‘சித்தாந்தம்’ ஆசிரியரின் சூன்ய நிலை(குடி அரசு - கட்டுரை - 15.09.1929)

Rate this item
(0 votes)

மணலி விடுதியில் தருமச் சோறு உண்ணும் ஒரு பார்ப்பனரல்லாத மாணவர் குற்றம் செய்ததாகக் கருதி, அத்தகைய குற்றத்திற்குக் கசை கொண்டு தாக்கிய சைவம் பழுத்த ‘சித்தாந்தம்’ ஆசிரியனார் பாலசுப்ரஹ்மண்யம் “சைவக் குறும்பு” என்னும் தலைப்பொடு தம் அழகிய ‘சித்தாந்தம்’ என்னும் மாசிகையில் ஓர் கட்டுரை வரைந்திருக்கின்றார்.

இவ்வாசிரியனார் மரக்கறி தின்று மகாதேவனைத் தினம் இறைஞ்சி நிற்கும் ஓர் சைவம் பழுத்த திருமேனியுடையார். சீவகாருண்ய வள்ளல். பிறரை தன்வழிப்படுத்த அருனெறியில் தண்டனை புரிவதில் சிறிதும் பின்னடையார். சட்டம் கற்றவர்; பி.ஏ.பி.எல்,. பட்டம் பெற்றவர்; மரக்கறி உண்டு உடல் பருத்தவர்; அறச்சாலையை மேல் பார்த்தும், உள்பார்த்தும் வருபவர். இவர் கட்டுரையை ஆராய்வோம்:-

 (1) ‘‘ ‘திராவிடன்’ ‘குடி அரசு’ பத்திரிகைகளில் வெளிவரும்... பொருந்தாமை பொய்மை முதலியவற்றை ஆராய்ந்து நாம் (சித்தாந்தம்) வெளியிடத் தொடங்கிய நாள்தொட்டு நமது பத்திரிகை தமிழ் நாட்டுக்குச் செய்துவரும் பணியைப் போற்றி நூற்றுக்கணக்கான சந்தாதாரர்கள் நமது பத்திரிகையை வாங்கத் தொடங்கி ஆதர வளித்து வருகின்றனர்’’ என வரைகின்றார்.

ஆராச்சியில் வலிமை மிக்க ஆசிரியர் கூற்றை நாம் மேம்போக்காக நோக்குவது நேர்மையல்ல. எனவே, இதனைத் துருவியே ஆராய்வோம்:-

 திராவிடனும், குடிஅரசும், பொருந்தாமையும் பொய்ம்மையும் கூடிய கட்டுரைகளை வெளியிடுகின்றன. இதற்குச் சான்று, இப்பொய்மையின்மையும் பொருந்தாமையின்மையும் தெள்ளத் தெளிய மக்கட்கு விளக்கிக் காட்டும் பேரறிவுறுத்துகின்ற ‘சித்தாந்தம்’ பத்திரிகையை நூற்றுக்கணக்கான சந்தாதாரர்கள் வாங்கி ஆதரிக்கின்றார்கள் என்பதே. நாம் வெளியிடும் கட்டுரைகள் மெய்மையைப் பற்றி நிற்கின்றனவாகவே நாம் இற்றைக்கும் கருதுகின்றோம்.

நமது பொய்யை விளக்கி மெய்யை நிலைநாட்டி அறிவுச் சுடர் கொளுத்தும் ‘சித்தாந்தம்’ பத்திரிகைக்கு எத்தனை சந்தாதாரர்கள் உள்ளனர் என்பதை இவ்வாசிரியர் நமக்கும் பொது சனங்கட்கும் அருள் கூர்ந்து எடுத்துரைத்தல் வேண்டும். செங்கற்பட்டு மகாநாட்டு நிகழ்ச்சியின் பின்னர், இவ்வாசிரியர் கூற்றுப்படி ‘சித்தாந்தம்’ இவ்வாறுமாத காலத்தே குறைந்த தொகையில் 500 சந்தாதாரர்களால் மிகுந்தும் பரவி இயங்குதல் வேண்டும்.

