மேயோ கூற்று மெய்யா- பொய்யா? (குடி அரசு - மதிப்புரை - 22.12.1929)

Rate this item
(0 votes)

கோவை திருவாளர் அ.அய்யாமுத்து அவர்களால் இயற்றப் பெற்ற மேற்கண்ட நூலின் பிரதி ஒன்று வரப் பெற்றோம்.

கன்னி மேயோ கருத்தைப் பற்றியோ, அவர் கூறியது இன்சொல்லா புன்சொல்லா என்பது பற்றியே நமக்கு கவலையில்லை. கூறிய கூற்று மெய்க்கூற்றா பொய்க்கூற்றா என்பதை நாம் அறிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றோம்.

 

சிலர் மேயோ ஆதிக்க வெறி கொண்ட வெள்ளையர்களால் கூலிக்கு வேலை செய்ய வந்த குப்பைக்காரி என்கின்றனர். குப்பைக்காரி என்றால் என்ன? மேயோவின் கூடையில் குப்பை நிறைந்ததா? இல்லையா? குப்பை திரட்ட வந்து வெறுங்கூடையுடன் சென்றாளா? வெறுங்கூடையுடன் சென்றுதான் நிறை கூடையுடன் இந்தியாவிலிருந்து திரும்பி வந்ததாகத் திரித்துக் கூறினளா? என்பன நமது கடா.

இக்கடாவிற்கு, வைக்கம் வீரர், மாசற்ற நெஞ்சுடையார், தூய வாழ்க்கையினர், துகளிலாப் பொது நோக்குடையார், தேசத் தொண்டில் திளைத்த திண்மையினார், அத்தேசத் தொண்டை கதர்தொண்டில் ஈடுபடுத்தித் திகழும் திருவுடையார், திராவிடன், குடியரசு பத்திரிகைகளில் பழந்தமிழ் மக்களிடை பாரறிய மெய்ஞ்ஞானக் கட்டுரைகள் வரைந்த பயிற்சி மிக்கார், கோவை திருவாளர் அ. அய்யாமுத்து அவர்கள் “மேயோ கூற்று மெய்யா- பொய்யா?” என்னும் தலைப்போடு ஒரு நூலை வெளியிட்டு தக்க விடையிறுத்துகின்றார்.

 

இதனைப் படிக்குந்தோறும் இப் பெருந்தகையாரின் மதிநுட்பமும் மனத்திலுதித்த கருத்தை உதித்தவாறு எடுத்தியம்பும் திறனும், நடு நிலைமையும் இனிய செந்தமிழ்ச் சுவையோடு பால், தேன், பழம் கலந்தவாறு இனிப்ப தென்பதில் ஐயமின்று, உண்மையை அறிய அவாக் கொண்டவர்கள் இந்நூலை அவசியம் ஒரு முறையேனும் படித்தல் தகைமையாகும்.

இத்தகைய நூலை வெளியிட்ட அறிஞர்க்கு இத்தமிழுலகம் எஞ்ஞான்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. குமரன் அச்சு நிலையத்தில் அழகு பெறப் பதிப்பிக்கப் பெற்ற இந்நூல் விலை அணா - 0-4-0

(குடி அரசு - மதிப்புரை - 22.12.1929)

 
Read 36 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.