ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு. குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.07.1929

Rate this item
(0 votes)

சென்னை நேபியர் பார்க்கில் (தில்லை வனத்தில்) ஆதி திராவிட சுயமரியாதை மகாநாடு கூடிய விபரம் மற்ற பக்கத்தில் வெளியாயிருக்கின்றது. அதில் ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதாவது:-

“ஆறரைக் கோடி மக்கள் அடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதன் நிமித்தம் தீண்டப்படாதவர்களாயிருப்பதாலும், அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும் இனி அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியாமலிருக்கும் படியும், சர்க்கார் தஸ்தாவேஜுகளிலும் எங்களை இந்துக்கள் என்கின்ற பதவியிலிருந்து நீக்கிவிடும்படிக்கும் செய்யும்படி சர்க்காரையும், சட்டசபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது.”
என்பதாக தீர்மானித்திருக்கின்றது.

 

திருவாங்கூர் ராஜ்யத்திலும் சுமார் 3 வருடங்களுக்கு முன்பாக முதுகுளத்தூர் என்கின்ற இடத்தில் கூடிய ஒரு எஸ்.என்.டி.பி. யோகத்தில் அதாவது ஈழவ சமுதாய மகாநாட்டில் இதை அநுசரித்து ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது “இந்து மதத்தில் மனித சுதந்திரம் இல்லாததால் இம்மதத்தை விட்டு வேறு மதத்திற்கு போய்விட வேண்டும்” என்பதாகும்.

இத்தீர்மானம் ஒன்று வரப்போவதாகத் தெரிந்து சில கிறிஸ்தவப் பாதிரிகளும், ஆரிய சமாஜிகளும், புத்தமத பிரமுகர்களும் அக்கூட்டத்திற்கு வந்திருந்து தங்கள் தங்கள் மதத்தின் பெருமையை எடுத்துச் சொன்னார்கள்.

 

திரு. ஈ.வெ.ராமசாமியும், அம்மகாநாட்டிற்கு போயிருந்தார். அந்த சமயத்தில் திரு.ராமசாமி அத்தீர்மானத்தை ஆதரித்துப் பேசியபோது இதுசமயம் வேறு மதத்திற்குப் போக வேண்டியதில்லை என்றும், இனியும் சிறிது காலம் பார்க்கலாம் என்றும், அப்படி மதமாறுவதாயிருந்தால் மகமதிய மதத்திற்குப் போவது நல்லதென்றும், ஏனெனில், மதத்தின் பேரால் மக்கள் இப்போது மகமதிய மதத்தைக் கண்டால்தான் பயப்படுகின்றார்கள் என்றும், அதில் பெண்கள் விஷயம் தவிர மற்ற வழிகளில் உண்மையான சர்வ சுதந்திரமும் இருக்கின்றதென்றும், நமது நாட்டிலுள்ள கிறிஸ்தவ மதம் வர வர பார்ப்பன மதம் மாதிரியாகி வருகின்றதென்றும், அதிலும் ஜாதி உயர்வு பாராட்டப்படுகின்றதென்றும், ஆரிய சமாஜம் என்பது பார்ப்பன மதத்தின் வேறு ஒரு ரூபமே ஒழிய வேறில்லை என்றும், பௌத்த கொள்கைகள் இப்போதுள்ள மற்றயெல்லா மதங்களின் கொள்கைகளைவிட மேலானது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்றும், ஆனாலும் பார்ப்பன மதத்தை அடக்கி நமது நாட்டிற்கு உண்மையான விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமானால் இது சமயம் மகமதிய மதத்தால் தான் முடியும் என்றும் பேசினார்.

 

பிறகு அவர் சொன்னபடியே. இப்போது மதம் மாற வேண்டிய தில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இப்போது ஆதிதிராவிட மகாநாட்டிலும் சரியாக அதேபோல் இல்லாவிட்டாலும், இந்து மதத்திலிருந்து விலகிக் கொள்ளுவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால் இனிமேல் அவர்கள் என்ன பெயரால் அழைக்கப்படுவது என்று சிலர் கேட்கலாம். ஒரு பெயராலும் அழைக்க வேண்டியதில்லை என்றும், அவசியமானால் இந்தியன் என்று அழைக்கலாம் என்றும் சொல்லுவோம்.

மேலும் சர்க்காரில் குறிக்க ஏதாவது ஒரு பெயர் வேண்டாமா என்றால் அதற்காக இப்போது இந்தியாவில் உள்ள 20 கோடி இந்துக்கள் என்பவர்களை எப்படி அரசியல் முறையில் மகமதியரல்லாதவர்கள் என்று அழைக்கப்படுகின்றதோ அதுபோல் 61/2 கோடி தீண்டப்படாத மக்கள் என்பவர்களை இந்துக்களல்லாதவர்கள் என்று அழைக்கலாம் என்று சொல்லுவோம்.