 500 ஏன்? “தன் பத்திரிகைக்கு ஒரு சிறிய நூறு சந்தாதாரர்களாயினும் சேர்ந்திருக்கின்றனரா என்பதை இவ்வாசிரியர், இவர் நாள்தோறும் வணங்கியேத்தும் மகாதேவன் மீது ஆணையிட்டு மெய்ப்பிக்க முன் வருகின்றனரா” என்று கேட்கின்றோம். மேலும் இப்பத்திரிகைக்கு ஒரு தொள்ளாயிரம் சந்தாதாரரும் மொத்தத்தில் உளரோ? யார் பொய்யர்? பொய்ம்மை இருக்கும் இடமும் மெய்ம்மை இருக்கும் இடமும் இவர் கூறும்விடையில் இனிது புலனாகும்.

(2) நாஸ்திகத்தையும் உண்மைச் சைவத்தையும் பரப்பு வதற்காக ஏனைய உயரிய பத்திரிகைகளோடும் ஆசிரியன் மாரோடும் நாம் ஒத்துழைக்கத் தலைப்பட்ட நாள் முதல்... அழுக்காறு உண்டாயிற்று.

நாத்திகத்தையும் உண்மைச் சைவத்தையும் பரப்பும் ஏனைய உயரிய பத்திரிகைகள் யாவை? நாத்திகமும் உண்மைச் சைவமும் ஒன்றே என்று நிலைநாட்ட ‘சித்தாந்தம்’ பேராசிரியர் முன் வந்தமை வியத்தற் பாலதே! இவர் நா, நாவென்று நாத் தடமாறி ‘ஆவை’, ‘நாவாகத்’ தம் பத்திரிகையில் வெளியிட இவர் நாத்திகத் தியானத் தடிப்பு எத்துணை நிறை பெற்று நிற்கின்றது என்பதை இவர் நம்மைத் தூற்றப்புறப்பட்ட கட்டுரையே நன்கெடுத்துக் காட்டுகின்றது.

 குடியன் மயக்கெய்துவான்; வெறியன் மயக்கெய்துவான்; ‘சைவத்’ திருமேனிகள் இவ்வாறு மயங்கித் திரிவடைதல் ஏனைய உயரிய பத்திரிகைகள் தம் வாசனையின் பலன் போலும்! அற்றன்று; சினம் பொங்கி அதன் வயப்பட்டு நாம் கருத்தழிந்தோம் என்பரேல், இத்தகைய சீர் குலைவை இவரது மகாதேவ வழிபாடு காப்பாற்றவில்லையே என்று நாம் வருந்துகின்றோம்.

திராவிடனையும், குடியரசையும் ஆராய்ச்சியென்ற ஓர் செயலின் பேரில் படித்துப் பொருமை படைத்துத் தட்டழிந்த இவரை நாம் என்னென்போம்? அழகிய, அரிய அறிவின் வினை முற்றிய ஆராய்ச்சிக்கு நாத்திகத்தையும் உண்மைச் சைவத்தையும் பரப்ப முற்பட்ட இவ்வாசிரியர் குழு இத்தமிணாடு எங்கணும் மலிக!

(3) “குடி அரசு” “திராவிடன்” பத்திரிகைகளைப் படிப்பதின் பயனாக அவ்விடுதியில் உள்ள பார்ப்பனரல்லாத மாணவர்கள் பார்ப்பன மாணவர்களைப் பெரிதும் உபத்திரவப்படுத்துகின்றார்கள்.

குடியரசும், திராவிடனும் பார்ப்பன மாணவர்கள் மீது பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குப் பகைமை விளைக்கின்றது என்பதாம். இவ்விடுதியிலுள்ள பார்ப்பனரல்லாத மாணவர்கள் எல்லோருமாகவே இத்தகைய பகைமைப் பயன் நம் பத்திரிகைகளைப் படித்துக் காண்கின்றனராம்! இவ்வாசிரியர் சில மாணவர் கள் என்றாயினும் பல மாணவர்கள் என்றாயினும் கூறாது விடுதியிலுள்ள பார்ப்பனரல்லாத மாணவர்கள் (அனைவருமே) என்றார்.

