திருவாங்கூரில் கோஷா விலக்கம் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.09.1929)

Rate this item
(0 votes)

வைதீகச் செருக்கும். பார்ப்பனீயக் கொடுமையும் இராமராச்சிய பரிபாலனமும் தலைவிரித்தாடும் திருவாங்கூரில், முதற்றரப் பார்ப்பனர்களாகிய நம்பூதிரிகளின் பெண்டிர் படுதாவைக் கடந்து வெளியேறி இருக்கின்றனர்.

படுதா என்பது ஒரு சமூகத்தின் மடமைக்கும் அம் மடமைக்கு அடிப்படையாய் உள்ள மதக் கோட்பாடுகள், சமூகக் கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள் இவைகளின் அறிகுறியாய் நிலவுகின்றது.

 

ஆடு மாடுகளும் வெளிச் செல்லும் உரிமை பெற்றிருக்கையில் மானுடப் பெண்கள் தம் கொழுநர்தம் வீடுகளில் சிறகிலாப் பறவைகளைப்போல் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இதனைக் கடந்து வெளிச் செல்வதென்றால், மடமையே உருவமாக விளங்கும் ஒரு சமூகத்தில் எளியதோர் செயலன்று. நம் இயக்கத்தின் நற்பயனாக நம் தலைவர் அடிக்கடி அந்நாட்டுக்குச் சென்று சமத்துவக் கொடியை பறக்கச் செய்துவரும் அரும்பெரும் அறிவுரை மாரிகளின் பயனாக நம்பூதிரிப் பெண்களின் சமூகத்தில் சுயேச்சையும், சமத்துவமும் காட்டுத் தீப்போல் பற்றிக் கொண்டது.

நம்மியக்கக் கதிரொளியால் அறியாமைப்பனி அக்கணமே அகன்று வருகின்றது. ஏனைப் பெண்டிரும் இதனைத் தமக்கோர் வழி காட்டி என மதித்து முன்வருமாறும், ஆடவர்கள் தடைபுரியினும், அதற்கிடம் கொடாமல் தமது சுயமரியாதையை நிலைநாட்டுமாறும் நாம் மகிழ்வுடன் எதிர்பார்க்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.09.1929)

Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.