சென்னை அரசாங்க உள் நாட்டு மெம்பர் பதவி. (குடி அரசு - தலையங்கம் - 09.03.1930)

Rate this item
(0 votes)

சென்னை அரசாங்க நிர்வாக சபையில் இம்மாதக் கடசியில் ஒரு மெம்பர் ஸ்தானம் அதாவது கடந்த 5 - வருஷ காலமாக டாக்டர் கனம் சர் மகமது உஸ்மான் அவர்கள் வகித்து வந்த உள்நாட்டு மெம்பர் ஸ்தானம் 5 வருஷ காலாவதியின் காரணமாக காலி ஆகக் கூடு மென்பதாய் தெரிய வருகின்றது.

அதை உத்தேசித்து அநேக கனவான்கள் அதை அடைய முயற்சி செய்து வருவதாகவும் தெரிய வருகின்றது. அரசாங்கத்தாரும் அந்தப் பதவியை யாருக்குக் கொடுக்கலாம் என்பதாக யோசனை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

 இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தாருக்கு இது விஷயமாக நாம் நமது அபிப்பிராயத்தைத் தெரிவித்துவிட வேண்டியது நமது கடமை என்று நினைக்கின்றோம்.

ஆதியில் அதாவது சுமார் 20 வருஷத்திற்குமுன் மேன்மை தங்கிய கவர்னரவர்களின் நிர்வாக சபையில் இரண்டு அங்கத்தினர்கள் இருந்ததை மூன்றாக மாற்றியதின் முக்கிய காரணமே இந்தியர்களுக்கும் அதில் இட மிருக்க வேண்டும் என்கின்ற எண்ணமேயாகும்.

பிறகு மூன்றை நான்காக்கியதும் அவைகளில் இந்தியர்களில் ஜாதி மதப் பிரிவுக்குத் தக்கபடி தாராளமாய் பிரித்துக் கொடுக்க சவுகரியப்படுத்திக் கொண்டு வரப்பட்டது. அதன் காரணமாகவே சட்ட மெம்பர் ஸ்தானத்தை பார்ப்பனர்களுக்கும் மற்றொன்றாகிய உள்நாட்டு மெம்பர் ஸ்தானத்தை ஒரு மகமதியருக்கும் கொடுத்து வரப்பட்டது.

 சென்ற வருஷத்தில் சட்ட மெம்பர் ஸ்தானம் காலியாக நேரிட்டதும் அதை பார்ப்பனருக்கென்றே முடிவு கட்டிவிடக் கூடாதென்றும் மற்ற சமூகத்தாருக்கும் வரிசைக் கிரமமாய் மாறிவர வேண்டும் என்றும் வாதாடி அதை ஒரு பார்ப்பனரல்லாதவருக்குக் கிடைக்கும்படி செய்யப்பட்டது.

அதுபோலவே இப்போது 10 - வருஷ காலமாய் மகமதிய கனவான்கள் பார்த்து வந்த ஸ்தானமும் காலியாவதால் அதை நிர்வாக சபையில் இதுவரை இருந்து வராத ஒரு சமூகத்திற்கே அதை வினியோகிக்க வேண்டும் என்பதாக வலியுறுத்துகின்றோம்.

அதாவது நாம் அரசியலில் வகுப்பு வாரிப்பிரதி நிதித்துவம் கேட்கும் போதெல்லாம் ஆதியில் இருந்தே இந்தியர்களில் 5 பிரிவுகளைத்தான் பிரித்துக் காட்டி கேட்டு வந்திருக்கின்றோம்.

அதாவது, இந்தியர்களுக்கு என்று கொடுக்கப்படும் பதவிகள் ஸ்தானங்கள் முதலியவைகளை இந்துக்கள் அதாவது இந்துக்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மகமதியர்கள், கிறிஸ்தவர்கள் என்கின்ற ஐந்து பிரிவுகளாகப் பிரித்தே பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வந்திருக்கின்றோம்.

அவற்றுள் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவுகளைப் பற்றி இந்த சமயம் அவசியமில்லை என்று பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர்கள் சொல்வதனாலும் சென்ற வருஷம் சர். சி. பி. அய்யர் ஸ்தானம் காலியானதும் இந்த முறையைக் கொண்டேதான் வற்புறுத்தி அதை இதுவரை பார்ப்பாருக்கே கொடுக்கப்பட்டு வந்திருந்தாலும் அதை மாற்றி சர். கிருஷ்ணன் நாயர் அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்தோம்.

அது போலவே இது சமயம் காலியான சர். மகமது உஸ்மான் அவர்கள் ஸ்தானமும் மகமதிய கனவான்களே பார்த்து வந்திருந்தாலும் இதுவரை பார்த்திராத வகுப்பாரான தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கே கொடுக்க வேண்டியது நியாயமாய் இருக்கின்றது என்று சொல்ல வேண்டியதாயிருக்கின்றது.