 அவ்விடுதியில் பார்ப்பனரல்லாத இம்மேற்பார்வையாளரும் பார்ப்பனரல்லாத மாணவர்களும் தாம் பார்ப்பனரல்லாதார். இவ்வகுப்பு மாணவர் அனைவரும் குடியரசுத் திராவிடனால் வேறுபட்டனர் என்பது முழுப் பொய்யாக இருத்தல் வேண்டும். இல்லையேல் நமது பத்திரிகைகளின் சிறப்பை இவர் தன்னறிவின்றியே ஒப்புக் கொள்ளுகின்றார்.

இவ்விடுதியில் 40 பார்ப்பனரல்லாத மாணவர்கள் இருப்ப ரேல் அவர்கள் அனைவரும் ஒருங்கே குடியரசு திராவிடன் வயப்பட்டனர் எனில் யாம் எய்தும் உவகை அம்மம்ம! மிகப் பெரிதே!! இவ்வுண்மை அறிவுடையவர் யாவர் என்பதை விளக்கிக்காட்டி குடியரசு, திராவிடனின் நற்பணியை நிலைநாட்டிப் போதருகின்றது. பகைமை என்பது தீயதன்றோ எனின்? நாஸ்திகம் பழுத்த சைவப் பேராசிரியர் கண்களில் உரிமை நாடல் பகைமையாகத் தோற்றுகின்றது போலும்!

(4) “பார்ப்பன மாணவர்களையும் பார்ப்பனரல்லாத மாணவர்களையும் நாம் தண்டித்த துண்டு” என்றனர்.

குறும்புகள் செய்தமைக்கு ‘டசன்’ கணக்கில் பிரம்பு கொண்டிருக்கும் இக்கருணாகரவள்ளல், திருஞான சம்பந்தன் கழுவேற்றிய செயலை நம் மனத்தோற்றத்திற்கு முன் கொண்டு வருகின்றனரேயன்றி பிறிதொன்றில்லை. சமணரையும், உலகையும், நல்வழிப்படுத்த முன்வந்த அஞ் ஞானசம்பந்தனை உபாசனாமூர்த்தியாகக் கொண்ட இவர் மணலி விடுதியில் தம் ஆசிரியரைப் பின்பற்றிச் செல்லத் துணிந்திருக்கின்றார். இதன் கொடுமை விலங்குகளிடத்தும் காண்பதரிது என்று நாம் முன்னரேயே விளக்கிக் கூறியுள்ளோம். எனினும் சித்தாந்தத்தின் போக்கைப்பற்றி மீண்டும் கூர்ந்து நோக்குதல் ஈண்டு கடனாயின்றது.

(5) “இத்தகைய பொய்ப் பிரசாரப் பலனாற்றான் சுயமரியாதைத் தலைவர் பிறந்து வளர்ந்த ஈரோட்டை விட்டு ‘தரும மிகு’ சென்னையில் தஞ்சம் புகுந்தனர் போலும்! தமிழ் நாடெங்கணும் பேசித் திரிந்தவர் ஒரு மூலையில் உட்கார நேர்ந்தது போலும்!” என்றனர்.

‘தருமமிகு சென்னை’ என்னும் பதங்களை எடுத்தாள இவர் நெஞ்சும் துணிவு கொண்டதே; மண்கட்டி ஒன்று சிதைந்தமை கேட்டு மூர்ச்சையடைவான் ஒருவன் எவனோ அவனே சீவகாருண்யம் பழுத்தான் என்று கூறிய சீவகாருண்ய வள்ளல் எச்சிலையும் நுகர அருகராக சித்தாந்த ஆசிரியர் வடலூர் இராமலிங்க சுவாமிகளின் பதப்பிரயோகத்தைக் கொண்டு தம் கட்டுரைக்கு வலிமை ஊட்டத் துணிந்தார். வடலூரார் தன் இளம்பிராயத்தே, மாணவர்கட்குக் கல்வி பயிற்றிய காலத்து அவர்களைச் சிலகால் அடித்தமைப்பற்றிப் பிற்காலத்தே அழுதழுது கண்ணீர் உகுத்திருக்கின்றார்.