பார்ப்பனரல்லாதவர்களும், மகமதியரல்லாதவர்களும் இருக்கும் போது இந்துக்களல்லாதவர்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதால் ஒன்றும் முழுகிப் போய்விடாதென்றும், அதனால் எவ்வித இழிவும் ஏற்பட்டு விடாதென்றும் சொல்லுவோம். அப்படி ஒரு இழிவு ஏற்படுவதாயிருந்தாலும் இந்துக்கள் என்கின்ற பெயரை வைத்துக் கொண்டிருப்பதன் மூலம் ஏற்பட்டி ருக்கும் இழிவைவிட அதிகமான இழிவாய் விடாதென்பதே நமது அபிப்பிராயம்.

 

இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லாத நிலையில் அதன் பேரில் மக்கள் அழைக்கப்படுவதை மிகவும் அக்கிரமமான செய்கையாகும். அப்படி இருக்க அதன் பேரால் மனிதனின் உரிமைகளை மறுத்து கோயில், குளம், தெரு, பள்ளிக்கூடம் முதலியவைகளின் உரிமைகளை மறுப்பது எல்லாவற்றையும்விட அக்கிரமமும் அயோக்கியத்தனமுமாகும்.

சாதாரணமாக இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதை பற்றி நாமே தனித்துச் சொல்லுவதாகவும், அதைப் பற்றிய படிப்பு சிறிதும் இல்லை என்றும், அதுவும் பார்ப்பனர்கள் மீதுள்ள துவேஷத்தால் சொல்லுவதாயும் சிலர் சொல்லுகின்றார்கள்.

ஆனால் இப்போது நமது நாட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர் என்றும், சமய ஆராய்ச்சியில் தேர்ந்தவர் என்றும், மிக்க நுண்ணிய அறிவுடையவரென்றும் பல்லோரால் மதிக்கப்படும் உயர் திருவாளர் திருநெல்வேலி கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல்., அவர்கள் சுமார் 7, 8 வருடங்களுக்கு முன் செந்தமிழ்ச்செல்வி என்னும் புத்தகத்தில் எழுதி இருப்பதை இங்கு அப்படியே எழுதுகின்றோம்.

“முதல் முதல் மக்கள் உள்ளத்தே பதிக்க வேண்டியது யாதெனில் இந்து மதம் என்ற ஒரு சமயம் உண்மையில் கிடையாது என்பதும் இந்துமதம் என்பது இந்திய நாட்டிலுள்ள மக்களின் சமயம் என்று கொள்ளப்படும் சிந்து நதிக்கரையில் உள்ளவர்களைக் குறிக்கும் ஹிந்து என்ற பாரசீக சொல்லை கிரேக்கர் “இந்து” என வழங்க அவர்களை பின்பற்றி மேலை தேசத்தார் யாவரும் இந்நாட்டிலுள் ளாரை இந்துக்கள் எனவும் இந்நாட்டை இந்தியா எனவும் வழங்கலாயினர். இந்து என்ற சொல் இப்பொருளில் ஆரியம், தமிழ் என பண்டைய இரு மொழி நூல்களிலும் கிடையாது.

 

இந்நாட்டிலே சமயங்களைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள் தங்கள் மதத்தை இந்துமதம் என்று கூறுவார்கள்.... ஐரோப்பியம், அமெரிக்கம், ஆங்கிலம் என்ற சொற்கள் வாயிலாக அன்னோரது சொற்களும் நாகரிகங்களும் குறிக்கப்படுவதேயல்லாது சமயம் குறிக்கப்படாமை போல இந்து என்ற சொல்லும் இமயம் முதல் குமரி வரையிலுள்ள மக்களின் நாகரிகத்தைக் குறிப்பதேயன்றி சமயத்தைக் குறிப்பதன்று.

இக்கருத்தை சுவாமி விவேகானந்தரும் தமது சொற்பொழிவு பலவற்றில் சுட்டியுள்ளார்..... ஒரு சமயத்திற்குப் பெயர் அதன் கடவுளை வைத்தாதல், தலைமை ஆசிரியரை வைத்தாதல், அருள் நூலை வைத்ததால் எழுதுவது முறை..... கிறித்து மதமும் மகம்மதிய மதமும் தங்கள் தலைவரது பெயரைத் தமக்குப் பெயராகக் கொண்டுள்ளன. அவ்வாறே புத்த மதமும் ஆருகதமுமாம். ஆனால் ‘இந்து’ என்ற சொல்லோ சமயக்கருத்து யாதொன்றையும் குறித்தில்லை.”