 ஏனெனில் இதுவரை அப்படிப்பட்ட பதவிகளை மற்ற வகுப்பார்கள் எல்லாம் அனுபவித்து வந்ததுடன் இன்றைய தினமும் அது போன்ற செல்வாக்கும் அதிக சம்பளமும் உள்ள உயர்ந்த பதவிகளில் எல்லாம் அவ்வகுப்பாரை (தாழ்த்தப்பட்ட வகுப்பாரை) தவிர மற்ற வகுப்பார்கள் எல்லாரும் இருந்து கொண்டு வருகின்றார்கள்.

எங்ஙனமெனில், ஒரு பார்ப்பனர் மந்திரியாகவும், மூன்று பார்ப்பனரல்லாதார்கள் அதாவது சட்ட மெம்பராக ஒரு பார்ப்பனரல்லாத மலையாள கனவானும், மந்திரியாக இரண்டு பார்ப்பனரல்லாத கனவானும் இருப்பதோடு மற்றும் பப்ளிக் சர்விஸ் கமிஷனில் ஒரு மகமதியரும், ஒரு கிருஸ்தவரும் இருப்பதோடு ஏரக்குறைய இரண்டு வருஷகாலம் ஒரு கிருஸ்தவ கனவான் மந்திரியாகவும் இருந்திருக்கிறார்.

ஆகவே தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பது ஒன்றைத் தவிர மற்ற வகுப்புகள் எல்லாம் “சீர்திருத்தத்தின்” பலனாய் ஏற்பட்ட ஒவ்வொரு பெரும் பதவிகளையும் அனுபவித்தே வந்திருக்கின்றார்கள்.

மற்றும் இந்து மத பரிபாலன போர்டிலும் இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாருமே அனுபவித்து வந்திருக்கிறார்களே ஒழிய இந்துக்கள் என்கின்ற தலைப்பின் கீழ் இருந்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு எவ்வித பிரதிநிதித்துவமும் பதவியும் இதுவரை கிடைத்ததாக யாரும் சொல்ல முடியாது என்றே நினைக்கின்றோம்.

 ஆகையால் இந்த நிர்வாக சபை மெம்பர் பதவியை கண்டிப்பாய் அந்த, அதாவது தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்பவர்களுக்கே கொடுக்க வேண்டியது நியாயமும் யோக்கியமும் ஆன காரியம் என்பதே நமது அபிப்பிராயம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்பது இந்தியாவிலாகட்டும் சென்னை மாகாணத்தில் ஆகட்டும் ஒட்டு மொத்த ஜனத் தொகையில் சற்றேரக் குறைய 5ல் அல்லது 6ல் ஒரு பங்குள்ள ஜனத்தொகை கொண்ட சமூகமாகவும் வெகுகாலமாகவே தாழ்த்தப்பட்டு வந்ததாகவும் மிக்க கொடுமையையும் கஷ்டத்தையும் அனுபவித்து வந்ததாகவும் இருப்பதுடன் இன்றைக்கும் பிரிட்டீஷ் கவர்ண்மென்டு இந்தியாவில் இருக்கவே கூடாது என்று யாராவது சொல்லுவார்களேயானால் அதை மறுத்து கண்டிப்பாய் அந்தக் கவர்ண் மென்டு இருந்துதானாகவேண்டும் என்று சொல்லுவதற்கு தகுந்த காரணஸ் தர்களாயுமிருக்கின்ற சமூகத்தார்களுமாவார்கள்.

ஏனெனில் அரசாங்கத்தார்கள் இந்தியாவில் அரசியல் கிளர்ச்சி ஏற்பட்ட காலங்களிலெல்லாம் தாங்கள் இந்தியாவின் நன்மையைக் கோரியும் இந்திய மக்களில் இளைத்தவர்களை வலுத்தவர் துன்புறுத்தாமலும் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்கள் தாழ்ந்த ஜாதிக்காரர் என்பவர்களை கொடுமைப்படுத்தாமலும் இருப்பதற்காகவும் எல்லோரையும் சமமமாகப் பார்ப்பதற்காகவும் இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டு இருப்பதை மெய்ப்பிக்கவும் சந்தர்ப்பத்தை கொடுக்கக் கூடிய சமூகத் தார்களாயிருப்பதேயாகும்.

அன்றியும் சைமன் கமீஷன் இந்தியாவுக்கு வந்த காலத்தில் இந்தியர்களில் சிலர் அதை பகிஷ்கரித்ததற்கும் பலர் அதை வரவேற்கச் செய்ததற்கும் முக்கிய காரணஸ்தர்களுமாவார்கள். அதாவது தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள் முன்னேற்றமடைவதற்கும் சமத்துவம் அடைவதற்கும் பிரதிநிதித்துவம் பெருவதற்கும் இந்திய அரசியல் காரர்களின் சூட்சியிலகப்படாமல் இந்த அரசாங்கம் நியாயமாகவும் யோக்கியமாக வும் நடந்து கொள்ளுமென்றும், மேலும் எந்தப்படி நடந்து கொள்ள சைமன் கமிஷன் வழி செய்யுமென்றும் நினைத்தே நம்பியே ஆதரித்தவர்களாவார்கள்.