சித்தாந்த ஆசிரியர் தனது தடித்த உடலையும் தடித்த மனதையுங்கொண்டு சிறு பிள்ளைகளை சோற்றுக்குத் தஞ்சம் என்று அடைக்கலம் புகுந்த பிள்ளைகளை; அபயம் கூறாது கசை கொண்டு தாக்கி ‘ஏம’ தண்டனை அளிக்கின்றார். மேற்புல்லைக்கடிக்கும் இவரது ஆராய்ச்சியும் மேற்கோளும் இனிதினிதே!

நிற்க, ஈரோடு என்ற பெரும் பட்டினத்தைவிட்டு சுயமரியாதைத் தலைவர் சென்னையெனும் ஓர் மூலையில் ஏன் வந்தார் என்பது கடா. இவர் பூகோள சாத்திரத்தையும் சிறிது பயிலுதல் வேண்டும். இத்தகைய மதியிலார்க்கு மதி கொடுக்கும் பொருட்டே சுயமரியாதைத் தலைவர் தமிணாட்டுத் தலைமைப் பட்டினத்தில் வீற்றிருந்து சுயமரியாதை என்னும் சமரச சன்மார்க்க தனிச் செங்கோல் ஒச்சுகின்றார். வேற்றுமைத் துன்மார்க்க சித்தாந்திகள் நடுக்குறின் நாம் என்ன செய்வோம்?

மேலும் மந்திரிகளும் மதிக்கும் பெருமைத்து நம் பத்திரிகை என்பதை இவர் ஒப்புக்கொள்கின்றார். நாமும் உவக்கின்றோம்.

( 6 ) “மாமிசத்தை உண்டு மந்திரி வழிபாடு செய்யும் சுயமரியாதை வீரர்கள் மரக்கறி உண்டு மகாதேவனை வழிபடும் சைவர்கட்கு (?) இரக்க மில்லை என்பது எள்ளிநகையாடுதற்கே உரியது” என்றார் :-

நகையாடி இவரும் ஓர் திரிபுரம் எரிக்கும் விரிசடைக் கடவுளாயின் ஆகுக. ஆனால் மாமிசத்தை உண்டு மந்திரி வழிபாடு செய்வதும் மரக்கறி உண்டு மகாதேவ பூசை செய்வதும் என்பன பற்றி சிறிது நோக்குவாம். புலால் உணவு மேன்மையைப் பற்றியும், மரக்கறி உணவு மேன்மையைப் பற்றியும், நாம் இக்கட்டுரையில் சீர் தூக்கிப் பார்க்கப் போவதில்லை என்றாலும் இச் ‘சித்தாந்தம்’ பத்திரிகை வெளியிடப்படும் கடிதங்களை கண்டுபிடித்தவர்; அதற்குரியமை, அச்சியந்திரம் முதலியவைகளைக் கண்டுபிடித்தவர்; இவருக்கு பி.ஏ.பி.ஏல். பட்டமளித்தவர் அனைவரும் புலால் உண்டவர்களே! மேலும் ஆகாய விமானம், ஆகாயத் தந்தி, ஆகாய ரயில் முதலியனவும்; உலகத்தில் உள்ள பல அரிய விஞ்ஞான உண்மைகள் பலவும் புலால் உண்பவர்களாலேயே கண்டுபிடிக்கப் பெற்று நிற்கின்றன. சுவாமி விவேகாநந்தர், ராமகிருஷ்ணர் முதலியவர்களெல்லாம் புலால் புசித்திருக்கின்றனர்.

