற்கு ஒரே மாதிரி அஸ்திவாரம் ஏற்படுவதற்கு காரணம் என்னவென்று பார்ப்போமானால் முதன் முதலாக ஆரிய மதத் திலிருந்தே சீர்திருத்தமாக கிருஸ்துவ மதம் ஏற்பட்டதும் அதிலிருந்து சீர்திருத்தமாக மகமதிய மதம் ஏற்பட்டதும், நமக்கு காணப்படுகிற படியால் எல்லா மதமும் அதையே பின்பற்றிக் கொண்டு வருவதாயிற்றே தவிர வேறில்லை என்றே தோன்றுகிறது.

 

ஆனால் நாம் ஒரு தமிழர் என்கின்ற முறையில் கடவுள் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்வோமானால் “கடவுள்” என்கின்ற பதமே கட + உள் = (கடவுள்) என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே தவிர வடமொழியினும் ஆங்கில மொழியினும் இருப்பதுபோன்று பகவான் (God) காட், அல்லா என்பது போன்ற ஒரு தனி வார்த்தையோ அல்லது அந்த விதங்களான வாக்கியமோ தமிழில் இல்லை என்பதை உணரவேண்டும்.

தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் “கடவுள்” உணர்ச்சி இருந்து இருக்குமானால் அதற்கு ஒரு தனி வார்த்தை இருந்திருக்கும். அது மாத்திரமில்லாமல் ஆங்கில முதலிய பாஷைகளில் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம் - எத்தீஸ்ட்டு நாஸ்திகம் - நாஸ்திகன் என்கின்ற வார்த்தைகள் இருக்கின்றனவோ அவை போலவே தமிழிலும் “கடவுள்” இல்லை என்று சொல்லுவதை உணர்த்துவதற்கு “கடவுள்” இல்லை என்று சொல்லுபவனைக் குறிப்பிடுவதற்கும் அப் பொருள் கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்கும்.

ஆகவே அவைகளிலிருந்தே தமிழர்களுக்கும் (அதாவது தமிழ் நாட்டாருக்கு) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்மந்தமும் இருந்ததில்லை என்பது ஒருவாறு புலப்படும். இறைவன் என்கின்ற பதத்தை கடவுளுக்குள்ள தமிழ் பதம் என்று பண்டிதர் கள் சொல்லக்கூடுமானாலும் அது அரசனுக்கும் தலைவனுக் கும் ஏற்பட்டதே தவிர கடவுளுக்காக ஏற்பட்டத் தனிப் பொருள் அமைந்த சொல் அல்ல வென்றே சொல்லுவோம். ஆனால் “கடவுள்” என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன் பெரியவன் எனினும் பொருந்தும் என்று அப்புக்கட்டலாமேயொழிய அது அதற்கே ஏற்பட்ட தனிவார்த்தை ஆகாது.

 

நிற்க, தமிழ் நாட்டில் பலர் காலஞ்சென்ற பிதுர்க்களையும் செல்வாக்குள்ள பெரியார்களையும் அன்பினாலும், வீரர்களை கீர்த்தியாலும், வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன்.

மற்றப்படி இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிர்மா, பிள்ளையார், சுப்ரமணியன் முதலிய கடவுள்களையோ மற்றும் அது சம்மந்தமான குட்டிக் கடவுள்களையோ தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி இருந்தார்கள் என்றாவது சொல்லுவதற்கு கூட இடமில்லை என்று கருதுகிறேன்.

இதற்கெனக்கு தோன்றும் ஆதாரம் என்னவென்றால் இப்பொழுது உள்ள கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட “நீச்சக் கடவுள்கள்” தவிர மற்ற “கடவுள்”கள் பெயர்கள் எல்லாம் வடமொழியிலேயே இருக்கின்ற தென்பதே போதுமானதாகும்.

ஆனால் வடமொழிப் பெயருள்ள சில “கடவுள்”களின் பெயர்களை தமிழில் மொழி பெயர்த்து அந்த கடவுள்களைத் தமிழில் அழைப்பதை பார்க்கின்றோம். என்றாலும் இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்குத் தக்க சமாதானம் சொல்ல யாரும் முன்வருவதை நான் பார்க்க வில்லை.

இது மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களை பிடித்த நோய்களான சைவ வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வடமொழி பெயர்களை உடையதாகவும் அவைகளின் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேத சாஸ்திரப் புராண இதிகாசங்களாகவும் தானே இருக்கின்றதே அல்லாமல் தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்டதாகச் சொல்லக் கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும் கேட்டதும் இல்லை.

இவைகளுக்கு செய்யப்படும் பூசை முதலியவைகளும் வடமொழி நூல்கள் ஆதாரப்படி வடமொழி பெயர்கள் கொண்ட வஸ்துகளும் செய்கைகளுமாகவே இருப்பதையும் காணலாம். அதாவது அருச்சனை, அபிஷேகம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவைகளாகும்.

தவிரவும் மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமயாச்சாரியார்களும் பக்தர்மார்களும் கும்பிட்டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண்டகம், பிரபந்தம் முதலாகியவைகள் பாடினதும் மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும் ஆகிய எல்லாம் வடமொழிப் பேர் கொண்ட கடவுள்களை பற்றியும் அவர்களது செய்கைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட வடமொழி புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றி யுமே இருக்கின்றனவே அல்லாமல் மற்றபடி அவைகள் தமிழர்களோ அல்லது தமிழ் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத்தக்கதாக ஒன்றையுமே ஒருவர் வாக்கையுமே நான் பார்த்ததும் இல்லை பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை.

மற்றும் சமயக்குறிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள்கூட வடமொழியில் உள்ளதே தவிர தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது அபிப்பிராயம். வேண்டுமானால் அதை தமிழில் விபூதியை திருநீறு என்றும் திருமண் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம்.

ஆனாலும் அது சரியான மொழிபெயர்ப்பல்லவென்று சொல்வதோடு விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்தக் கருத்துடன் சொல்லப்படுகின்றனவோ அந்தக் கருத்தும் பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன்.

விபூதி என்றும் நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துக்கள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்த பெயரையே அதாவது சாம்பலுக்குள்ள மாறு பெயராகிய நீறு என்றும் மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னால் வைத்து திருநீறு, திருநாமம் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றே தோன்றுகின்றது.

ஆகவே தமிழில் காட், அல்லா, பகவான் என்பவைகளைக் குறிப்ப தற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும் அதன் சின்னங்களையும் குறிப்பிடுவதற்கு தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும் அனுபவத்திலுள்ள கடவுள்களும் பெயர்களும் அவற்றின் நடவடிக்கைகளும் கூட தமிழில் இல்லை என்பதும் மற்றபடி இப்போது இருப்பவைகள் எல்லாம் வடமொழியிலிருந்து தமிழர்கள் எடுத்துக் கொண்டு தங்களுடையனவாக்கிக் கொண்ட மயக்கமே என்றும் எனக்குப் பட்டதை உங்களுக்குச் சொன்னேன்.

இனி கடவுள் உண்டு - இல்லை என்பதைப் பற்றியாவது பொது ஜனங்களுடைய அபிப்பிராயந்தான் என்ன என்பதைப் பற்றியாவது விசாரிப்போம்.

( 08.06.190 குடி அரசு - சொற்பொழிவு தொடர்ச்சி )

குறிப்பு:- 01.06.1930 கண்ணனூர் தர்ம சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா - தலைமை - நிறைவுரை.

(குடி அரசு - சொற்பொழிவு - 29.06.1930)

 
Read 63 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.