“தமிழ் நாடு” (குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.02.1930)

Rate this item
(0 votes)

“தமிழ் நாடு” பத்திரிகையில் ஆலயப் பிரவேசம் என்ற தலைப்பில் வரும் விஷயங்களும் திரு. தண்டபாணி பிள்ளையின் பேரால் வரும் சுயமரியாதைச் சரித்திரம் என்னும் விஷயங்களுக்கும், திரு. கிருத்திவாசய்யர் நாம் குடி அரசில் ஆலயப் பிரவேசம் என்னும் தலைப்பின் கீழ் எழுதினவைகளில், தான் ரயில் சார்ஜ் வாங்கினதை மாத்திரம் மறுத்திருக்கும் விஷயத்திற்கும், பொதுவாக இப்படி ஒரு கூட்டம் ஏன் இந்த மாதிரி வேலையில் தலைப்பட்டது என்பதற்கும், திரு. வரதராஜுலு மறுபடியும் தலையெடுப்பதற்கு எந்தவிதமான தந்திரத்தின் மூலம் இக்கூட்டத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றார் மற்றும் பலரும் எப்படி ஒன்றானார்கள் என்பதையும் தக்க காரணங்களுடன் ரிக்கார்டுகளுடன் பின்னால் தெரிவிக்கிறோம்.

ஏனெனில் தொடர்ச்சிகளும் மற்றும் திரைமறைவில் இருக்கும் இரண்டொருவர்களுடைய மறுப்புகளோ எதிர்ப்புகளோ கண்டனங்களோ கொண்ட கட்டுரைகளும் முடிவு பெற்று வெளியாகி விட்டால் பிறகு ஒரே தடவையில் எழுதிவிடலாமென்பதே நமது கருத்தாகும்.

 ஆனால் ஒரு விஷயம் இப்போதே எழுத வேண்டியது அவசரமென தோன்றுகின்றது. அதாவது திரு. கிரித்திவாசய்யர் ரயில் சார்ஜுக்கு பணம் நம்மிடம் வாங்கவில்லையென்று எழுதியிருப்பதில் அவர் அந்தப்படி எழுதுவதற்கு நாம் ஆச்சரியப்பட வில்லையானாலும் பொதுஜனங்கள் உண்மையை அறியவேண்டி மறுபடியும் ஒரு தடவை நாம் “கிருத்திவாசய்யருக்கு ரயில் சார்ஜ் கொடுத்தது உண்டு” என்று எழுதுகின்றோம்.

அதுவும் நாம் சென்னையில் குடி அரசு ஆபீசின் முன் கொட்டியிருந்த மணல் மேட்டில் இருக்கும்போது இந்த கேசு விசாரணைக்கு மிகச் சமீபத்த முந்திய நாள் கேசு வாய்தாவைச் சொல்லி ஈரோட்டுக்கு போக வேண்டுமென்று கேட்டு நாம் 5 ரூ. நோட்டாக ஒன்று எடுத்துக் கொடுத்தோம் என்று உறுதியாகச் சொல்லுகின்றோம்.

 இந்த தடவையும் அவர் மறுப்பாரானால் அது சமயம் திரு. கிருத்திவாசய்யருடன் கூட வந்த மற்றொரு அய்யருடையவும் அவர் கேட்டு வாங்கிக் கொண்டு போகும்போது நம்முடன் கூட இருந்த அய்யர் அல்லாதவர்களுடையவும் பெயர்களையும் வெளிப்படுத்துகின்றோம். அப்பொழுதும் இல்லையென்று சொல்லுவாரானால் பிறகு பொது ஜனங்கள் எதை வேண்டுமானாலும் நம்ப உரிமையுடையவர்களாவார்கள்.

தவிர இது சம்பந்தமாக சில நிரூபங்களும் சில கண்டனக் கூட்ட நடவடிக்கைகளும் பிரசுரிக்க சற்று தாமதமேற்படுவதற்கு ஆக நேயர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகின்றோம்.

சிறப்பாக திருச்சி, மதுரை நிரூபர்களுக்கு இவ்விஷயத்தில் நன்றி செலுத்துகிறோமாயினும் அவர்களின் ஆத்திரத்தின் உணர்ச்சியில் காட்டியிருக்கும் மிதமிஞ்சிய வேகத்தை ஆதரிக்க முடியாததற்கு வருந்துகின்றோம்.

(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.02.1930)

Read 27 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.