இவர் வணங்கும் மகாதேவன் புசித்த புலால் மலையனவெனப் புராணங்கள் கூறுகின்றன. எனவே புலால் உண்பது இழுக்கென்பது இவர் வாய்ப்பிறப்பில் அறிவுறுத்தும் தரத்தன்று. பன்றி ஓர் மரக்கறி, மரக்கறியிலும் உயர்ந்ததென்னக் கருதப் பெற்ற கந்த மூலங்கள் உண்டு. உயிர் வாழ்வது. மரக்கறி உண்ணுவதால், புலாலையே புசிக்கும் சிங்கம், புலி முதலிய அழகிய, வீரம் வாய்ந்த, பெருந்தன்மை உள்ள விலங்கினங்களைப் பார்க்கிலும் பன்றி உயர்வுபடுவதின்றே! இப்புலால் புசிக்காத திருவிலாச் சுப்ரஹ்மண்யம் இம்மெய்ம்மையை ஊன்றிச் சிந்திப்பாராக. பன்றியும் திருவிலாச் சுப்ரஹ்மண்யம் போன்ற ஓர் சித்தாந்த சைவப் பெரியார் போலும்! இவரை நாம் உண்மைச் சைவர் என்றே ஒப்புக் கொள்ளவில்லை.

மேலும் இம்மாமிச பிண்டம் மாமிசத்தை உண்ணாமல் மாமிசமே உணவாய் விலங்குகளிலும் கொடுமையைச் செய்யத் துணியுமேல், புலால் உண்ணாமைக்குச் சிறப்பு உளதேல், அச்சிறப்பு இவர் ஓம்புதலினாலேயே இவர் மட்டில் சீர்குலைகின்றது என்பது திண்ணம். மகாதேவனை வழிபட்டு, நாம் இக்கட்டுரையில் விளக்கிய அளவில் இவர் அறிவிழந்து, ஆராய்ச்சி இழந்து, உண்மை இழந்து, பொறுமை இழந்து நிற்பாராயின், மகாதேவ வழிப்பாட்டினும் மந்திரி (மதியின் மிக்கார்) வழிபாடு பன்மடங்கு சிறப்புடையதன்றே!

மகாதேவனை வழிபட்டு வழிபட்டு சூன்ய நிலையடைந்தாராயின், இனி அறிவுடைமையில் உயர்வு பொருந்திய குடியரசு, திராவிடனின் வளர்ச்சியில் அழுக்காறு கொண்டு குடிவெறியில் புலம்புவது போல் ஓலமிடுவது சித்தாந் தத்தின் சீரிய செயல் போலும்!

நிற்க. இவர் சுயமரியாதை இயக்கம் முக்காற்பங்கு ஒடுங்கிவிட்டது என்று கூறுகின்றார்; எஞ்சிய காற்பங்கையும் துகைக்கக் கங்கணம் புனைய சுற்றம் சேர்க்கின்றார். இச்சுயமரியாதை இயக்கம் சூரியமண்டலத்தை மட்டும் எட்ட வில்லை; இவரது இச்சித்தாந்தப் பேராசிரியரது மதி மண்டலத்தையும் (அறிவு மண்டலம்) எட்டி, அங்கு கேவல இருளே காணப்படுவதால் அம்மண்டலத் தையும் துளைத்துச் சென்று அங்கும் அறிவுச்சுடர் கொளுத்துகின்றது! கொளுத்துகின்றது!! கொளுத்துகின்றது!!! அக்கொளுத்துதலில் இவர் அறியாமையும், போலிச் சைவமும் ‘பிரப்பம் பழம்’ பூசையால் இவர் ஆற்றும் மகாலிங்க வழிபாடும் கடிதில் அழியும்! அழியும்!! அழியும்!!!

இவர் கட்டுரையின் பொருந்தாக் கூற்றை அறிவிலாக் கூற்றை நாம் மேற்கொண்டும் விளக்க விரிவஞ்சி விடுக்கின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 15.09.1929)

Read 40 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.