இக்குறிப்பில் திரு. பிள்ளை அவர்கள் சுவாமி விவேகாநந்தரும் இதே அபிப்பிராயம் கொண்டதாகக் கூறி இருக்கின்றார். எனவே இப்படி ஒரு அர்த்தமே இல்லாத வார்த்தையின் பேரால் மதம் என்று ஒன்றைக் கற்பித்துக் கொண்டு சமயத்திற்கேற்ற படியெல்லாம் தங்கள் தங்கள் சுயநலத்திற்கேற்றபடியெல்லாம் கொள்கைகளைச் சொல்லிக்கொண்டு 20 கோடி மக்களையும், பல வளப்பமுள்ள ஒரு பெரிய தேசத்தையும் பாழாக்கி வருவதை இனியும் எத்தனை காலத்திற்கு மக்கள் பொறுத்துக் கொண்டிருப்பது என்பது விளங்கவில்லை.

இதைப்பற்றி மற்றொரு சமயம் டாக்டர் எஸ். சுப்பிரமணிய அய்யரான ஒரு பார்ப்பனர் அவர்களை “காமன்வீல்” என்ற பத்திரிகையில் எழுதி இருப்பதாவது :-

“இந்துக்களின் தற்கால நிலைமையைக் கவனித்துப் பார்த்தால் தாறுமாறாக சீர்குலைந்து அலங்கோலப்பட்டு இடிந்து பாழாகக் கிடக்கும் இந்து மதம் என்னும் பழைய கோட்டை அங்கே சிறிது இங்கே சிறிதாக எவ்வாறு ஒழுங்குபடுத்தி முட்டுக் கொடுத்து பழுது பார்த்தாலும் பயன்படாது. தயவு தாட்சண்ணியமின்றி வெட்டித்தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதி அடிப்படைகளின் மீது நமது தற்கால அவசியத்திற்கும் உபயோகத்திற்கும் ஏற்றதாகச் சாதாரணமான புதுக் கட்டிடம் ஒன்று கட்டுவதே உத்தமம் என்று தோன்றுகின்றது” என்று எழுதி இருக்கின்றார்.

இன்னும் அநேக பெரியோர்களும், ஆராய்ச்சியாளர்களும் இதே அபிப்பிராயம் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் குழந்தை மணத்தைத் தடுக்கவும் மக்கள் தெருவில் நடக்கவும், சாமிகளின் பேரால் கோயில்களில் நடக்கும் விபசாரித்தனத்தைத் தடுக்கவும், சிறு குழந்தை களைப் படுக்கை அறையில் தள்ளுவதை ஒழிக்கவும் செய்யப்படும் முயற்சிகளை இம்மாதிரி ஒரு பொய் மதம் தடுப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் எந்த விதத்தில் மானமும், வீரமும், யோக்கியமும் உடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்.

எனவே, ஆதி திராவிட மக்கள் தங்களை எப்படி இந்துக்கள் என்கின்ற பதிப்பில் பதியக்கூடாது என்கின்றார்களோ அதுபோலவே நாமும் சொல்ல வேண்டியவர்களாயிருக்கின்றோம். ஏனெனில் இந்துக்கள் என்கின்ற பதிப்பில் நம்மை பதிந்து கொள்ள நாம் சம்மதிப்பதனால் நமக்கு ஆதிதிராவிடர்களை விட கீழான நிலையான “சூத்திரன்” என்கின்ற பதவிதான் கிடைக்கின்றது.

அதை நீக்கிக் கொள்ள இதுவரை எந்த சீர்திருத்தக்காரரோ, சட்டசபை பிரதிநிதியோ, வேறு எந்த சமூகத் தலைவரோ இதுவரை முயற்சித்ததாகத் தெரியவில்லை. “ஆஸ்திகம் போச்சு” “கடவுள் போச்சு” “மதம் போச்சு” “சமயம் போச்சு” “புராணம் போச்சு” “கலை போச்சு” என்று கூப்பாடு போட்டு கூலிபெற நமது நாட்டில் ஆள்கள் மலிந்து கிடக்கின்றதேயல்லாமல் மானம் போச்சு, மனித உரிமை போச்சு, மிருகத்திலும் கீழாச்சு என்று சொல்லி மனிதத் தன்மைபெற யாரையும் காணோம். எனவே நாமும் ஆதிதிராவிட சகோதரர்கள் போலவே நம்மையும் இந்து என்னும் தலையில் இருந்து பிரித்துவிடு என்று கேட்கும் நாள் சீக்கிரத்தில் வரும் என்றே கருதுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.07.1929)

Read 43 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.