மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம் - 'எதிர் பிரசாரத்தினால்' ஏற்பட்ட நன்மைகள் (குடி அரசு - சொற்பொழிவு - 09.02.1930)

Rate this item
(0 votes)

கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் வரவேற்பு

சுவாமி விவேகானந்தாவின் பெயரினால் சென்னையில் பார்ப்பனர்கள் செய்யும் ஏமாற்றத்தையும் வஞ்சகத்தையும் பற்றியும் ராம கிருஷ்ணா மிஷினில் சேர்ந்திருக்கும் பார்ப்பனர்களில் 100-க்கு 90 பேர் யோக்கிய மற்றவர்கள் என்றும் உதாரணமாக சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா ஹோம் என்கின்ற இடத்தில் நடக்கும் அக்கிரமம் கணக்கு வழக்கில்லையென்றும் அங்கு நடக்கும் பணம் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது பார்ப்பனரல்லாதாருடையதென்றும், வருஷம் 20000, 30000 ஆயிரம் அந்த ஹோமின் பேரில் பார்ப்பனரல்லாதாரிடமிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றதென்றும், இதை அறிந்த தனது நண்பரும் சுயமரியாதை சங்கத் தலை வருமான உயர்திரு டபிள்யூ பி.ஏ. சௌந்திரபாண்டியர் சட்டசபையில் கூட கேள்வி கேட்டு அக்கொள்ளையை நிறுத்த முயற்சித்தார் என்றும், ஆனாலும் அரசாங்கத்தில் முக்கிய உத்தியோகத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் செல்வாக்கால் பார்ப்பனரல்லாத பயங்காளிப் பெரியவர்கள் அவர்களுக்கு அடிமையாகி சிறிதும் சுயமரியாதை உணர்ச்சி இல்லாமல் பொது மக்கள் பணத்தை வசூல் செய்து கொடுக்கின்றார்கள் என்றும், இங்கும் அதுபோல் இருக்கக் கூடாதென்றும் ஆசைப்படுவதாகவும் விவேகாநந்தர் அமெரிக்காவுக்கு இந்து மதப் பிரதிநிதியாய் அனுப்பப்பட்டிருந்தாலும் அவர் உண்மையான பிரதிநிதியாய் இல்லாமல் இந்து மதத்திற்கு ஒரு வக்கீலாய் போய் கேசை ஜெயித்துக் கொண்டு வந்தாரென்றும் ஆகையால் அதனாலேயே இந்து மதம் என்பதற்கு யோக்கியதை வந்து விடாதென்றும் அவர் இந்தியாவையும் இந்துக்களையும் பற்றி இந்தியாவில் பேசி இருப்பதை பாருங்கள் என்றும், பார்ப்பனர்களைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்பதும், வருணாசிரமம் ஜாதி வித்தியாசம் ஆகியவைகளைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்பதையும், இந்து அரசாங்கமாகிய மலையாளத்தைப் பற்றி சொல்லி இருப்பதையும், அவர் விக்கிரகங்களைப் பற்றி சொல்லும் போது அவை பாமர மக்களுக்கு வேண்டி ஏற்பட்டதே ஒழிய மற்றவர்களுக்கு அல்ல என்றுதான் சொன்னாரென்றும், ஆனால் இப்போதைய விக்கிரகங்களை பாமர மக்களுக்கு உபயோகப்படாமலும் கண்ணில் பார்க்கக்கூட இடம் தராமலும் பண்டிதர்கள் பிரமஞானம் உடையவர்கள் கடவுளாலேயே அறிவாளிகளாய் பிறப்பிக்கப்பட்ட மக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களுக்கும் அவர்களது வயிற்றுப் பிழைப்புக்கும் தான் சாதனமாயிருக்கின்ற தென்றும் மற்றும் தென் இந்தியாவுக்கு வேண்டியதெல்லாம் உண்மையான சுயமரியாதையே என்று சொல்லி அவர் இருக்கின்றார் என்றும் மற்றும் இப்படி அவர் சொன்ன அனேக விஷயங்களை புஸ்தகத்தைப் பார்த்தே எடுத்துச் சொல்லி 2 மணி நேரம் கூட்டத்தையே ஆச்சரியப்படும்படி செய்து விட்டார்.

குறிப்பு : 03.01.1930 இல் கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தில் சொற்பொழிவு.

(குடி அரசு - சொற்பொழிவு - 09.02.1930)

Read 15 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.