 அன்றியும் நாமும் நமது சுயமரியாதை இயக்கமும் இந்த தத்து வத்தை அடிப்படையாகக் கொண்டுதான் சைமன் கமீஷனை உயர்ந்த ஜாதிக் காரர்கள் என்பவர்கள் தங்கள் சுயநல எண்ணத்தைக் கொண்டு அதற்கு விரோதமாகச் செய்த கிளர்ச்சிகளின் சூட்சிகளை வெளியாக்கி அவைகளை அழித்து ஆதரித்ததுமாகும்.

அன்றியும் இன்றைய தினமும் பலருக்கு காங்கிரசினிடம் ஏன் திரு காந்தியாரிடமும் கூட நம்பிக்கையில்லாமல் போன தும் காங்கிரசை விட்டும் திரு காந்தியின் சத்தியாக் கிரகம் பூரண சுயேச்சை ஆகிய சம்பந்தமான காரியங்களை விட்டும் விலகிக் கொண்டதற்கும் (சிலருக்கு ஜெயில் பயமிருந்தாலும் மற்ற பெரும்பான்மையோர்களுக்கு) இந்த சமூகத் தாரும் இவர்களின் முற்போக்கு விஷயத்தில் கவர்ண்மென்டாரிட முள்ள நம்பிக்கையுமாகும்.

ஆகவே சென்னை அரசாங்கத்தாரும் இந்திய அரசாங்கத்தாரும் இந்த நம்பிக்கைக்கு விரோதமோ துரோகமோ செய்யாமல் தங்களுக்கு கிடைத்த இந்த நல்ல சமயத்தை ஒழுங்காய் உபயோகித்துக் கொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.

தாழ்த்தப்பட்டு கொடுமை செய்யப்பட்ட மக்களை விடுதலை செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு அதிகாரங்களில் உயர் பதவி கொடுப்பதன் மூலமே தான் சீக்கிரத்தில் செய்யக்கூடுமே தவிர வேறு காரியங்களாலல்ல.

உதாரணமாக பார்ப்பனர்களால் மற்றப் பார்ப்பனரல்லாதார்களை சூத்திரன் இழிந்த பிரப்பான் என்றும் மகமதியர்களை மிலேச்சர்களென்றும், கிருஸ்தவர்களை நீச்சர்களென்றும் சொல்லிக் கொண்டிருந்த கொடுமைகள் எல்லாம் இன்றைய தினம் வேகமாய் மறைந்து மறைந்து போய்க் கொண்டிருப்பதற்கு காரணம் அந்தந்த சமூகங்கள் அரசியல் அதிகாரங்களில் ஆதிக்கம் பெற்ற தினாலேயே ஒழிய மற்றபடி வேறு எந்தக் காரணங்களாலாவது என்று சொல்லி விட முடியாது.

ஆகவே அரசாங்கத்தார் தங்கள் பொருப்புகளையும் நாணயங்களையும் காலதேச நிலைமையையும் உணர்ந்து கண்டிப்பாய் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கே இந்தப் பதவியை வழங்க வேண்டுமென்று மற்றுமொரு முறை வேண்டுகின்றோம்.

மற்றபடி அந்தச் சமூகத்தில் அந்தப் பதவியை வகிக்கத் தகுந்த கனவான்கள் இல்லை என்று ஏதாவது சாக்குச் சொல்ல வருவார்களே ஆனால் அதை நாம் சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது என்பதோடு அதில் சிறிதும் உண்மையும் நாணயமும் இருக்க முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில் இன்றைய தினம் சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப் பட்ட மக்களின் பிரதிநிதியாக இந்திய சட்ட சபையில் இருக்கவும் சென்னை மாகாண மக்களின் பிரதிநிதியாக இந்தியாவுக்கே அரசியல் பரீட்சை செய்தும் மேல்கொண்டு சீர்திருத்தம் வழங்கத் திட்டங்கள் ஏற்படுத்தும் சைமன் கமிஷன் கமிட்டியில் ஸ்தானம் வகித்து இருக்கவும் மேற்படி சமூகத்தில் கனவான்கள் இருக்கும் போது, சென்னை அரசாங்கத்தில் அதுவும் சுமார் இரண்டொரு வருஷத்திற்குள் மறைந்துபோக இருக்கும் ஒரு நிர்வாக சபையில் நால்வரில் ஒருவராக இருக்கும் ஒரு மெம்பர் ஸ்தானத்திற்கு அந்த சமூகத்தில் நபர்கள் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும் என்றுதான் கேழ்க்கின்றோம்.

அன்றியும் நாமாகவே உயர்திரு ராவ்பகதூர் எம். சி. ராஜா, எம். எல்.ஏ., அவர்கள் பெயரையும் ஞாபக மூட்டுகின்றோம். கடைசியாக அரசாங்கத்தார் இந்த விஷயத்தில் நியாயம் செய்யாமல் அலட்சியமாக இருந்து விடுவார்களேயானால் சர்க்காரின் நல்ல எண்ணத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கும் அவர்களிடம் அனுதாப முள்ளவர்களுக்கும் சிறிதாவது உள்ள நம்பிக்கையும் ஆட்டம் கொடுத்துவிடு மென்பதையும் வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 09.03.1930)

 
Read 35 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.